ஸ்பெஷல் -1
Published:Updated:

சிறுகதை: மார்கழிப் பூ

சிறுகதை: மார்கழிப் பூ


சிறுகதை
சிறுகதை: மார்கழிப் பூ
சிறுகதை: மார்கழிப் பூ
சிறுகதை: மார்கழிப் பூ
அரவிந்தன், ஓவியங்கள்:ஸ்யாம்
சிறுகதை: மார்கழிப் பூ

சுமார் 25 ஆண்டுகள் கழித்து ஒரு கேள்விக்குப் பதில் கிடைத்தால்... எப்படி

இருக்கும்?

என் பெயர் ஹயக்ரீவன். வயது 49. கல்யாணமாகி மூன்று குழந்தைகள். நிறைவான திருமண வாழ்க்கை. குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்கள். தேவைக்கு அதிக சம்பளம். சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கி, அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எழுதி, மெள்ள முன்னேறி, காலத்துக்கு ஏற்பக் கண்டதையும் படித்து, இந்தியாவின் பல ஊர்களிலும் வேலை பார்த்து, கடைசியில் நான் பிறந்த சென்னை மண்ணிலேயே பெரிய வேலையில் உட்கார்ந்துவிட்டேன். நான் சொல்ல வந்தது இவை எதையும்பற்றி அல்ல; ஸ்ரீமதியைப்பற்றி.

என்றும் மறக்க முடியாத இளம் பருவத்துக் காதல் அது. மீசை அரும்பும் முன் அரும்பிய மென் காதல். மார்கழி மாதத்துக் காலை நேரத்தின் குளிர்ச்சி போன்ற உணர்வு. அவளைப் பார்க்கும்போது எல்லாம் காதோரங்கள் குறுகுறுக்கும். மனம் குளிரில் நடுங்கும் புறாபோலப் படபடவென்று அடித்துக்கொள்ளும். அடிவயிறு சில்லிடும். என் னைப் பார்த்ததும் அவள் வட்ட வடிவ முகத்தில் மலர்ச்சியான ஒரு சிரிப்பு. 'அண்ணா வெளீல போயிருக்கான். ஒக்காருங்கோ, இதோ வந்துடுவான்' என்ற உபசரிப்பு. வீணை நாதம்போன்ற குரல். அப்போது எனக்கு 19 வயது. அவளுக்கு 15 இருக்கும். பாவாடை சட்டை அணிந்துகொண்டு இருந்தாள். இவள் ஏன் என்னை போங்கோ, வாங்கோ என்று கூப்பிடுகிறாள் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக் கும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஆச்சர் யம் இல்லை. அவர்கள் வீட்டுக்கு நான் அதிகம் போக மாட்டேன். போனாலும் அவள் அண்ண னுடன்தான் அதிகம் பேசுவேன். அவள் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது, குடத்தைத் தூக்கிக் கொண்டு போகும்போது, கோலம் போடும்போது என்று ஒரு சில முறைகள்தான் அவளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு மீசைதான் முளைக்கவில்லையே தவிர, நெடுநெடுவென்று உயரமாகவும், உடற்பயிற்சி செய்ததால் கிடைத்த வலுவான உடலுடனும் இருப் பேன். எனக்கு அப்போது எல்லாம் சிரிக்கவே தெரியாது. எனவே, அவள் என்னை மரியாதையாகக் கூப்பிட்டதில் ஆச்சர்யம் இல்லை.

சிறுகதை: மார்கழிப் பூ

அவள் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருந்தது. திரும்ப வந்தால் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று நினைத்தேன். இன்று ஸ்கூல் இல்லையா என்றும் கேட்கலாம். அப்படிக் கேட் டால், இன்னும் ஓரிரு விநாடிகள் என் எதிரில் நிற்பாள் அல்லவா? அவள் வரும்போது ஒழுங்காகப் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். தடுமாறக் கூடாது. அப்புறம் அவளுக்கு என் மேல் மதிப்பே வராது. மனம் ஒத்திகை பார்க்க ஆரம்பித் தது. 'தேர்த்தம் வேணும்' என்று சொல்லிக்கொண்டேன். அவள் புன்னகைக்கிறாள். 'இதோ எடுத்துண்டு வரேன்' என்று சொல்லிவிட்டுப் போகிறாள். தண்ணீர் கொண்டுவருகிறாள். நான் குடித்து முடித் ததும் சொம்பை வாங்கிக்கொண்டு போவதற்காக நிற்கிறாள். 'இன்னிக்கு ஸ்கூல் இல்லியா?' என்று கேட்கிறேன். 'அம்மாக்கு உடம்பு சரியில்ல, அதனால லீவு போட்டுட்டேன்' என்கிறாள். 'ஒனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா?' என்கிறேன். அவள் வெட்கத்துடன் சிரிக்கிறாள். வட்ட முகம் மலர்கிறது. நானும் சிரிக்க முயல்கிறேன்.

"எப்படா வந்த?" என்று கேட்டபடி ஸ்ரீவத்ஸன் வந்தான். "அப்பவே வந்துட்டேன்டா" என்று சொன்னபடி சுதாரித்துக்கொண்டேன்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. ஏதாவது சாக்கு வைத்து ஸ்ரீவத்ஸன் வீட்டுக்குப் போவேன். சில சமயம் அவளுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீவத்ஸன் வீட்டில் எல்லோரும் என்னுடன் நன்றாகப் பழகுவார்கள். அவன் அப்பா சப்தரிஷிக்கு அதிகம் பேசும் பழக்கம். என்னிடம் ஒருநாள் வைஷ்ணவம்பற்றி ஏதோ பேச ஆரம்பித் தார். ஸ்ரீமதி வீட்டுக்குள் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால், அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தேன். ஆர்வத்தை நிரூபிப்பதற்காக நடுநடுவே கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தேன். அன்று வைகுண்ட ஏகாதசி. முடவனுக்கு மோட்சம் தந்த பெருமாளின் கருணையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். கதை நன்றாகத்தான் இருந்தது. ஸ்ரீமதியைத்தான் பார்க்கவே முடியவில்லை.

ஒரு புத்தகத்தை எடுப்பதற்காக நடுவில் அவர் எழுந்து போனார். நான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எழுந்து உள் அறையின் பக்கம் போய், சற்றே தலையைச் சாய்த்து எட்டிப் பார்த்தேன். குடிக்கத் தண்ணீர் கேட்க வேண்டும் என்பது திட்டம். அவள் ஜன்னல் ஓரம் சுவரில் சாய்ந்தபடி காலை நீட்டிக்கொண்டு மடியில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. அந்த அறையில் அதிக வெளிச்சம் இல்லை. அவள் உட்கார்ந்து இருந்த இடத்தின் அருகே ஜன்னல் இருந்ததால், அவள் மீது மட்டும் வெளிச்சம் விழுந்து அவள் உடல் ஜொலித்தது. அவளது பக்கவாட்டுத் தோற்றம் செதுக்கிவைத்ததுபோல் இருந்தது.

கோயில் தூணில் பார்த்த, கம்பீரமான பெண்ணின் அழகிய சிலை நினைவுக்கு வந்தது. சலனம் கேட்டுத் திரும்பினாள். பதற்றம் இல்லாத மெல்லிய அசைவு. காலை நேரத்துக் காற்றில் ஆடும் செடிபோல. முகத்தில் புன்னகை. எனக்குப் பேச்சே வரவில்லை. எப்படியோ சமாளித்துக்கொண்டு, "தேர்த்தம் வேணும்" என்றேன். கொலுசுச் சத்தம் சலசலக்க, பாவாடை சரசரக்க ஸ்ரீமதி உள்ளே சென்றாள். சொம்புடன் வந்தாள். கவனமாக வாங்கிக்கொண்டேன். தடுமாற்றத்தில் கொட்டிவிடுவேனோ என்று பயம். குடித்துவிட்டு சொம்பைத் தரும்போது கையில் பட்டுவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். சாக்குக் கிடைத்தால் தொட்டுப் பார்க் கும் கயவனாக என்னை அவள் நினைத்துவிட்டால் என்ன செய் வது? "போதுமா" என்றாள். "ம்..." என்றபடி தலையாட்டினேன். ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போனாள். அந்தப் புன்னகைஎன் கண்களில் இன்னும் நிற்கிறது.

இப்படிச் சின்னச் சின்னச் சந்திப்புகள். நான் அவளைக் காதலிக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்காதபோது மனம் தவிப்பதைவைத்துப் பார்த்தால், காதல்தான் என்று தோன்றியது. ஆனால், அதிகம் பார்க் கவோ பழகவோ சந்தர்ப்பம்அமை யாதபடி ஆகிவிட்டது. அவர்கள் பல்லாவரத்தில் வீடு கட்டிப் போய்விட்டார்கள். ஸ்ரீவத்ஸன் எம்.எஸ்ஸி. சேர்ந்துவிட்டான். நான் பி.எஸ்ஸி., முடித்ததும் வேலை தேட ஆரம்பித்தேன். அரசுத் தேர்வுகள் எல்லாவற்றை

யும் கர்ம சிரத்தையாக எழுதினேன். அப்பாவின் நண்பரான ஆடிட்டரிடம் பகுதி நேர வேலைக்குப் போனேன். நிறைய வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். கடைசியில், தாம்பரத்தில் ஸ்வஸ்திக் டிரக்ஸ் என்னும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சம்பளம் 200 ரூபாய் என்றால் உங்களுக்குச் சிரிப்பு வரும். அதுவும் நீங்கள் 1970-களுக்குப் பின் பிறந்தவர் என்றால். பாரதி ராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' வெளியான சமயம் அது. அப்போது எல்லாம் 200 ரூபாய்க்கு மதிப்பு இருந்தது. டீ 15 பைசா. தியேட்டரில் அதிக பட்ச டிக்கெட் 2.90 ரூபாய். 10 பைசாவுக்கு வேர்க்கடலை வாங் கினால், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு வருவது வரையிலும் கொறித்துக் கொண்டே வரலாம்.

தினமும் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் போக வேண் டும். வீட்டுக்கு வந்ததும் அரசுத் தேர்வுகளுக்கான பாடங்களைப் படிக்க வேண்டும். ராத்திரி 10 மணிக்குக் கிளம்பிப் பக்கத்துத் தெருவில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர வேண்டும். இந்த அலைச்சல்களுக்கு இடையில் ஸ்ரீமதிபற்றிய நினைப்பே வரவில்லை. படுத்ததும் தூக்கம் வந்துவிடும். சீக்கிரமே ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது.

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. ஸ்ரீவத்ஸன் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு போய்விட்டான். ஒரு முறை கடிதம் போட்டான். நான் பதில்கூடப் போடவில்லை. எக்கச்சக்கமான தேர்வுகள் எழுதிய எனக்கு, குரோம்பேட்டையில் ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை கிடைத்தது. வேலைக்கான ஆர்டர் வந்த அன்று அம்மா பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் சிறப்புப் பூஜை செய்துவிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. சம்பளம் 800 ரூபாய். ஓயாமல் பேரேடுகளைப் புரட்டிக்கொண்டு இருக்கும் வேலை.

குரோம்பேட்டைக்குப் போகும் வழியில் ஒருநாள் பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஸ்ரீமதியைப் பார்த்தேன். புடவை கட்டி இருந்தாள். கொஞ்சம் உயரமாகி இருந்தாள். பார்த்ததும் என் மனம் துள்ளியது. ரயில் நிற்பதற்குள் அவளை நான் பார்த்துவிட்டேன். இறங்கி அவள் இருக்கும் இடத்துக்குப் போவதற்குள், அவள் ரயிலில் ஏறிவிட்டாள். பெண்கள் பெட்டிக்குப் பக்கத்துப் பெட்டியில் ஏறிக்கொண்டேன். அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்க வேண் டும். அவள் இறங்குகிறாளா என்று பார்த்தேன். இறங்கவில்லை.

அடுத்து சானடோரியம் ஸ்டேஷனிலும் அவள் இறங்கவில்லை. தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கினாள். என்னைப் பார்க்கவில்லை. எனக்கு படபடப்பாக இருந்தது. அவள் பின்னால் நடந்தேன். அவளுடன் அதிகம் பேசிப் பழக்கம் இல்லை என்றாலும், தெரிந்த பெண் என்ற முறையில் பேசுவதில் தவறு இல்லை என்ற தைரியம். கொஞ்சம் பக்கத்தில் போய், "ஸ்ரீமதி" என்று கூப்பிட் டேன். திரும்பினாள். நான் மயங்கி விழாத குறையாகத் திணறிப்போனேன்.

அவ்வளவு கிட்டத்தில் அவள் முகத்தைப் பார்த்தது இல்லை. அந்த அழகை என்னால் தாங்க முடியவில்லை. என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை நாள் இவளைப் பார்க்காமல் இருந்திருக்கிறோமே என்று தோன்றியது.

"ஏ... ஹயக்ரீவன். எப்டி இருக்கேள்?" என்று கேட்டபோது, அவள் கண்கள் விரிந்தன. அந்தக் கண்களுக்குள் மிக ஆழமாக உள்ளே போய்க்கொண்டு இருந்தேன்.

"நன்னாத்தான் இருக்கேன். நீ எப்டி இருக்க?"

"ஓ, ஃபைன். என்ன மீசை எல் லாம் வெச்சிண்டிருக்கேள்?"

"ஏன் வெச்சிக்கக் கூடாதா?"

"அப்டி சொல்லல..."

"ஓரமா போய் நிக்கலாம் வா" என்றபடி நடந்தேன். கால்கள் தரையிலேயே படாமல் எப்படி நடப்பது என்பதை முதல்முறையாக அன்றுதான் உணர்ந்தேன்.

பின்னாலேயே வந்த ஸ்ரீமதி, "கிளாஸுக்கு டயமாயிடுத்து. தாம்பரத்துக்கு எதுக்கு வந்திருக்கேள்?" என்று கேட்டாள்.

"குரோம்பெட் போறேன். ஒன்னப் பாத்துதான் திரும்ப ஏறிட்டேன்."

"குரோம்பெட்ல என்ன?"

அவள் பேசும்போது அவள் உதடுகள் அசையும் அழகைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

"அங்கதான் வேலை செய்றேன். சரி, நீ என்ன கிளாஸுக்குப் போற?"

"டெய்லரிங். சும்மா போரடிச்சுதுன்னு சேர்ந்தேன்... டயமாயிடுத்து. நாளைக்குப் பாக்கலாம்." அவள் பேசும்போது மெல்லிய முறுவல் ஒன்று எப்போதும் உடன் வருவதையும் கவனித்தேன். உள்ளூர ஏதோ ஒரு போதை ஏறிக்கொண்டு இருந்தது.

கை ஆட்டினாள். நானும் கை ஆட்டினேன். அவள் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ரயில் வரும் சத்தம் என் கவனத்தைக் கலைத்தது. மறு நாளைய ரயில் பயணத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் குரோம்பேட்டையில் அவள் காத்திருந்ததைப் பார்த்ததும், ஆச்சர்யமாக இருந்தது. கையில் ஒரு டப்பா வைத்திருந்தாள். இருவரும் பெஞ்ச்சில் உட்கார்ந்தோம். டப்பாவை என்னிடம் நீட்டினாள்.

"உங்களைப் பாத்தத அம்மாகிட்ட சொன்னேன். ரொம்ப விசாரிச்சா. இத குடுக்கச் சொன்னா."

"என்ன இது?"

"நேத்திக்கு கோகுலாஷ்டமின்னா..."

எங்கள் வீட்டிலும் கோகுலாஷ்டமி கொண்டாடினோம். ஆனால், இவளுக்காகக் கொண்டுவர வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லையே என்று நினைத்து வெட்கமாக இருந்தது. அது மட்டுமல்ல. நான் இவளைச் சந்தித்ததை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

"அம்மா எப்டி இருக்கா? அப்பா எப்டி இருக்கா? வைஷ்ணவம்பத்திப் பேசினா அவருக்குப் பொழுது போறதே தெரியாதே..."
கலீர் என்று சிரித்தாள். "அப்டியேதான் இருக்கார். இப்போ ரிட்டயர் ஆயிட்டாரோன்னோ? பக்கத்து வீட்டு மாமாவோட சதா பேச்சுதான். அவருக்கும் உங்கள மாதிரியே பிலாசஃபில இன்ட்ரெஸ்ட். "

எனக்குச் சிரிப்பு வந்தது. எனக்கு பிலாசஃபில இன்ட்ரெஸ்ட்டா?

"ஆனா, நீங்க நசிகேதன் மாதிரி கேள்வி கேட்டுண்டே இருப்பேள். அவர் பேசாம கேட்டுண்டு இருப்பார்" என்றாள். நசிகேதனுக்குத் தத்துவ விசாரம். எனக்கு வேறு விசாரம்.

அதன் பிறகு பரஸ்பரம் இருவரது குடும்பங்கள்பற்றியும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். ஸ்ரீவத்ஸன் போன வாரம் வந்திருந்தானாம். பெங்களூரில் அவன் அலுவலகத் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன்.
நேரமாகிக்கொண்டு இருந்தது. மூன்று ரயில்கள் போய்விட்டன.

"நாளைக்கும் பாக்கலாமா?" என்றேன்.

"நாளைக்கு எல்லாம் இவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியாது. அம்மாவுக்கு முடியல. நான்தான் எல்லா வேலையும் முடிச்சுட்டு வரேன்."

"டப்பாவைத் திருப்பித் தரணுமோல்லியோ?"

"அது என்ன பெரிய விஷயம்? ஸ்டேஷன்ல வண்டி நிக்கும்போது குடுத்துட்டுப் போக வேண்டியதுதானே."

இவள் இவ்வளவு பேசுவாள் என்று நான் கற்பனைகூடச் செய்தது இல்லை. பேசும் பொற்சித்திரம் என்ற சொல் ஞாபகத்துக்கு வந்தது. மனம் சிலிர்த்தது.

ரயில் வந்தது. எழுந்துகொண்டோம்.

"வெறும் டப்பாவைக் கொண்டுவராதீங்கோ. ஏதாவது போட்டுக் கொண்டுவாங்கோ" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

அடுத்தடுத்த நாட்களில் அவளைப் பார்க்க முடியவில்லை. டப்பாவில் இனிப்பைப் போட்டு எடுத்துக்கொண்டு போனதுதான் மிச்சம். இருவரும் வரும் நேரம் ஒன்றாகக் கூடிவரவில்லை. அப்போது அவள் வீட்டிலும் தொலைபேசி இல்லை. என் வீட்டிலும் தொலைபேசி இல்லை. தொலைபேசி கேட்டு விண்ணப்பித்து இரண்டு வருடங்களாகக் காத்திருந்தகாலம் அது.

அடுத்த திங்கள்கிழமை சீக்கி ரமே போய்த் தாம்பரத்தில் இறங் கினேன். நீல நிறப் புடவையில் மிதந்து வந்தாள். நான் அவளைப் பார்ப்பதை அவள் பார்க்கவில்லை என்பதால் சுதந்திரமாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அன்று வெயில் குறைவாகவே இருந்ததாக ஞாபகம். கிட்டே வந்ததும் என்னைப் பர்த்தாள். அதே வியப்பு. அதே சந்தோஷம். டப்பாவை நீட்டினேன். திறந்து பார்த்தாள். பால்கோவாவைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

"பால்கோவா எனக்குப் புடிக்கும்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?"

அவள் கண்களை ஆழமாகப் பார்த்துச் சிரித்தேன். அவள் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்த்தது.

சிறுகதை: மார்கழிப் பூ

என் அம்மாவைப்பற்றி, அவள் அப்பாவைப் பற்றி, ஸ்ரீவத்ஸன்பற்றி, பாரதிராஜா படங்கள்பற்றி (அவள் படங்கள் பார்ப்பதே இல்லையாம்), ராம நவமி கச்சேரிபற்றி என்று 10 நிமிஷங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு நேரமாகிவிட்டது என்று சொல்லிப் புறப்பட்டாள். போவதற்கு முன் "ஒருநாள் ஆத்துக்கு வாங்கோ நசிகேதன்" என்றாள்.

நசிகேதன் என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். பரவசம் என்னை ஆட்கொண்டது.

வாரத்துக்கு ஒரு முறையாவது சந்தித்துவிடுவோம். சில சமயம் கொஞ்ச நேரம் பேச்சு. சில சமயம் வெறும் புன்னகைகளின் பரிமாற்றம். இளம் பருவத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் அவை. ரயிலில் ஏறியதும் ஸ்ரீமதியை நினைக்க ஆரம்பிப்பேன். மனசில் சாரல் அடிக்க ஆரம்பிக்கும். குரோம்பேட்டை நெருங்கும்போது, தலையை ஒரு முறை வாரிக்கொள்வேன். சட்டை ஒழுங்காக இன் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பேன். அவளைப் பார்க்க முடியாமல் போகும் நாட்களில் மனம் வாடும். பார்க்கும் நாட்களில் துள்ளும். அவளை நான் என்னவாக நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்று நான் தெளிவாக யோசித்ததே இல்லை. எப்போதும் அவள் அருகில் இருப்பதுபோன்ற ஓர் உணர்வு. இருக்க வேண்டும் என்ற ஏக்கம். இதை அவளிடம் எப்படிச் சொல்வது என்ற தயக்கம்.

அதன் பிறகு, சில மாதங்கள் அவளைப் பார்க்க முடியவில்லை. பயிற்சிக்காக என்னை எழும்பூர் கிளைக்கு அனுப்பினார்கள். வீட் டில் இருந்து சைக்கிளில் போய்விடும் தூரம்தான். பயிற்சிக்குப் போவதற்கு முன்பு அவளிடம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. எப்படியோ சந்திப்பு அமையாமல் போய்விட்டது. மூன்று மாதப் பயிற்சி முடிந்த மறுநாள் சீக்கிரமே கிளம்பி, தாம்பரத்தில் இறங்கி அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் அன்றும் வரவில்லை.

அன்று நான் அடைந்த துக்கத்தை அதற்கு முன் அடைந்தது இல்லை. ரயில் நிலையத்தில் அன்று நிறையப் பெண்கள் தெரிந்தார்கள். எல்லோருமே ஏதோ ஒரு கணத்தில் ஸ்ரீமதிபோலவே தெரிந்தார்கள். யாருக்காகவோ காத்திருந்து, ஏமாந்து, சலித்து, விரக்தி அடைந்த அந்த அனுபவம் எனக்குப் புதிது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து, பின் வலியுடன் அலுவலகம் போனேன்.

அலுவலகத்தில் ஓர் எண்ணம் உதித்தது. ஸ்ரீவத்ஸன் தொலை பேசி எண்ணைத் தேடி எடுத் தேன். வெளியே வந்து போன் செய்தேன். அவன் இருக்கையில் இல்லை என்றார்கள். என் அலு வலக எண்ணைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

மாலை வீடு திரும்பும்போது மீண்டும் முயற்சி செய்தேன். இப்போதும் அவன் இல்லை. பல்லாவரத்தில் அவர்கள் வீடு எங்கே என்று கேட்டுக்கொள்ளாமல்போனோமே என்று நினைத்து வருந்தினேன்.

மூன்று நாட்கள் கழித்து ஸ்ரீவத்ஸன் கூப்பிட்டான். லீவில் இருந்தானாம். அன்போடு குசலம் விசாரித்தான். "என்ன வேலை செய்கிறாய்?" என்று கேட்டான். "சம்பளம் எவ்வளவு?" என்றான். "பெங்களூருக்கு வந்தால், நல்ல வேலை வாங்கித் தருகிறேன்" என்றான். "ஆத்திலே எல்லாரும் எப்படிடா இருக்காங்க?" என்று கேட்டேன். எல்லாரைப்பற்றியும் சொன்னான். "உன் தங்கை வேலைக்குப் போறாளா" என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்.

"இல்லடா. அவளுக்கு மாப்பிள்ளை பாத்துண்டிருக்கோம்" என்றான். ஒரு கணம் என் மூச்சு நின்றது.

எப்படியோ சமாளித்து, "சரி, மெட்ராஸுக்கு வந்தா எங்க ஆத்துக்கு வாடா" என்றேன். என் குரல் எனக்கே அசிங்கமாக ஒலித்தது.

"அட்ரஸ் குடுடா."

சொன்னேன்.

"கண்டிப்பா வரேன்டா. ஸ்ரீமதிக்கு வரன் அமைஞ்சா வர வேண்டியிருக்குமே..."

ஒலிவாங்கியை வைத்தேன். கண்கள் இருட்ட ஆரம்பித்தன. வேலை ஓடவில்லை. திரும்பவும் போன் செய்து, அவனிடமே சொல்லிவிடலாமா என்று மனம் அடித்துக்கொண்டது. தைரியம் வரவில்லை. அவன் என்னைக் கேவலமாக நினைத்துவிடுவானோ என்ற பயம். முதலில் ஸ்ரீமதி யிடம் அல்லவா பேச வேண்டும். அதற்குத்தான் வாய்ப்பே கிடைக்கவில்லையே. பேச வேண்டிய நேரத்தில், நான் ஊமையாக இருந்துவிட்டேனோ? ரயிலடியில் அவளைச் சந்திக்க முடியும் என்று நினைத்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது? இனி, எப்படி அவளைப் பார்ப்பது? வீடு தெரியாது. தெரிந்தாலும், ஸ்ரீவத்ஸன் ஊரில் இருந்தாலாவது அவனைப் பார்க்கும் சாக்கில் வீட்டுக்குப் போகலாம். இப்போது எப்படிப் போவது?

நடைப்பிணமாக அலுவலகம் போய் வர ஆரம்பித்தேன். ரயில் பயணத்தின்போது சோகப் பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வர ஆரம்பித்தன. குறிப்பாக, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்கள். 'கோடையில் ஒருநாள் மழை வரலாம் என் கோலத் தில் இனிமேல் எழில் வருமா' என்று தொண்டைக்குள் பாடும்போது சோகத்தில் அமிழ்ந்திருப்பதன் சுகம் எனக்கு உறைக்க ஆரம்பித்தது.

ஒருநாள் திடீர் என்று ஒரு திட்டம் உதித்தது. தொலைபேசி பூத்துக்குப் போய் ஸ்ரீவத்சனின் எண்ணை அழுத்தினேன். அவன் இருக்கையில் இல்லை. காத்திருந்து திரும்ப அடித்தேன்.

"எங்கடா ரொம்ப நாளா போனே காணோம்?" என்றான். "நானே கூப்பிடணும்னு நெனச்சிண்டு இருந்தேன்."

எனக்குப் பக்கென்றது. கல்யாணம் முடிவாகிவிட்டதோ? "சொல்லுடா" என்றேன்.

"நீ எதுக்கு போன் பண்ணினே, அத மொதல்ல சொல்லு."

"ஒங்க ஆத்து நம்பர் குடுடா. ஒரு புஸ்தகம் வேணும். அப்பாகிட்ட கேக்கணும்" என்றேன்.

எண்ணைச் சொன்னான். "என்ன புஸ்தகம்டா?"

"திவ்யப்பிரபந்தம். எங்காத்துக்குப் பக்கத்துல ஒரு மாமா சொல்லித் தரார்."

"இதல்லாம்கூடச் செய்யறயா?"

சிறுகதை: மார்கழிப் பூ

"சரி, நீ எதுக்குக் கூப்படுணும்னு நெனச்சே?"

"ஸ்ரீமதிக்கு ஒரு வரன் அமைஞ்சிருக்கு."

"ஓ... சரி சரி..."

அதன் பிறகு என்ன பேசினேன், எப்படி வைத்தேன் என்பது எல்லாம் நினைவில் இல்லை. மனம் கனத்து இருந்தது. இனி, ஒன்றும் செய்வதற்கு இல்லை. அப்படியே அவளிடம் சொல்லி, அதை அவளும் ஒப்புக்கொண்டு இருந்தாலும், அவ்வளவு சுலபமாகக் கல்யாணம் பண்ணி இருக்க முடியாது. இப்போது இவ்வளவு நன்றாகப் பேசும் ஸ்ரீவத்ஸன் அவன் தங்கையைக் காதலிக்கிறேன் என்று தெரிந்தால், இப்படிப் பேசுவானா? அவன் வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டும். என் வீட்டில் ஒப்புக்கொள்ள வேண்டும். எனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். இப்போதே அவளுக்கு 20 வயது. அவள் அப்பா இவ்வளவு நாள் தள்ளிப்போட்டதே ஆச்சர்யம்.

எல்லாம் சரிதான். ஆனால், அவள் என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள்? அவளுக்கு என் மீது விருப்பம் இருக்குமா, இருக்காதா? இதைத் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே என்பதுதான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கைவிட்டுப் போனது என்று தெரிந்தாலும் மனசு கேட்கவில்லை. திவ்யப்பிரபந்தத்தைச் சாக்காக வைத்து ஸ்ரீமதியின் வீட்டுக்குப் போனேன். மனம் குளிர்ந்த சிரிப்புடன் என்னை வரவேற்றார். மாமியும் ரொம்ப அன்பாக உபசரித்தார். ஸ்ரீமதியைக் காணவில்லை.

"ஏன்டா, இத்தனை நாள் எங்களை எல்லாம் பாக்கணும்னு தோணலியா?" என்று கேட்டார் மாமி. நான் நெளிந்தேன்.

"ஸ்ரீமதி சொல்லுவா. ஸ்ரீவத்ஸன்கூட போன் பண்றச்சே சொன்னான். திவ்யப்பிரபந்தம் எல்லாம் படிக்கிறயாமே?"

ஸ்ரீமதி என்னைப்பற்றி வீட்டில் பேசி இருக்கிறாளா? நான் புன்னகைத்தேன். மாமா உள்ளே போய் புத்தகத்தை எடுத்துவந்தார்.

"இதை நீயே வெச்சுக்கோ. எங்கிட்ட இன்னொரு காப்பி இருக்கு."

புத்தகத்தை பயபக்தியுடன் வாங்கிக்கொண்டேன். ஸ்ரீமதி என்ன சொல்லியிருப்பாள்?

மாமி காபி கொண்டுவந்தார். தற்செயலாகக் கேட்பதுபோல "ஸ்ரீமதியை எங்கே காணோம்?" என்றேன்.

"கோயிலுக்குப் போயிருக்கா. வர்ற நாழி ஆயிடுத்து" என்றார் மாமி.

காபி குடித்து முடிக்கும் வரை அவள் வரவில்லை. மாமா என் வீட்டைப்பற்றி, வேலையைப்பற்றி விசாரித்தார். என் கல்யாணத்தைப்பற்றி விசாரித்தார். "எனக்கென்ன அவசரம்?" என்று சிரித்தேன். ஸ்ரீமதி இன்னும் வரவில்லை. மாமா எங்கோ வெளியே கிளம்பத் தயாராகிக்கொண்டு இருந்தார். "நான் கிளம்பறேன் மாமா" என்றேன்.

"அட்ரஸ் குடுத்துட்டுப் போடா. பத்திரிகை அனுப்பணுமோல்லியோ" என்றார்.

எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போய் "இங்க பெருமாள் கோயில் எங்க இருக்கு?" என்று கேட்டேன். அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மாலை நேரக் காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது.

ஸ்ரீமதியை வழியிலேயே பார்த்துவிட்டேன். பார்த்ததும் மூச்சடைத்தது. உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தேன். அவள் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்

தாள். "எப்ப வந்தேள்?" என்று கேட்டாள். முதலில் இவள் என்னை வாங்கோ போங்கோ என்று சொல்வதை நிறுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் நெருங்காமலேயே போய்விட்டாள் என்று தோன்றியது. வீட்டுக்கு வந்த விஷயத்தைச் சொன்னேன். "நீ எப்படி இருக்கே?" என்று கேட்டேன். "எனக்கென்ன, நான் நன்னாத்தான் இருக்கேன்" என்றாள்.

ரயில் நிலையம் போவதற்கான சாலையின் திருப்பம் வந்தது. இந்த இடத்தில் நாங்கள் பிரிய வேண்டும். நான் அவளைப் பார்த்து, "இப்பல்லாம் தாம்பரம் வர்றது இல்லையா?" என்று கேட்டேன். "கிளாஸ் முடிஞ்சிடுத்து" என்றாள். "இப்ப பெரிய டெய்லராயிட்டயோ?" என்று கேட்டேன். இது என்ன அசட்டுக் கேள்வி என்று உடனே தோன்றியது. அவள் சிரித்தாள். பிறகு, எதுவும் பேசவில்லை. கல்யாணத்தைப்பற்றி விசாரிக்கலாமா என்று தோன்றியது. இனி, விசாரித்து என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம் அதை அடக்கியது. என் முகத்தைப் பார்த்தாள். போயிட்டு வரேன் என்று சொல்லப் போகிறாள் என்று பட்டது. சரி என்று சொல்ல நானும் தயாரானேன். அவள் பார்வை என்னைவிட்டு விலகி வேறு திசையில் சென்றது. அந்தத் திசையில் என் பார்வையும் தன்னிச்சையாகச் சென்றது. அங்கே ஒரு டீக்கடையின் பெயர்ப் பலகை தெரிந்தது. ஒரு காகம் பறந்துகொண்டு இருந்தது. மாலை நிறம் மங்கிக்கொண்டு இருந்தது. நான் அவளைப் பார்த்தேன். அவள் தலை குனிந்து பாதங்களை நோக்கி இருந்தது. "எனக்குக் கல்யாணம்" என்றாள். குரல் இயல்பாக இல்லாததுபோல எனக்குப் பட்டது.

"உங்கப்பா சொன்னார். வத்ஸனும் சொன்னான்" என்றேன். அவள் பதில் பேசவில்லை. எனக்கும் பேச்சு வரவில்லை. கணங்கள் மெதுவாக நகர்ந்தன.

"நான் கிளம்பறேன்" என்றாள்.

"சரி" என்றேன். அப்போது அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் கண்களைப் பார்த்தேன். அதன் பிறகு அவளைப் பார்க்கவில்லை.

எனக்குக் கல்யாணம் என்று சொல்லும்போது அவள் தலை ஏன் குனிந்தது? அது வெட்கத்தால் ஏற்பட்ட குனிவு அல்ல; குரலிலும் வெட்கம் தெரியவில்லை. ஒருவேளை அவளும் என்னை விரும்பி இருப்பாளோ? என்னைப்போலவே தயங்கி இருப்பாளோ? நான் சொல்லியிருந்தால், அவள் சரி என்று சொல்லி இருப்பாளோ? "எங்க அண்ணாகிட்ட பேசுங்கோ" என்று சொல்லி இருப்பாளோ? அப்படியானால், நான் சொல்லாமலேயே அவளுக்கு ஏன் புரியவில்லை? நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தாளா? மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என இருந்து, அவள் வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்து அதைத் தட்ட முடியாத நிலையில் சிக்கி இருப்பாளோ? சமீபத்தில் அதிகம் சந்திக்க முடியாமல், பேசவும் முடியாமல் போனதால் வந்த விளைவா இது? அல்லது எல்லாம் வெறுமனே என் கற்பனையா... அவள் ஏன் தலை குனிந்தாள்?

சென்னையில் ஆச்சர்யங்களுக்குக் குறைவே இல்லை. ஏ.சி. பஸ்கள் ஓடுகின்றன. விசாலமான மின் ரயில்கள் ஓடுகின்றன. ரயில்கள் பறக்கவும் செய்கின்றன. சென்னை ரயில், பஸ் எல்லாம் இப்போது உள்ளே எப்படி இருக்கும் என்றே எனக்குத் தெரியாது. சென்னை மாறிவிட்டது. ஆனால், கோயில், கச்சேரி, ஒலிபெருக்கிகள், அதிகாரபூர்வமான சாலைக் குழிகள், போக்குவரத்து நெரிசல் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெருமாள் கோயில். ஒருநாள் மாலை கச்சேரி கேட்கப் போனபோது காலட்சேபம் நடந்துகொண்டு இருந்தது. "ஆழ்வார்கள் அவதரித்த நாளோர்த் திங்கள்..." என்று உபன்யாசகர் கணீர்என்று பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு ஸ்ரீமதியின் அப்பா நினைவுக்கு வந்தார். ஸ்ரீமதியின் நினைவும் வந்தது. மலர்ந்த அந்த வட்ட முகமும் நினைவுக்கு வந்தது. கடைசியாகப் பார்த்தபோது அவள் வழக்கம்போலச் சிரிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அவள் நினைவு வரும்போதெல்லாம் முளைக்கும் கேள்வி அப்போதும் முளைத்தது. அவள் என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருந்தாள்? தன் கல்யாணத்தைப்பற்றிச் சொல்லும்போது ஏன் தலை கவிழ்ந்துகொண்டாள்?

பழைய நினைவுகளுக்கு அதிக இடம் கொடுக்காத சென்னையின் அன்றாட நெருக்கடிகளுக்கு இடையில் ஸ்ரீவத்ஸனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு என்னைக் கலைத்தது. "எங்கடா இருக்கே? எப்படிடா என் நம்பர் கிடைச்சுது?" என்று கேட்டேன்.

"ப்ரஸன்னாட்டேர்ந்து வாங்கினேன்டா. நீ இப்ப மெட்ராஸ்லதான் இருக்கியாமே..." என்றான்.

"நீ எந்த ஊர்ல இருக்க? மெட்ராஸ் எப்பவோ சென்னையா மாறியாச்சுடா."

"அது சரி. நான் இப்ப மும்பைல இருக்கேன். என் பையனுக்கு அடுத்த மாசம் 20-ந் தேதி பூணல். மிதிலாபுரி கல்யாண மண்டபத்துல வெச்சிருக்கேன். கண்டிப்பா வந்துடுடா. அட்ரஸ் குடு, இன்விடேஷன் அனுப்பறேன். வொய்ஃப்பையும் குழந்தைகளையும் கூட்டிண்டு வா. எத்தனை குழந்தைங்க உனக்கு?"

"மூணு. நான் வந்துடறேன். மெயில்ல டீடெய்ல்ஸ் அனுப்பு" என்றேன்.

மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுத்தேன். ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவனுக்கு ஒரே ஒரு பையன். திருவாழ் மார்பன். இப்போதுதான் கல்லூரிக்குப் போக ஆரம்பித்து இருக்கிறான். அப்பா காலமாகி இரண்டு வருஷம் ஆகிறது. அம்மா மும்பையில்தான் இருக்கிறாள். ஸ்ரீமதி ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். இரண்டு குழந்தைகள். ஒரு பெண், ஒரு பையன்.

"அவ கொழந்தேள் என்ன பண்றா?"

"பொண்ணு பேரு லக்ஷ்மி... இப்பதான் காலேஜ் முடிச்சா. பையன் பேரு நசிகேதன்... எம்.பி.ஏ. படிக்கறான்."

அந்த டீக்கடையும் மாலை நேரத்து வானமும் ஒற்றைக் காகமும் பளிச்சென்று என் மனத்தில் தோற்றம்கொண்டன. ஸ்ரீமதி தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்துச் சிரித்தாள்!

சிறுகதை: மார்கழிப் பூ
சிறுகதை: மார்கழிப் பூ