நான் - ஒரு தடவைக்கு இரு தடவை, அதைக் கேட்டேன்; அதில் பாசுரங்கள் பற்றியெல்லாம் வருகிறது; நல்ல ஆழமான கவிதை! 'ப்ரமாதம்; பிச்சு உதறிப்புட்டே...' என்று பாராட்டினேன்.
'அப்பா! உங்க கோபத்திலிருந்து தப்பிச்சேன்!' என்று பெருமூச்சுவிட்டார், அந்த நடிகர்!
'என்ன இது! எல்லாரும் என்னைக் கோபக் காரன் என்கிறார்களே!' என்று யோசித்தேன். உடனே கோபம் வந்தது - எனக்கு என் மீது!
'ஆறுவது சினம்!'
'ரௌத்திரம் பழகு!'
முன்னது - அவ்வை சொன்னது;
பின்னது - ஆண் அவ்வை சொன்னது!
எதைத் தழுவ?
எதைத் தவிர்க்க?
HYPER TENSION; PEPTIC ULCER; NEUROTIC DISORDER; இத்யாதி இத்யாதி...
சினத்தால் வரும் சீக்குகள் எனச் செப்புகிறார். என் DAUGHTER LIKE DOCTOR திருமதி ஹேமலதா செந்தில்குமார்!
1966. என் மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன். பிளட் பேங்க்கில் இருந்து, பிளட் வர வேண்டும். கல்யாணி ஆஸ்பத்திரி யில் கனத்த இதயத்தோடு காத்திருக்கிறேன்.
'அன்னமிட்ட கை' படத் தயாரிப்பாளரில் ஒருவரான சிவசாமி அய்யர் போன் செய்கிறார்.
'வாலி சார்! கே.வி.மகாதேவன்; கிருஷ்ணன் நாயர் எல்லாரும் வெயிட்டிங்; ராமாவரத்தில்இருந்து சின்னவரும் புறப்பட்டுவிட்டார். பாட்டு நாளைக்கு ரிக்கார்டிங்; மறுநாளே தேவிகுளம் பீர்மேடு புறப்படுகிறோம்... நீங்க உடனே வந்தாத் தேவலே!'
'என்னால வர முடியாது சார்! மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் நடக்கப்போறது; நான் டென்ஷன்ல இருக்கேன்!' என்றேன்.
உடனே சிவசாமி அய்யர், 'ஆபரேஷன் நீரா பண்ணப்போறீர்?' என்று சற்று நக்கலாகக் கேட்டதும், நான் கோபத்தின் உச்சிக்குப் போனேன்.
'போனைக் கீழே வையுடா; நான் கறி திங்கற பாப்பான்... எங்கிட்ட வெச்சுக்காதே... உன் பாட்டும் வேணாம், ஒரு ம...ம் வேணாம்!' என்று கத்தினேன்!
'சின்னவர் வந்துட்டார்!' என்றார் அவர்.
'நான் சொன்னதை வரிவிடாம - அவர்கிட்ட சொல்லுய்யா! நான், யாரையும் நம்பி - சென்னைக்கு வல்லே!' என்று சீறினேன்.
மறுநாள் என் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போன் செய்து -
'உங்க கோபம் நியாயமானது; அவர் அப்படிப் பேசியது தப்புதான்... ஆனா, எனக்கு உங்க பாட்டு வேணும்... அவசரமில்லே!' என்று சொல்லிவிட்டு -
மாலை கல்யாணி நர்சிங் ஹோமுக்கு வந்து - என் மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு - குழந்தை கையில் ஒரு பவுன் காசைத் திணித்துவிட்டுப் போனார்!
கலைஞர் கதை வசனம்; இராமநாராயணன் படம்; ஏவி.எம்மில் பூஜை. கலைஞர் தலைமை யில் எல்லோரும் பேசினோம்.
'இராமநாராயணன் நூறு படம் எடுத்தவர்; அதில் எழுபது படம் நான் பாட்டு எழுதிஇருக்கிறேன். எல்லாப் படத்திலும் பாம்பு பாடும்; நான் மொத்த நாகத்துக்கும் எழுதிவிட்டேன்; இனி துத்தநாகம்தான் பாக்கி!' என்று பேசினேன்.
அடுத்துப் பேச வந்தவர் - அவரும் பாட்டு எழுதுபவர்தான் - 'நான் துத்தநாகத்துக்குஎல்லாம் பாட்டு எழுத மாட்டேன்!' என்று எகத்தாளமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்!
ஒரு வாரம் கழித்து அந்தப் படத்திற்குப் பாட்டெழுத என் வீட்டுக்கு வந்தார்
திரு. இராமநாராயணன்.
|