மணிகண்டனின் இருதயத்தில் என்ன கோளாறு என்று விளக்கி னார், டாக்டர் கே.எம்.செரியன்.
"இருதயத்திலிருந்து சுத்தமான ரத்தத்தை உடம்பின் மற்ற பாகங்களுக்குக் கொண்டு போக ஒரு குழாயும், உடம்பு முழுக்க ஓடிய ரத்தத்தை மீண்டும் இருதயத்துக்குக் கொண்டு வர இன்னொரு குழாயும் உண்டு. மணிகண்டன் விஷயத்தில் இந்தக் குழாய்கள் இயற்கைக்கு மாறாக இடம் மாறியிருக்கின்றன. ஆகவே, அவன் உடம்பில் ஓடுகிற ரத்தம் சுத்தப்படுத்தப்படுவதே இல்லை. அவன் உயிர் வாழ்வதே கடினமாகிவிடுகிறது. இடம் மாறிய குழாய்களை மீண்டும் சரியானபடி மாற்றிப் பொருத்தவேண்டும். அதற் குத்தான் இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி!"
மெய்சிலிர்க்க வைத்த வாசகர்கள்..! மணிகண்டனுக்கு... குவிந்தது பணம்!
குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் முதல் அதிக பட்சம் இருபதாயிரம் ரூபாய் வரை, வாசகர்கள் தங்கள் சக்திக்கேற்ப பணம் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்- மணி கண்டனின் இருதய அறுவை சிகிச்சைக்காக.
திடீரென்று எங்கள் பொறுப்பு விசுவரூபமெடுத்தது. எல்லா பணத்தையும் வரவு வைத்து முறைப்படி கணக்குகள் எழுதி, மணிகண்டன் சிகிச்சைக்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்ய, விகடன் அலுவலகத்தில் ஒரு தனி இலாகாவே போடப் பட்டது. வந்த பணத்தோடு, விகடன் அலுவலக ஊழியர்கள் தங்கள் பங்குக்கு 14,000 ரூபாய் சேர்த்தார்கள்.தவிர, பாங்க்குகள், இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்கள் எனப் பல தரப்பிலிருந்தும் மணிகண்டன் பற்றிய கவலை கலந்த அக்கறையான தொடர்ந்த விசாரிப்பு, பண உதவி. இப்படியாக 5.12.88 திங்கட்கிழமை வரையில் வந்து சேர்ந்த பணம் சுமார் இரண்டு லட்சம்!
தொகை பெரியது. பொறுப்பாகவும், பத்திரமாகவும் பணத்தை வைத்திருந்து, அதை மணிகண்டனுக்காகச் செலவிட வேண்டும் என்பதற்காக, விகடன் ஆசிரியர் 'மாஸ்டர் மணிகண்டன் மெயின் டெனன்ஸ் ட்ரஸ்ட்' என்று ஒரு ப்ரைவேட் ட்ரஸ்ட்டையே உரு வாக்கியிருக்கிறார். கூடவே, 'வைத்திய உதவிக்காக விகடன் வாசகர்கள் ட்ரஸ்ட்' (Vikatan Readers Charitable Trust for Medical Aid) என்ற ஒன்றையும் விகடன் ஆசிரியர் தொடங்கியுள் ளார்.
ஆபரேஷன் வெற்றி!
வியாழக்கிழமை (8.12.88)
'இருதய அறுவை சிகிச்சையின் போது மணிகண்டனுக்குத் தேவைப்படும் ரத்தம் முழுக்க நாங்களே தருகிறோம்' என்று சில வாசகர்கள் தயாராக இருந்ததை முன்பு குறிப் பிட்டிருந்தோம். சொன்னபடியே விகடன் வாசகர்கள் மணிகண்டனுக்குத் தேவையான 'பி-பாசிடிவ்' ரத்தம் (பத்து பாட்டில்கள்) கொடுத்து விட்டார்கள். ரத்தம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள், மவுன்ட் ரோடிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.
வெள்ளிக்கிழமை (9.12.88)
மணிகண்டனுக்கு காலை 8 மணிக்கு ஆபரேஷன்!
ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும்போது பி-பாசிடிவ் ரத்தம் உள்ள சிலரைத் தயாராக இருக்கச் சொல்லியிருந்தார் டாக்டர் கே.எம்.செரியன். "ஐயப்ப மலைக்குப் போறேன். தினமும் ஒருவேளைதான் சாப்பிடறேன். அதனால் நான் ரத்தம் கொடுக்கக்கூடாது. இருந்தாலும் மணிகண்டனுக்குத்தானே... பரவாயில்லை!" என்று அடமாய் ரத்தம் கொடுக்க வந்திருந்தார் ஒரு வாசகர்.
அவர், தான் வந்த ஆட்டோவில் மணிகண்டனைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்திருப்பார் போலிருக்கிறது. ஆஸ்பத்திரி வந்தவுடன், 'ஆட்டோ சார்ஜ்' வாங்க மறுத்து விட்டார் டிரைவர்.
"மணிகண்டனைப் பத்தி நானும் படிச்சேங்க. அவனுக்கு ரத்தம் கொடுக்கப்போறதாச் சொல்றீங்க. உங்களை ஃப்ரீயா கொண்டு வந்ததாவே இருக்கட்டும். ஏதோ என்னால் முடிஞ்சது" என்று சொல்லிவிட்டுப் போனார். அந்த நல்லிதயம் படைத்த ஆட்டோ டிரைவரின் பெயர் நாசர். இப்படியாக, ஒவ்வொரு நாளும் மனிதநேயம் விஸ்வரூபமெடுத்த நிகழ்ச்சிகள்தான் எத்தனை!
சரியாக இரண்டரை மணிக்கு டாக்டர் கே.எம்.செரியன், ஆபரேஷன் தியேட்டர் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டார். நம்மையும், மணிகண்டனின் பாட்டி மீனாட்சியம்மாளையும் அமைதியாக நெருங்கி...
"பாட்டி! உங்க பேரன் பிழைச்சுட்டான்" என்று சொல்லிவிட்டுப் பளீரென்று சிரித்தார்.
காத்திருந்த அத்தனை பேர் முகத்திலும் சூரியகோடிப் பிரகாசம்! ஆறரை மணி நேர அவஸ்தையான காத்திருப்பு அத்தோடு முடிந்தது.
|