பாசிட்டிவ்வாக இருக்க முனைதல் என்பது ஒரு பகீரதப் பிரயத்தனமாகப் பார்க்கப்பட்டால், அது பெரும் சுமை ஆகிறது. மனிதனின் மனதில் எல்லா எண்ணங்களுக்கும் இடம் உண்டு. அது வரும்... போகும். இந்த எண்ணம் எனக்கு வரவே கூடாது என்று செயற்கையாக அதைத் தடுக்க முனைவது, மனதை ஏமாற்றும் தந்திரம் அல்ல... மூளையை ஏமாற்றும் வேலை.
நேர்மறை எண்ணங்கள் என்ற மனோநிலையை மேலோட்டமாகவே கவனித்துக்கொண்டு இருக்கிறோம். 'இன்று எனக்கு எல்லாமும் நன்றாகவே நடக்கும்', 'நான் போகிற இடத்தில் அந்த மனிதர் நிச்சயம் இருப்பார்', 'இன்றைக்கு நான் எதிர்பார்த்தபடி அந்த வேலை முடிந்துவிடும்', 'இந்தக் காதல் கடிதத்தை அவள் அவசியம் புரிந்துகொள்வாள்' - இப்படி நேர்மறையான வாக்கியங்களை மனதுக்குள் 10 முறை சொல்லிக் கொண்டால், பாசிட்டிவ்வாக இருந்துவிட முடியுமா? இன்னமும் அழியாமல் மனதுக்குள்கிடக்கும் எதிர்மறை எண்ணத்தின் மீதுதான் இந்த பாசிட்டிவ் சிந்தனைகள் வண்ணம் பூசி அடுக்கிவைக்கிறோம். இந்தக் குறுக்குசால் வேலைகள் எப்படி நிரந்தரத் தீர்வைத் தரும்?
நேர்மறை எண்ணங்கள் வேண்டும் என்றால், எதன் மீதாவது தாகம் இருக்க வேண்டும். அதன் மீது அசைத்துவிட முடியாத ஆசை இருக்க வேண்டும். அளப்பரிய காதல் இருக்க வேண்டும். இது எனக்கு வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அதுதான் நமது ஒவ்வொரு படிநிலையையும் பாசிட்டிவ்வாகப் பார்க்க வைக்கும்.
வாழ்வியலில் நடைமுறைகளின் பார்வையில் நின்று பார்த்தால், ஓர் உண்மை புலப்படுகிறது. அது, 'எதிர்மறைச் சிந்தனைகளை எதிர்கொள்வதுதான் நேர்மறையாக இருத்தல்' என்பது.
ஏதாவது ஓர் இடத்தை அல்லது இலக்கை எட்டுவதில் தீராத ஆசை இருக்கும் என்றால், எதிர்மறைச் சிந்தனைகள் என்று சொல்லப்படும் எந்த விஷயங்களின் மீதும் நமது கவனம் குவிவது இல்லை. காரணம், கவனம் இலக் கின் மீதும் ஆசையின் மீதும் குவிந்து இருக் கிறது.
|