ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.
தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!
|