10 வருடங்களாக குரூப் டான்ஸர். அம்மா ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். ஒரு சகோதரி டான்ஸராக இருந்தவர். சகோதரர்கள் ஸ்டன்ட்மேன்கள்.
சுந்தரம் மாஸ்டர் ட்ரூப்பில் ரம்லத் ஆடிக்கொண்டு இருந்தபோது, பிரபுதேவா அங்கே உதவியாளர். இருவருக்கும் காதல் முளைத்தது அப்போதுதான். இது எல்லோருக்கும் தெரியும். ஒருநாள் ரம்லத் அந்த ட்ரூப்பில் இருந்து நீக்கப்பட்டார். காரணம், இடைப்பட்ட இரண்டு வருடங்களில் பிரபுதேவா பெரிய ரேஞ்சுக்கு வந்துவிட்டார். அநேகமாக அதெல்லாமே முடிந்த கதை என்று எல்லாரும் மறந்துவிட்டிருக்க... இப்போது திருமணச் செய்தி!
"திருமணம் நடந்தது, பெங்களூரில் அல்ல... சென்னையிலேயேதான்! உதயா, ஜானி, நோபல், சசிரேகா உட்பட சில நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. தகவல் தெரிந்ததும் பதறிப்போய் பிரபுதேவாவை அழைத்து வந்து, பி.வாசுதான் 'பஞ்சாயத்து' நடத்தினார். 'என் மானமே போயிடும். வேணாம்டா..!' என்று கெஞ்சும் நிலைமைக்கு வந்து விட்டார் சுந்தரம். இந்த மாதிரியான சம்பவங்களினால் கொஞ்சம் கலங்கிப்போனார் பிரபுதேவா. 'ஒரு கண்டிஷன்... அண்ணன் கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கறேன்!' இதுதான் பிரபுதேவாவின் நிலை!" - நடந்தது என்ன என்று விசாரிக்கப் போனதில், நாம் சந்தித்தவர்களிடம் இருந்து கிடைத்த விஷயம் இது.
சரி, பிரபுதேவா, ரம்லத் இருவரும் என்ன சொல்கிறார்கள்?
மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங்... எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் வடிவேலுவுடன் இருந்தார் பிரபுதேவா.
நம்மைப் பார்த்ததும் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு, " ஸாரி பாஸ்... பேசுவோம்.ஆனா, இப்போ வேணாம்!" என்று படிகளில் இறங்கி, காரில் ஏறிப் பறந்தார்.
வடபழனியில் ஒரு குறுகலான தெருவில் கூரை வேய்ந்த வீட்டில் வசிக்கும் ரம்லத்தை சந்திக்க முயற்சி செய்தோம். முதல் முறை கதவைச் சாத்திக்கொண்டு விட்டார்கள். அடுத்த முறை, "நான் எதுவும் பேசறதில்லை. இது என்னோட ப்ராப்ளம். ரொம்ப கஷ்டமா இருக்கு. பேட்டி வேணாம்..!" என்று குரல் மட்டும் வந்தது.
மூன்றாவது முறை, ரம்லத் எதிரே வந்தார். மங்களகரமாக புதுப் புடவை உடுத்தி இருந்தவரிடம், "என்ன நடந்ததுன்னு சொல்லவே மாட்டீங்களா...?" என்று கேட்டால், தயக்கமாய் சிரித்தார்.
"பிரபு(தேவா) சார் என்ன சொல்றாரோ, அதை எழுதுங்க. நான் பேசவே மாட்டேன்!" என்று சூயிங் கம்மை மென்று முட்டை விட்டபடி உள்ளே போயேவிட்டார்!
நடந்தது எப்படி... எங்கே என்பதில்தான் சந்தேகமே தவிர, உறுதி குலையாத பிரபுதேவாவின் காதல் புரிகிறது!
"பிரபுதேவா நெஜமாவே அப்படி ஒரு குரூப் டான்ஸரை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணா... அது தப்பே இல்லை. அவரோட இமேஜ் கூடும். ஒரு ஹீரோ சினிமால மட்டுமே பண்ற காரியம் சார் இது! தன் மனசுக்குப் பட்டதை பிரபு பண்ணியிருக்கார்." - இப்படிச் சொல்கிற சில முன்னணி நடிகர்கள், "ஆனா, வளர்ந்துவரும் நேரத்தில் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமோனு தோணுது..." என்றார்கள்.
சில விஷயங்கள் காலம் நேரம் பார்ப்பதில்லை. காத்திருப்பதும் இல்லை. குறிப்பாக... காதல்!
- ரா.கண்ணன்
|