ஹை ஹீல்ஸும்
லிபர்ட்டி கட் சுடிதாரும்
வெள்ளிக்கிழமை சிறப்பு.
பாடி டியோடரன்ட்டும்
டாண்ட்ரஃப் ஷாம்பும்
அன்றாட பட்ஜெட்.
பிரதி மாத ஹலோ டியூன்களுக்கு
ஹாரிஸ் ஜெயராஜும்
யுவன்ஷங்கர் ராஜாவும்.
எச்சிலூறும் எஸ்.எம்.எஸ்
வரப் பெறாதவர்கள்
நட்பு தேவையில்லை.
கலாசார நாட்களுக்கென்றே
கனகாம்பரமும்
மயில் கலர் பட்டுத் தாவணியும்.
தலயும் மேடியும்
தூங்கவிடாத
மின்சாரக் கனவுக் கண்ணன்கள்.
நினைத்தும் பார்க்கவில்லை
அப்போது
இடுங்கிய கண்களும்
ஒடுங்கிய கன்னமும்
துருத்தியிருந்த நெஞ்செலும்பாய்
துருப்பிடித்த சைக்கிள்
வரனைத்தான்
அப்பாவின் பொருளாதாரத்துக்குள்
அடக்க முடியும் என்று.
மூன்றே வருடங்களில்
இரண்டுக்குத் தாயாகி
முப்பத்தைந்து முதுமை காட்டி
முதுகு வளைத்தது வறுமை.
பலசரக்குக் கடைக்காரன்
கடுகு கட்டிய காகிதத்தில்
'வீட்டிலேயே பியூட்டி டிப்ஸ்...
உருளைக் கிழங்கையும்
தக்காளியையும் மசிய அரைத்து
தயிர் கலந்து
இரவு படுக்கும் முன்
முகத்தில்...'
அது சரி,
அதை மூஞ்சில அப்பிக்கிட்டா
வெந்த சோத்துக்கு
வெந்நீர் ஊத்தியா திங்கறது?
- பால நாயகர்
|