1945-ல் ஹிட்லரின் மரணத்துக்குப் பிறகு, ஜெர்மனி பிரிட்டிஷ்/அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பில் வந்தது. அதற்காக அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான தேர்வுக்கு ஃபேன்மன் போய் வந்த கதை, சார்லி சாப்ளினின் 'தி க்ரேட் டிக்டேட்டர்' படத்தைவிட நகைச்சுவையானது. ஃபேன்மன் அந்தச் சமயத்தில் ராணுவத்துக்குத் தேவைப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டு இருந்த நேரம். இருந்தாலும், கட்டாய ராணுவ சேவை என்பதால் செல்கிறார். உடல் பரிசோதனையில்தேறி விடுகிறார். அடுத்து, மனநலம். சைக்கியாட்ரிஸ்ட் இவரிடம் கேட்கிறார், 'யாராவது உங்களைப்பற்றிப் பேசுவது உண்டா?'
'ஆமாம். என் அம்மா என்னைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவாள்!' (ஆனால், சைக்கியாட்ரிஸ்ட் இவர் சொன்ன பதிலை முழுமையாகக் கேட்காமல், 'ஆமாம்' என்றதுமே ஏதோ சீரியஸாக எழுத ஆரம்பித்துவிடுகிறார்).
அடுத்த கேள்வி. 'உங்களை யாரும் உற்றுப்பார்ப்பது உண்டா?' இதற்கு ஃபேன்மன் 'இல்லை' என்று சொல்ல வாயெடுக்கும்போது சைக்கியாட்ரிஸ்ட், 'உதாரணமாக, இந்த அறையில் யாரும் உங்களை உற்றுப்பார்க்கிறார்களா?' என்று கேட்கிறார். உடனே, சுற்றுமுற்றும் பார்த்த ஃபேன்மன், பெஞ்ச்சில் தங்கள் முறைக் காகக் காத்துக்கொண்டு இருந்த இளைஞர்களில் இரண்டு பேர் தன்னையும் சைக்கியாட்ரிஸ்ட்டையும் உற்றுப்பார்ப்பதைக் காண்கிறார்.
'ஆமாம், இரண்டு பேர் நம்மை உற்றுப்பார்க்கிறார்கள்!' ஆனால், சைக்கியாட்ரிஸ்ட் இப்போதும் ஃபேன்மன் சொல்வதை முழுதாகக் கேட்கவில்லை. 'ஆமாம்' என்றதுமே சீரியஸாக எழுத ஆரம்பித்து விடுகிறார். இதேபோல் பல கேள்விகள். 'உங்களுடனேயே நீங்கள் பேசிக்கொள்வது உண்டா?' 'ஆமாம், ஷேவ் செய்துகொள்ளும்போது பிளேட் அறுத்துவிட்டால், 'சே... லூஸுத்தனமா பண்ணிட்டனே!' என்று என்னையே திட்டிக்கொள்வேன்!' 'உங்கள் பயோடேட்டாவில் இருந்து உங்கள் மனைவி இறந்துவிட்டார் என்று தெரி கிறது. அவரோடு பேசுவீர்களா?' 'ஆமாம், எப்போதாவது அவளை நினைத்து 'ஐ லவ் யூ டார்லிங்' என்று சொல்வேன்!'
கடைசிக் கேள்வி. 'வாழ்க்கையின் மதிப்பு என்ன?' பதில் '64.' 'என்னது 64ஆ? 73 என்று ஏன் சொல்லக் கூடாது?' 'அதுசரி, 73 என்று சொன்னாலும் நீங்கள் இதே கேள்வியைத்தானே மாற்றிக் கேட்பீர்கள்?'
தேர்வின் முடிவில் ஃபேன்மனுக்கு பைத்தியம் என்று சொல்லி, ராணுவம் அவரை நிராகரித்து விடுகிறது.
பிறகு, இந்தச் சம்பவத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லிச் சிரிக்கிறார் ஃபேன்மன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ஃபேன்மனின் அம்மா தன் கண வரிடம் 'இப்போது என்ன செய்வது? இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே?' என்று கவலையுடன் கேட்டாராம். அது மட்டுமல்ல; ஃபேன்மன் அங்கு இருந்து நகர்ந்த பிறகு அவருடைய அப்பா, 'என்ன இருந்தாலும் நீ அவன் எதிரில் அப்படிக் கேட்டு இருக்கக் கூடாது, பாவம் அவன்!' என்று சொல்லி இருக்கிறார். இதை ஃபேன்மனிடம் சொன்னது அவருடைய தங்கை.
இப்படியே போகும் இந்தப் புத்தகத்தில், அவ் வப்போது சில இயற்பியல் புதிர்களும் உண்டு. ஃபேன்மன் மாணவனாக இருந்தபோது, ஐன்ஸ் டீனின் நண்பரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுத் திணற அடித்திருக்கிறார். ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்தபோது, யாருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. எப்படி இதைக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டால், 'கனவில் வந்தது!' என்கிறார் ஐன்ஸ்டீன். ஒரு பொருளை மேலே எறிகிறீர்கள். அது புவியீர்ப்பு விசையால் கீழே விழுகிறது. இதுதான் நார்மல் நேரம் மற்றும் நார்மல் தூரம். ஆனால், அதே பொருளை மிகுந்த வேகத்துடன், அதிக உயரத்துக்கு அனுப்பினால், அங்கே 'நேரம்' சீக்கிரமே கடந்துவிடும். அதாவது, 'இவ்வளவு வேகமாப் போறானே, சீக்கிரம் செத்துடுவான்!' என யாராவது சாபம்விட்டால் ரிலேட்டிவிட்டி தியரியின்படி அது தப்பு. லாஜிக் இடிக்கும். ஏனென்றால், அந்தத் தியரியின்படி ஒரு பொருள் வேகமாகச் சென்றுகொண்டு இருக்கும்போது, மூன்று மாறுதல்களுக்கு உள்ளாகிறது.
1) பொருளின் நிறை கூடுதல் (An increase in mass)
2) அது போகும் திசையில் நீளம் குறைதல் (A contraction in the direction of travel)
3) காலம் மெதுவாகச் செல்லுதல் (A slowing down of time)
|