கர்னாடக சங்கீதத்தில் முத்திரை பதித்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா பெற்றோர்களுக்கென சில சங்கதிகள் சொல்கிறார். "எங்களுடையது வணிகக் குடும்பம். எல்லோருக்குமே இசையில் ஆர்வம். ஆனால், யாரும் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. என் அம்மா நன்றாகப் பாடுவார். அவரைப் பார்த்து நானும் பாட வேண்டும் என்று ஒரு குச்சியை வைத்துக்கொண்டு தம்புராபோலக் கற்பனை செய்துகொண்டு பாடுவேனாம். அதைக் கவனித்த அம்மா, என்னை இசை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார். என் முதல் கச்சேரி 12 வயதில் நடந்தது. இசைத் துறைக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து வந்த முதல் ஆள் நான்தான்!" என்பவர் படித்தது பொருளாதாரம். "எகனாமிக்ஸ் படித்து அதில் நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனா, இசை என்னை விடவில்லை. கல்லூரிக் காலங்களில், ஆர்வத்தில் செய்த கச்சேரிகள் பாராட்டுகளைக் குவிக்க, சாஸ்திரிய சங்கீதம் என்னை முழுவதுமாக சுவீகரித்துக்கொண்டது. பெற்றோர்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்கள் பிள்ளைகளின் மீது நம்பிக்கைவையுங்கள். அவர்கள் சாதிப்பார்கள். நான் இன்று ஜெயித்திருக்கிறேன் என்றால், அதற்கு என் குடும்பம் ஆதரவாக இருந்தது" என்பவர், இளைஞர்கள் கவனிக்க வேண்டிய சிலவற்றையும் பட்டியலிடுகிறார்.
"இளம் பருவத்தில் பாராட்டுகள் கிடைப்பது சுலபம். காரணம், சின்ன வயசுதானே என்று பாராட்டிவிடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு எந்த வளர்ச்சியும் இல்லாமல் பல வருடங்களுக்கும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு ஆதரவுகள் கிடைக்காது. நான் சின்ன வயதில் பாடும்போது, மதியம் 12 மணி, 1 மணி கச்சேரி கள்தான் கிடைக்கும். காரணம், அது இலவசக் காட்சி. டிக்கெட் கட்டணம் கிடையாது. அதன் பிறகு, என் திறமையை நான் மெருகேற்ற மெருகேற்ற, எனது கச்சேரிகளைக் காசு கொடுத்துக் கேட்க முன்வந்தார்கள். எல்லாத் துறைகளிலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வளர்ச்சியை அடைவார்கள். இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விதி... பாராட்டுகளுக்கு மயங்கி நிற்காதீர்கள். பாராட்டுக்கள் நீங்கள் நன்றாக வளர்கிறீர்கள் என்பதற்கானது அல்ல; இன்னும் இன்னும் வளர வேண்டும் என்பதற்கான தூண்டுகோல்!"
|