என் தெரு. கடைசியாக அக்காவின் பெண் சுசீயைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றபோது பிரிந்த தெரு. நிறையவே மாறி இருந்தது. 'பழைய பேப்பர்' என்று முழங்கியவாறு ஒரு வெள்ளைக்காரன் சைக்கிளில் போனான். அவனது சைக்கிளில் ஏதோ வெளிநாட்டு கம்பெனியின் பெயர். நடுத்தர வயதில் இரண்டு பேர் வேட்டி விளம்பரத்துக்குச் செல்வதுபோல் கம்பீரமாகச் சென்றார்கள். அதில் ஒரு முகத்தை எங்கோ பார்த்தது மாதிரி இருந்தது.
என் வீட்டை நோக்கி விரைந்தபோது, ஸைட்டர் எப்போது வேண்டுமானாலும் என்னை நிகழ்காலத்துக்கு அழைத்துவிடக்கூடும் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. ஸைட்டர், எனக்கு நீங்கள் செய்தது உதவியா?
பிரச்னைகளைக்கண்டு மிரண்டு ஓடாமல் காலை வரை பொறுமையாக இருந்திருந்தால், ஜோசப்பை கிரிக்கெட் கொன்ற செய்தி கிடைத்திருக்கும். அமெரிக்கர் தோப்பூர் பிரியாணியை ருசிப்பதைப் பார்த்திருக்கலாம். சித்ரகுப்தனின் முன்பு தலை குனிய விரும்பாத போத்தி, 'வாடகையை வசதிப்படும்போது கொடுப்பா..." என்பதைக் கேட்டு இருக்கலாம். எதிர்கால குணாதான் எனக்குப் பிடிக்கவில்லையே தவிர, நிகழ்கால குணா என் நண்பன். அவன் அபாய கட்டத்தைத் தாண்டியதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கலாம். காலப்போக்கில் சந்தியாவின் அண்ணன்களும் என்னை நெருங்கி வந்திருப்பார்கள்.
மொத்தத்தில் நான் முதல் நாள் பயந்த எதுவுமே அடுத்த நாள் நடக்கவில்லை. என்னிடம் மோத வந்தது ஒரு எதிரி என்றால், நானே உருவாக்கிய 100 கற்பனை எதிரிகளுடன் கல்லெறிவது முதல் ஹைட்ரஜன் குண்டுகள் எறிவது வரை எல்லா யுத்தங்களும் நடத்தி, காயங்கள்பட்டுக் களைத்து இருக்கிறேன்.
போத்தியின் மீது எனக்கு ஏன் இனம் புரியாத பொறாமையும் எரிச்சலும் ஏற்பட்டது என்பது எனக்கு இப்போது புரிந்தது. அவர் அனைத்தையும் இழந்தபோதும், தப்பிக்க நினைக்காமல், தன்னை மாற்றிக்கொண்டு உண்மையைச் சந்தித்திருக்கிறார்; வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார். நான் பின்புறமாகத் தப்பித்திருக்கிறேன். ஓட்டப் பந்தயத்தில் ஓடாமல், பதக்கம் தரும் வேளையில் கழுத்தை நீட்டுவது சாதனை என்றால், எல்லோரும் சிரிப்பார்கள்.
என் வீடு பிரமாண்டமாக இருந்தது. வீட்டின் தெரு பார்த்த பகுதியில் ஒரு சிறிய விநாயகர் கோயில். கேட் அருகே கிரானைட் எழுத்துக்களில் 'ராஜு பவனம்'. அருகே இருந்த கூர்க்கா பேப்பர் படித்துக்கொண்டு இருந்தான். அவனைத் தாண்டி உள்ளே செல்லும்போது, பேப்பரை எட்டிப் பார்த்தேன்.
வழக்கம்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அழகிகள் கன்னத்தில் கை வைத்து 'ஆ'வென்று வியந்து, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும், கிழடுகளையும் காப்பாற்றப்போவதாக அறிக்கைவிட்டு, அடுத்த வருடம் சினிமாவில் தொப்புளைக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்; 90 வயசு எழுத்தாளனும், ஒரே ஒரு படத்தில் நடித்த நடிகையும் - அது அவள் முதல் படம், நான்கு மேட்ச்கள் விளையாடிய கிரிக்கெட்டரும் தங்கள் முதல் விருதைப் பெற ஒரே மேடைக்குச் செல்கிறார்கள்... போன்ற செய்திகள்.
தவிர, விலைவாசி, வேலைப் பளு, வாழ்க்கை நெருக்கடிகள், போட்டி, பொறாமைகளால் திணறும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அவர்களுக்கு இலவசமாகப் பொழுதுபோக்கு இன்பம் அளிக்கப் பூசாரிகள், சாமியார்கள், அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு உதவும் செய்திகள்... அவசரமாகத் தப்பி ஓடினேன். இந்த தேசத்தில் எதுவுமே மாறவில்லை!
ஆனால், நான் மாறி இருக்கிறேன். ஏனென்றால், ஸைட்டர் எனக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எதிர்காலத்துக்கு வந்து, என் பிரச்னைகளின் போக்கை அறிந்துகொண்டதால், அடுத்து என்ன நடக்கும் என்கிற சுவாரஸ்யத்தை இழந்திருக்கிறேன். இந்த த்ரில்லும் சஸ்பென்ஸும் கலந்த கலவைதானே, வாழ்க்கை விருந்தில் உப்பும் காரமுமாக இருந்து வருகிறது.
சினிமாவில் கடைசி ரீல்களை முதலிலேயே பார்த்துவிட்டு, பின் முதலில் இருந்து படத்தைப் பார்க்கிறபோது கொட்டாவி வரக் கூடாது என்றால், எப்படி? எப்படிப்பட்ட முட்டாள் நான்! பெரிய மீன்களும், தூண்டில்களும், வலைகளும் புழங்கும் கடலில்தானே சிறிய மீன்களும் பர்த்டே கேக்குகள் பரிமாறிக்கொள்கின்றன. பூனைகள் வாழும் ஊரில் தானே எலிகளும் வாக்கிங் ஸ்டிக்குகள் வாங்கு கின்றன.
நான்பிரச்னைகளுக்குப் பயந்து ஸைட்டரிடம் ஓடியது, எப்படிப்பட்ட தப்பு! இது எனக்கு இவ்வளவு தாமதமாகப் புரிந்திருக்கிறது.
எதிர்காலத்தை அறிந்துகொண்டதால், எனக்குப் பாதகமான விஷயங்களைச் சரிசெய்கிறேன் என்று, குறட்டைவிட்டுத் தூங்குகிற டைனோசரை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டு, ஆயுள் முழுவதும் மன உளைச்சலுடன் அலையப்போகிறேன். இன்று சனிக்கிழமை என்றால், நான் காலண்டரைக் கிழிக்கா விட்டாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வந்தே தீரும். இதில் அவசரப்பட்டு என்ன பலன்?
என் வீட்டின் முன் புல்வெளி. தோட்டக்காரன் இருந்தான். உண்மையிலேயே பெரிய வீடுதான். அழகான வண்ணங்களில், நவீன பாணியில் இரண்டு மாடிகள். உலகப் புகழ் 'ராஜு பிரியாணி ஷாப்' உரிமையாளர் வீடு எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிறது! ஆமாம், நான் தெருவில் பார்த்த ஒருவரை இதற்கு முன் எங்கோ சந்தித்திருக்கிறேனே... எங்கே? வீட்டினுள் நுழைந்தபோது சந்தோஷமாக இருந்தது. பெரிய ஹாலில் குத்து விளக்கு, இருக்கைகள், அட, லிஃப்ட்கூட இருக்கிறது. ஒரு சிறு குழந்தை அழும் சத்தம் உள்ளே இருந்து கேட்டது.
|