மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 13

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 13

மனம் கொத்திப் பறவை! - 13
மனம் கொத்திப் பறவை! - 13
மனம் கொத்திப் பறவை! - 13

Black Sabbath, Led Zeppelin, Aerosmith, AC/DC, Guns N' Roses, Nirvana, Judas Priest, Dio, Metallica,

Def Leppard, Twisted Sister, Cradle of Filth இவை எல்லாம் என்ன? உலகின் மிக முக்கியமான ஹார்ட் ராக் இசைக் குழுக்களின் பெயர்கள். ட்விஸ்டட் சிஸ்டரின் தலைமுடி அலங்காரம் மிகவும் வித்தியாசமானது; அவருடைய I Wanna Rock என்ற பாடலைக் கேட்டு யாராலும் ஆடாமல் இருக்க முடியாது.

இவர்களைக் கேட்டு ஆடுவதற்காகவே முன்பெல்லாம் சில டிஸ்கோ கிளப்புகளுக்குச் செல்வது உண்டு. அங்கு வரும் இளைஞர்கள் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு, சமூக வாழ் வின் அமைதியைக் குலைப்பதால், இப்போது இரவு 11 மணிக்கே மூடிவிடுகிறார்கள். அதனால், வீட்டில்தான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரச்னை என்னவென்றால், வீட்டில் உள்ள பிரஜைகளுக்குத்தான் மண்டையிடி வந்துவிடுகிறது.

மனம் கொத்திப் பறவை! - 13

உலகில் எத்தனை வகையான உணவு வகைகள் உண்டோ... அத் தனை வகையான இசையும் உள்ளது. அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையும், எம்.எல்.வசந்தகுமாரியையும் கேட்டு ரசித்த செவிகளுக்கு, மேலே குறிப்பிட்ட மெட்டல் ராக் இசை நாராசமாகத்தான் இருக்கும். ஆனால், இது எல்லாமே கலாசாரம் மற்றும் காலம் சம்பந்தப்பட்ட பிரச்னை. 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படிப்பட்ட உடையை அணிந்திருந்தார்கள்? இப்போது உள்ளாடையின் ப்ராண்ட் பட்டி ஜீன்ஸுக்கு வெளியே தெரிவதுபோல் அணிவதே ஃபேஷன்.

கர்னாடக இசைபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனாலும், உலகின் எல்லாவிதமான இசைக்கும் ரசிகனாக இருப் பதுபோல் கர்னாடக இசைக்கும் நான் ரசிகன். டெல்லியில் வசித்தபோது (1978-90) பிரகதி மைதானில் உள்ள காதம்பரி தியேட்டரில் அப்போது இருந்த எல்லா சங்கீதக் கலைஞர்களையும் நேரில் கேட்டு இருக்கிறேன். இந்துஸ்தானியில் கங்குபாய் ஹங்கல், பீம்சென் ஜோஷி, கிஷோரி அமோங்கர், குமார் கந்தர்வா, மல்லிகார்ஜுன் மன்சூர், பண்டிட் ஜஸ்ராஜ், அம்ஜத் அலிகான் (சரோத்), சிவகுமார் ஷர்மா (ஸந்த்தூர்), ஹரிப்ரஸாத் சௌரஸ்யா (புல்லாங்குழல்) என்று அந்தப் பட்டியல் நீளமானது. அதேபோல் கர்னாடக சங்கீதமும். காதம்பரி தியேட்டரில் பின் வரிசை டிக்கெட் இரண்டு ரூபாய், முன் வரிசை மூன்று ரூபாய். முன் வரிசை காலியாக இருந்தால், பின்னால் இருப்பவர்களை முன்னே வந்து அமரச் சொல்வார் வீணை பாலச்சந்தர். பிஸ்மில்லா கான் அதற்கும் மேல். 'மேடையில் ஏறி என் பக்கத்திலேயே அமர்ந்துகொள்ளுங்கள்!' என்பார். கடவுளின் தர்பாரிலேயே அமர்ந்து இருப்பதுபோல் இருக்கும்.

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.

மனம் கொத்திப் பறவை! - 13

ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!

மனம் கொத்திப் பறவை! - 13

எனக்கு என்னவோ, தற்போதைய கலைஞர்களைக் கேட்கும்போது, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டி.கே.பட்டம்மாள், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களைக் கேட்கும்போது ஏற்படும் பரவச உணர்வு ஏற்படுவது இல்லை. தற்காலக் கலைஞர்கள் சங்கீதத்தை மிகவும் அவசரகதியில் - fast food ரகத்தில் கொண்டுசெல்கிறார்களோ என்று தோன்றுகிறது. உடை அலங்காரத்தில் காண்பிக்கும் சிரத்தையை சங்கீத அலங்காரத்தில் காட்டுவது இல்லை. (சங்கீதத்தில் 35 வித அலங்காரம் உள்ளதாம்). சௌம்யா, டி.எம்.கிருஷ்ணாபோன்ற சிலர் விதி விலக்காக பத்ததி மாறாமல் பாடுகிறார்கள். கிருஷ்ணா விடம் மற்றொரு விசேஷம், 'வரும் டிசம்பர் சீஸனில் பாட மாட்டேன்' என்று அறிவித்து இருக்கிறார். 'இப்படியே தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தால், கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது; இந்த ஆண்டு மற்றவர்கள் பாடுவதைக் கேட்கப்போகிறேன்!' என்கிறார் கிருஷ்ணா. தேதி கேட்டு வருபவர்களிடம், 'இப்போதானே மூணு மாசத்துக்கு முன்னே பாடினேன். அதற்குள் என்ன அவசரம்?' என்று சொல்வாராம் அரியக்குடி. 'சங்கீதம் என்பது நாத உபாசனை. கல்லா கட்டுவதல்ல!' என்ற கிருஷ்ணாவின் மனோபாவம் பாராட்டுதலுக்கு உரியது.

மனம் கொத்திப் பறவை! - 13

வயலின், மேண்டோலின், ஸாக்ஸ போன், க்ளாரி னெட் போன்ற மேற்கத்திய வாத்தியங்களை கர்னா டக இசைக்குப் பயன்படுத்தி சாதனை செய்தவர்கள் எல்.சுப்பிரமணியம், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், கதிரி கோபால்நாத் ஆகியோர். இதில் க்ளாரினெட்டைக் கையில் எடுத்தவர் ஏ.கே.சி.நடராஜன். இவர் ஆறு வயதில் ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் வாய்ப்பாட்டும், அதன் பிறகு, திருப்பூர் நடேசப் பிள்ளையிடம் 15 வயது வரை நாகஸ்வரப் பயிற்சியும் பெற்றிருக்கிறார். அப்போது நாகஸ்வரத்தில் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை, செம்பனார் கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற பெரிய ஜாம்பவான்கள் இருந்த காலம். அந்தக் காலத்தில் நாகஸ்வரத்தை அடுத்து க்ளாரினெட் பிரபலமாக இருந்திருக்கிறது. சதிருக்கும் பரத நாட்டியத்துக்கும் க்ளாரினெட்தான் பக்க வாத்தியம். அப்படிப்பட்ட சமயத்தில், க்ளாரினெட் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நடராஜன், அதில் சில புதுமைகளைச் செய்து நாகஸ்வரத்தைப்போலவே க்ளாரினெட் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். பிறகு, 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது குருவான ராஜரத்தினம் பிள்ளை காலமாகிவிட்டதால், மியூஸிக் அகாடமியில் அவர் வாசிக்க வேண்டிய தேதியில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் வயது 20.

பொதுவாகப் பலருக்கும் உழைக்காமலேயே பலன் அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் ஒரு நாளில் 1,200 பந்துகளை அடிக்கிறார். மைதானத்தில் அல்ல; வலைப் பயிற்சியில்!

ஏ.கே.சி.நடராஜன் வாய்ப்பாட்டில் எப்படிப் பயிற்சி எடுத்தார் என்று சொல்கிறார் பாருங்கள்: 'எனது குருநாதர் ஆலத்தூர் வெங்கடேஸ்வர ஐயர் மிகவும் நல்லவர். அன்பானவர்தான். ஆனால், கலையில் மிகவும் கண்டிப்பானவர். கடினமானவர். ஒரு முறை சொல்லிக் கொடுப்பார். சரியாகப் பாடவில்லை என்றால், ஓங்கி ஒரு உதை கொடுப்பார். அந்த உதை இந்த உதை அல்ல; மிகக் கடினமான அடிகள். ஆனால், வயிற்றுக்கு வஞ்சிக்க மாட்டார். அன்புக்கும் வஞ்சனை கிடையாது!'

மனம் கொத்திப் பறவை! - 13

க்ளாரினெட்டில் தனக்குப் பிறகு யாரும் பெயர் சொல்லும்படி வராததுபற்றி மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறார் நடராஜன். ஆனால், இன்னொரு வருத்தம், நம்முடைய பொக்கிஷத்தை எல்லாம் வெளி நாட்டினர் கொள்ளையடித்துப்போக அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது. சட்டீஸ்கரில் உள்ள கனிம வளங்களுக்காக அந்த வனப் பகுதிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டனர் மத்திய அரசின் ஆட்சியாளர்கள். காலம்காலமாகத் தாங்கள் வசித்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட ஆதிவாசி மக்களின் போராட்டம், மாவோயிஸ்ட் டுகளின் குறுக்கீட்டால் வேறு விதமாக மாறி, அந்த ஆதிவாசிகள் இன்று தேசத் துரோகிகள் என்ற பட்டத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் யார் உண்மையான தேசத் துரோகி? தங்கள் நிலத்துக்காகப் போராடும் ஆதிவாசிகளா? பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய மண்ணை விற்கத் துணியும் அரசியல்வாதிகளா? என்ன, சங்கீதத்தில் இருந்து அரசியலுக்கு வந்துவிட்டேனா? மேலே படியுங்கள்.

நான் எம்.எம்.தண்டபாணி தேசிகரின் (1908-1972) தீவிர ரசிகன். தமிழிசைக் கலைஞரான இவரது பாடல்களை நேரம் காலம் தெரியாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஓதுவார் குடும்பத்தில் பிறந்த தேசிகர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராக இருந்திருக்கிறார். இவர் 1952-ல் தியாகராஜர் ஆராதனை விழாவில் பாட அழைக்கப்பட்டார். தமிழில் ஆரம்பித்து, தெலுங்கில் பாடி, கடைசியில் தமிழில் முடித்தார். இது மற்றவர்களுக்குப் பிடிக்க வில்லை. இவர் பாடி முடித்தவுடன் அந்த இடத்தைத் தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்தனர் என்கிறது அந்த நாளைய குறிப்பு ஒன்று.

'பட்டினத்தார்' (1935), 'நந்தனார்', 'திருமழிசை ஆழ்வார்' (1948), 'முதல் தேதி' (1955) போன்ற படங்களிலும் பாடி நடித்திருக்கிறார் தேசிகர். நான் சங்கீதத்தைப்பற்றி எழுதியபோது அதனிடையே ஏன் அரசியல் புகுந்தது என்று இப்போது பார்ப்போம். தேசிகர் தனது வெண்கலக் குரலில் பாடிய சினிமா பாடல்களான 'ஜகஜனனீ', 'என்

மனம் கொத்திப் பறவை! - 13

அப்பன் அல்லவோ', 'தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்', 'வழி மறித்து நிற்குதே', 'காண வேண்டாமா' போன்றவற்றைக் கேட்க வேண்டுமானால், நீங்கள் அமெரிக்காகாரனுக்கு ஐந்து டாலர் கொடுக்க வேண்டும்!

நம் ஊரில் விளையும் மஞ்சளுக்கும் வேப்பிலைக் கும் காப்புரிமை வாங்கப் பார்த்தார்கள் அல்லவா? அதே கதைதான். இதுபோல் நம் கலாசார சொத்துக் களில் பெரும் பகுதியை அபகரித்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் மேற்கத்தியர்கள். சென்னையில் உள்ள அத்தனை கடைகளிலும் தேடிப்பார்த்தேன்; தேசிகரின் சாகாவரம் பெற்ற சினிமா பாடல்கள் கிடைக்க வில்லை!

மைக்கேல் ஜாக்சனை நாம் இலவசமாகக் கேட்கலாம். ஆனால், நம் நாட்டு இசை மேதை தண்டபாணி தேசிகரைக் கேட்க அமெரிக்காகாரனுக்குக் கப்பம் கட்ட வேண்டும்! நாம் எப்போது திருந்தப்போகிறோம்

மனம் கொத்திப் பறவை! - 13
மனம் கொத்திப் பறவை! - 13