நான் அப்பா - அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷம் கழிச்சுப் பொறந்தேன். அது வரைக்கும் அவங்க ஏறாத கோயில் இல்லை, இறங்காத குளம் இல்லை. முதல்ல, 'என்னடா குழந்தை இல்லையே?'ன்னு வருத்தப்பட்டு இருப்பாங்க. அப்பால நான் பொறந்து பண்ணுன அழிச்சாட்டியம் பார்த்து, 'கடவுளுக்குக் கருணையே இல்லையா... இப்படி ஒரு அராத்தைக் கொடுத்துருச்சே!'ன்னு புலம்பி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
கூடப் பிறந்தவங்க யாருமே இல்லாததால, தனி ஆளா நின்னு கலாய்ச்சுக் கலாய்ச்சுக் கபடி விளையாடுவேனாம். அப்பா கார்பென்ட்டரா இருந்து, பில்டிங் கான்ட்ராக்டரா மாறினவர். அவர்கிட்டே 25 பசங்க வரைக்கும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. இத்தனூண்டா இடுப்புக்குக் கீழே நின்னுட்டு, அத்தனை பேரையும் கலாய்ச்சுட்டு இருப்பேனாம். 'இதுக்கு வயசுக்குத் தகுந்த சகவாசம் இருக்கா?'ன்னு அப்ப இருந்தே அப்பா ஒரே புலம்பல்ஸ்தான்.
இந்த சொப்பு விளையாடுறது, கோலிக்குண்டு அடிக்கிறது, காத்தாடி விடுறதுல்லாம் நம்ம லைப்ரரி, ஹிஸ்டரி எதுலயும் கிடையாது பாஸ். ஒன் அண்ட் ஒன்லி விளையாட்டு... கலாய்ச்சுக் கலாய்ச்சு கவுன்ட்டர் கொடுக்குறதுதான். எதுனா சாமான் வாங்க என்னைக் கடைக்கு அனுப்பணும்னா, எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு கண்ணாமுழி பிதுங்கிப் போயிடும். 'பட்டாணி வாங்கிட்டு வாடா'ன்னு சொன்னா, 'பட்டாணி இல்லைன்னா?'ன்னு எதிர்க் கேள்வி கேட்பேன்.
'சரி, வேர்க்கடலை வாங்கிட்டு வா...' 'வேர்க்கடலையும் இல்லைன்னா?' 'அப்ப உப்புக்கடலை வாங்கியா...' 'உப்புக்கடலையும் இல்லைன்னா?' - இப்படி நான் சரமாரியா கேக்குற கொலவெறி கொஸ்டீன்ஸ்ல காண்டாகி, 'எதுனா துன்றதுக்கு வாங்கிட்டு வாடா'ன்னுவாங்க. 'கடையே இல்லைன்னா?'ன்னு நான் கடைசியாக் கேட்பேன் பாருங்க ஒரு கேள்வி... பொடனியில பொக்ரான் அணுகுண்டு கணக்கா நாலு பூசை போடுவாங்க. அதையும் சிரிச்சே சமாளிச்சுட்டு வெளியே வேற யாரையாவது கலாய்க்கக் கிளம்பிருவேன்!
விவரம் புரியற வரைக்கும் சின்ன வயசுல பொம்பளைப் பசங்க, ஆம்பளைப் பசங்கலாம் சேர்ந்துதானே சுச்சா, கக்காலாம் போவோம்! அப்போ ஒரு பொம்பளைப் புள்ளைக்கு அஞ்சு வயசாயிடுச்சு. அதனால அது எங்ககூட வர்றதை நிறுத்திடுச்சு! அதென்ன ஐ.நா சபை அவசர காலக் கூட்டமா... வரலைன்னா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே! ஆனா, என் சுழி விடலையே. ஒருநாள் ரோட்டுல அவங்க அம்மாகூட அந்தப் பொண்ணு நடந்து போய்ட்டு இருந்தது. நான் விடுவிடுன்னு பக்கத்துல போய், 'நீ இப்போ முன்ன மாதிரி இல்லை. இப்போலாம் ஏன் எங்ககூட நீ சுச்சா, கக்கா போக வர்றதில்லை'ன்னு கேட்டு, ஒரே கலவரம் பண்ணிட்டேன். அவங்க அம்மா எங்க வூட்டுல வந்து மானாவாரியாத் திட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் அந்தப் பொண்ணு வளந்து, கல்யாணம் முடிச்சு, அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்கு வந்தப்போ, 'இந்தப் பொண்ணைத்தான் நீ டாய்லெட்டுக்குக் கூப்பிட்டு டபாய்ச்சே'னு அம்மா சிரிக்கிறாங்க. எனக்கு உள்ளுக்குள்ளே கிடுகிடுங்குது. 'ஏம்மா, உனக்கு எந்த நேரத்துல எதை ஞாபகப்படுத்துறதுன்னு வெவஸ்தையே இல்லையா?'ன்னு அம்மாவைத் திட்டி, ஒரு மாதிரி சமாளிச்சேன். ஆனா, அப்போ 'ஏன்டா சந்தானம்... பை பர்த் நீ நல்லவன்தானேடா! அப்புறம் ஏன் அகராதியாப் போயிட்டே?'னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டது. அதுக்கு இன்னும் பதில் கிடைக்கலை!
எங்க வீட்டுலதான் பொம்பளைப் பசங்களே கிடையாதுல்ல.
|