முகுந்தனின் மாமியார் எப்போதும் எதற்கும் குற்றம் குறை சொல்லியே பழகியவர். அவரைச் சந்தோ ஷப்படுத்தலாம் என்று திட்டமிட்ட முகுந்தன், மனைவியுடன் கலந்தாலோசித்து, மாமியாருக்கு ராமேஸ்வரம் துவங்கி காசி வரையிலான வழிபாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஏ.சி. ரயில், படுக்கை, சொகுசான தங்கும் இடங்கள், வசதிக் குறைவே இல்லாத பயண ஏற்பாடுகள் என்று ரொம்பவே ஆடம்பர மான பயணத் திட்டம். மாமியார் அது நாள் வரை சென்றே இருக்காத, ஆனால் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருந்த வழிபாட்டுத் தலங்கள்தான் அனைத்தும். எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தும் கடைசி நொடியில் மாமியார் 'இல்லை, எனக்குப் போகப் பிடிக்கலை!' என்று அழிச்சாட்டியமாக மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டான் முகுந்தன். இரண்டு நாட்கள் கழித்து மாமியார் தானாகவே வாய் திறந்து காரணம் சொன்னார், 'காசிக்கு டிரெயின் ஏற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷ னுக்குப் போக கால் டாக்ஸி வரும்னு பார்த்தா, ஆட்டோ வந்து நிக்குது. நான் என்ன அந்த அளவுக்குத் தேஞ்சு போயிட்டேனா? இங்கேயே இப்படின்னா, போற இடத்துல என்னலாம் நடக்குமோ... யாருக்குத் தெரியும். அதான் போகலைன்னு சொல்லிட்டேன்!'
இந்த இடத்தில், கால் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ ஏற்பாடு செய்ததுதான் தப்பு என்று முகுந்தன் நினைத்து மனம் குமைந்தால், அப்போது அவன் மனம் முழுவதையும் ஆற்றாமையும் எதிர்மறை எண்ணங்களும் ஆக்கிரமிக்கும். ஆசை, பாசம், காதல் கலந்து எவருக்கே னும் ஒரு பரிசு அளிக்கும்போது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை... அவ்வளவுதான்! நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அன்பைப் பரிசளித்துக்கொண்டே இருங்கள்.
ஒவ்வொருவரும் அவரவரின் மன விசாலத்துக்கு ஏற்ப தான் சந்தோஷமாக இருப்பார்கள்!
- ஆப்ரஹாம் லிங்கன்
|