ஸ்பெஷல் -1
Published:Updated:

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை
News
மூன்றாம் பிறை

ஸ்ரீதேவியின் பாத்திரப் படைப்பைப் பழுதில்லாமல் செதுக்கியிருப் பதில் கைதேர்ந்த சிற்பியாக உயர்ந் திருக்கிறார் டைரக்டர்

விகடன் பொக்கிஷம்

டியர் லதா,

'அம்னீஷியா' என்கிற சினிமா வியாதி, 'அமரதீபம்' காலத்தில் தோன்றி இன்னிக்கும் பல திரைக் கதாசிரியர்களுக்குக் கை கொடுத்து வருவது நமக்கெல்லாம் நல்லா தெரியும். அப்படித் தெரிஞ்ச ஒரு வியாதியாலே பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணை வச்சுதான் கதை அமைச்சிருக்கார் பாலுமகேந் திரா. ஆனா, அதிலே எவ்வளவு வித்தியாசமா தன்னோட திறமையை வெளிப்படுத்திக்கிட்டிருக்கார் தெரியுமா!

விபத்தில் தொடங்கற கதையை அவர் படிப்படியாக டெவலப் செய்து, ஊட்டிக்கு அழைத்துப் போறது கொள்ளை அழகு!

ஸ்ரீதேவியின் பாத்திரப் படைப்பைப் பழுதில்லாமல் செதுக்கியிருப் பதில் கைதேர்ந்த சிற்பியாக உயர்ந் திருக்கிறார் டைரக்டர். வயசுக்கு வந்த ஒரு பெண்ணை வயது குறைந்தவளாகக் காட்டுவது கம்பி மேல் நடப்பது மாதிரி! நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிட்ட பின், வயசு மட்டும் குறைந்துவிடுமே தவிர, தோற்றம் குறுக்கே வந்து ஆபாசத்தையும், விரசத்தையும் கை நீட்டி வரவேற்க ஆரம்பிச்சுடும். இங்கே அது கடுகளவுக்குக்கூட கிடையாது. இதுவே இயக்கியவருக்கும், இயக்கப்பட்டவருக்கும் பெரிய வெற்றி!

மூன்றாம் பிறை

அந்த நாய்க்குட்டிக்குப் பேர் வைக்கிற விஷயம் குட்டி சமாசாரம்தான்! ஆனா, அதற்குச் 'சுப்பர மணி' என்று பேரிட்டு, தன் மழலைச் சொல்லால் 'சுப்பரமணி, சுப்பரமணி' என்று வாய்க்கு வாய் கூப்பிடும் அந்த நடிப்புக்கு நன்றி!

சகிப்புத் தன்மைக்கு முழு அர்த் தத்தை இந்தப் படத்தில் காட்டிவிட் டார் கமல். ஸ்ரீதேவியின் அச்சுப் பிச்சுக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்து, பொறுமையைச் சோதிக்கும்போது (இங்க் பாட்டில் விவகாரம்) பொறுப் போடு கடிந்துகொண்டு, 'நோயாளி' யைக் குஷிப்படுத்த குரங்கு மாதிரி குட்டிக்கரணம் போட்டு... 'ஐயோ பாவம்' என்று அனுதாபப்பட வைக்கிறார்.

ஸ்ரீதேவியின் மழலையும், சிரிப்பும், வெகுளித்தனமும் அவரை அசல் குழந்தையாகவே நமக்குக் காட்டறதனாலே ஒரு சீன்லே கமல் அந்தக் 'குழந்தை' தூங்கப் போவதற்கு முன்னாலே, "பாத்ரூம் போயிட்டியோ?" என்று கேட்பதுகூட விரசமாகவோ, தரக்குறைவாகவோ படலே! அதே போலத்தான் ஸ்ரீதேவி கமலுக்கு முத்தம் கொடுக்கிற ஸீனும்... தியேட்டர்லே ஒரு விஸில் சப்தம் கேட்கணுமே... நோ!

இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை உருப்படியான பக்கவாத்தியம்! ஏற்றவேண்டிய இடத்தில் ஏற்றி, இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி... குறிப்பா படுக்கை அறையில், முதன்முதலாக ஸ்ரீதேவியை கமல் சந்திக்கும் இடத் தில் வெறும் கடிகார 'டிக்டிக்' ஓசையைப் பயன்படுத்தியிருக்கிற டெக்னிக், டாப்!

பாலுமகேந்திராவின் காமிரா பிரமாதம்னு சொல்றது, நாகஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளையின் தோடிக்கு புதுசா சபாஷ் போடறது மாதிரி! இருந்தாலும், அவர் ஊட்டியின் பனிச் சாரலையும், மழைத் தூறலையும் கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறதைக் குறிப்பிடா விட்டால் அது மாபெரும் அநீதி!

தயக்கமில்லாமல் 53 மார்க் கொடுப்பேன்.

அன்புடன்
ராஜேஷ்.