Published:Updated:

உயிர் மொழி! - 12

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 12


ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
உயிர் மொழி!  - 12
உயிர் மொழி!  - 12
தாயில்லாமல் நானில்லை?!
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 12

கனுக்குத் திருமணமே செய்யாமல், அவனுக்கு 40 வயது கடந்த பிறகும் வேடிக்கை

பார்த்த அம்மா, மகனுடைய முதலிரவின்போது 'நெஞ்சு வலிக்குதே' என்று மயங்கி விழுந்த அம்மாக்கள், முதலிரவு தாண்டி தேன் நிலவுக்கு மகனைத் தனியாக அனுப்ப முடியாது என்று தானும் உடன் போன தாய்கள், தப்பித் தவறி மகன் தனியாக மனைவியுடன் தேன் நிலவுக்குப் போனாலும் நிமிடத்துக்கு ஒரு முறை போன் செய்து குடைச்சல் கொடுக்கும் தாய்கள்... எனப் பல வகையினர் இங்கு உண்டு.

சரி, அம்மாவுக்குத்தான் இன்செக்யூரிட்டி. இந்தியப் பாரம்பரியம் பெண்களுக்கு எந்த பவரையுமே தராததால், மகனைத் தன்வசப்படுத்தி, அவன் மூலமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள். ஆனால், பையனுக்குப் பகுத்தறிவு வேண்டாமோ? எங்கெல்லாம் அம்மாக்கள் பையனை வைத்துப் பரமபதம் ஆடுகிறார்களோ, அங்கெல்லாம் தோற்றுப்போகிறவர்கள் சாட்சாத் அந்தப் பையன்களேதான்.

உயிர் மொழி!  - 12

உதாரணத்துக்கு, ஒமரை எடுத்துக்கொள்வோம். ரொம்பவும் ஆசைப்பட்டுத் தன் உறவுப் பெண் நர்கீஸைத் திருமணம் செய்துகொண்டான் ஒமர். பேரழகியான அவள் பணக்கார வீட்டுப் பெண். இவன் மேல் பைத்தியமாகக்கிடந்தவள். இவனுக்கும் அவளை ரொம்பவே பிடிக்கும். இருவரும் ரொம்பவே மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், ஒமர் வேலைக்குப் போன பிறகு, அவன் அம்மா தினமும் அவனுக்கு போன் செய்து, 'உன் பொண்டாட்டி என்னை மதிக்கிறதே இல்லை. மத்தியானமே சப்பாத்தி சுட்டு ஹாட் பேக்ல வைக்காதே, அவன் ராத்திரி வந்த பிறகு சூடா சுட்டுக்கலாம்னு சொன்னா, என் பேச்சைக் கேட்காம, நான் மத்தியானம் கொஞ்சம் கண் அசந்த நேரத்துல எல்லா சப்பாத்தியையும் சுட்டுவெச்சுட்டா. இதுதான் நீ கட்டின பொண்டாட்டி என்னை மதிக்கிற லட்சணமா?' என்று அழுதுவைக்க, ஒமருக்கு உடனே கோபம் பொசுக்கென்று தலைக்கேறியது.

கணவன் வீட்டுக்கு வரும்போது சப்பாத்தி சுடுவதில் நேரத்தை வீணடிக்க வேண்டாமே... எல்லா வேலைகளையும் முதலிலேயே முடித்துக்கொண்டால், அவனுடன் அதிக நேரம் செலவிடலாமே என்பது நர்கீஸின் திட்டம். அவள் மாலை அழகாக ஒப்பனை செய்துகொண்டு, அவனுக்காக ஆசையாகக் காத்திருக்க, வந்ததும் வராததுமாக அவளை உதாசீனப்படுத்தினான் ஒமர். என்ன காரணம் என்று சொல்லாமல் அவன் நெற்றிக்கண்ணைத் திறந்து, 'அப்படி என்ன சோம்பேறித்தனம்... என்ன வளர்த்துவெச்சிருக்காங்க உன் வீட்டுல?' என்று சரமாரியாக அர்ச்சனை செய்ய, மனக் கசப்பினால் அன்று இரவு இருவரும் கட்டிலின் கோடிகளில் படுத்துக்கொண்டு இருக்க, இப்படியாக சப்பாத்தி மாதிரி சின்ன விஷயங்கள் அவர்கள் திருமண வாழ்க்கையைச் சலிப்புக்கு உள்ளாக்கின.

இதற்கிடையில், ஒமருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட, நர்கீஸ், இனியாவது அவன் தன்னைப் புரிந்துகொண்டு பிரியமாக இருக்க மாட்டானா என்று ஆசைப்பட்டாள். ஆனால் ஒமரோ, தொடர்ந்து தன் அம்மா, அக்கா, சித்தி, மாமி என்று எல்லோர் பேச்சையும் கேட்டுக்கொண்டு, மனைவியைக் குறைசொல்லிக்கொண்டே இருந்தான். நொந்துபோனாள் மனைவி. ஒரு சண்டையில் இவன் தன் வசமிழந்து அவளைப் போட்டு அடித்துவிட, அவள் தகப்பனார் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தார். "இந்தக் காட்டுமிராண்டியோடு என் மகளை நான் விடவே மாட்டேன்!" என்று அழைத்துப்போய்விட்டார்.

உயிர் மொழி!  - 12

"அவளாதானே போனா, அவங்க அப்பன் பெரிய பணக்காரன்கிற திமிர்லதானே போனா... அவளாத் திரும்ப வரட்டும். நீ அவளுக்கு போன்கூடப் பண்ணாதேடா!" என்று தாய்க்குலம் ஓதிவைக்க, ஒமரும் அடி பிறழாமல் அப்படியே இருந்தான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன.

"வீட்டுல ஒரு நாய் வளர்த்தாகூட... அது சாப்பிட்டுச்சா, நல்லா இருக்கான்னு கவலைப்படுவோம். கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளையும் எப்படி இருக்காங்கனு ஒரு போன்கூட பண்ணிக் கேட்காத இவனெல்லாம் ஒரு மனுஷனா, அவனை மறந்துடு" என்று நர்கீஸுக்கு எல்லோரும் அறிவுரை கூறினார்கள். அவள் படித்த பெண், அதனால், சும்மா வீட்டில் உட்கார்ந்துகொண்டு கவலைப்படுவதற்கு ஏதாவது வேலைக்குப் போகட்டுமே என்று அப்பா அவளுக்கு ஒர் பிசினஸ் ஏற்படுத்தித் தந்தார். பலரைத் தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றாள் நர்கீஸ். அப்படி அவள் சந்தித்த நபர்களில், ரியாஸ் என்பவனுக்கு அவள் மேல் ஆசை, காதல், இரக்கம் எல்லாம் வந்தது. அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, அவள் பெற்றோரிடம் விண்ணப்பிக்க, ஆரம்பத்தில் ஆட்சேபித்த நர்கீஸும், போகப்போக இணங்க ஆரம்பித்தாள். இருவருக்கும் திருமணம் முடிவானது.

நர்கீஸ் அவனை தலாக் செய்துவிட்டு, ரியாஸைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாள் என்பது தெரிந்ததும், ஒமருக்குப் பதற்றம் ஆரம்பித்தது. அவள் தன்னைவிட்டு நிரந்தரமாகப் போய்விடப் போகிறாள் என்றதும்தான் அவனுக்குத் தன் இழப்பின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நர்கீஸோடு அவன் சந்தோஷமாக இருந்த நாட்கள் நினைவுக்கு வர, தன் மனைவியை இன்னொருத்தன் தொடப்போகிறானே என்கிற தவிப்பும், என் மகளை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமுமே அவன் தூக்கத்தைக் கெடுத்தன. வீட்டில் இதுபற்றிப் பேச்சு தலை தூக்கியபோது, "பொம்பளை அவளுக்கே இன்னொரு புருஷன் கிடைக்கும்போது, என் பையனுக்கு நான் இன்னொரு நிக்காஹ் பண்ணிவைக்க மாட்டேனா?" என்று ஆரம்பித்தாள் அவன் அம்மா. "ஆமா, முதல் பொண்டாட்டியோடு ரொம்ப வாழவிட்டுட்டே... இன்னொரு பொண்ணு வந்து இந்த வீட்ல கஷ்டப்படணுமா? நான் ஒருத்தன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது போதாதுன்னு இப்ப என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே!" என்று அப்போது மட்டும் திருவாய் மலர்ந்தார் ஒமரின் அப்பா. அப்போதுதான் ஒமருக்குச் சட்டெனப் பொறி தட்டியது.

அதுவரை அம்மாவை மீறி எதுவும் சிந்தித்தும் பார்த்திராத ஒமருக்கு அப்போதுதான் அம்மா என்கிற உறவை மறந்து ஒரு தனி மனுஷியாக அவளை எடை போட முடிந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடனும் அனுசரித்துப்போகாமல் எப்போதுமே இன்செக்யூர்டாக அம்மா இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. தங்கை தன் கணவனுடன் தங்க வந்தால், தன் படுக்கை அறையை அம்மா காலிசெய்து தந்ததும், இவன் தன் மாமியார் வீட்டுக்குப் போனால் மட்டும், "அங்கெல்லாம் போய் ராத்திரி தங்காதேடா, அப்புறம் நம்மளை மதிக்க மாட்டாங்க" என்று தடுத்ததும், நர்கீஸ் போனதில் இருந்து அம்மா அவன் சம்பளத்தைவைத்து தங்கை குழந்தைக்கு நகை செய்து போட்டதும், இன்னும் இதுபோன்ற பல சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.

அதற்குள் நர்கீஸ், ஜமாத்தில் சொல்லி விவாகரத்து வாங்கி ரியாஸை நிக்காஹ் செய்துகொண்டாள். அடுத்த ஆண்டு அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தன. அப்போதும் ஒமருக்கு இன்னொரு நிக்காஹ் செய்து முடிக்கவில்லை அவன் அம்மா. தன் அறையின் தனிமையில் தன் இழப்பை நினைத்து ஒமர் எவ்வளவோ வருந்தினான். ஆனால் அவன் அம்மா, "அந்த ராட்சசிகிட்டே இருந்து என் பையனைக் காப்பாத்திட்டேன்" என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டுக்கொண்டாள்.

ஆக, எப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் அம்மாக்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மரபணு அபிவிருத்தியில் தோற்றுத்தான் போகிறார்கள். அதனால்தானோ என்னவோ, தொல்காப்பியர்கூட, அடிமையாகவோ, காவலனாகவோ இருப்பவனை ஒரு பாட்டுக்குக்கூடத் தலைவனாக வைக்கக் கூடாது என்கிற விதியை வகுத்தார். பாட்டுக்கே தலைவனாக இருக்க லாயக்கற்ற அடிமை, எப்படி ஒருத்தியின் வாழ்க்கைக்குத் தலைவனாக இருக்க முடியும்?

உயிர் மொழி!  - 12
உயிர் மொழி!  - 12
(காத்திருங்கள்)