Published:Updated:

உயிர் மொழி! - 11

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 11


உயிர் மொழி
உயிர் மொழி!  - 11
உயிர் மொழி!  - 11
'அம்மா'டியோவ்!
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 11

ம்மாக்கள் தங்களுக்கு அதிகப் பாதுகாப்பு தரும் ஆண் குழந்தையை (சில வீடுகளில்

பெண் குழந்தையையும்) அன்பெனும் அங்குசத்தைப் பயன்படுத்தித் தனக்கு அடிமையாக்கிக்கொள்கிறார்கள். வலிமையான, புத்திசாலித்தனமான யானையை அடக்கி, பழக்கி, ஒரு தேங்காய் முடிக்காக கோயில் வாசலில் பிச்சை எடுக்கவைக்கிறார்களே, கிட்டத்தட்ட அதேபோல!

செய்தால், செய்துவிட்டுப் போகட்டுமே, அதனால் யாருக்கு என்ன நஷ்டம் என்கிறீர்களா?

சரி, இந்தக் கதையைக் கேளுங்கள்... ஜெயம் ஒரு சராசரி இந்தியப் பெண். டாக்டர் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துகொண்டு, மிக வசதியாக வாழலாம் என்பதுதான் அவள் இள வயதுக் கனவு. அவளது துரதிர்ஷ்டம், எந்த டாக்டரும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. அதனால், ஒரு ரயில்வே குமாஸ்தாவுக்கு அவளை மணம் முடித்தார்கள். ஏதோ ஒரு குக்கிராமத்தில் கூட்டுக்குடித்தன வாழ்க்கைதான் அமைந்தது. அவள் கணவனின் சொற்ப மாத வருமானத்தை கவர் பிரிக்காமல் அப்படியே மாமனாரிடம் கொடுத்துவிட வேண்டும். அதனால், தன் தனிப்பட்ட தேவைகளுக்குத் தன் பெற்றோரையும் சகோதரர்களையும் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் ஜெயம். எப்படியாவது ஒருநாள் பெரிய பணக்காரி ஆகியே தீருவது என்கிற வைராக்கியம் இதனாலேயே அதிகரித்தது.

உயிர் மொழி!  - 11

ஆனால், அவள் கணவனோ சல்லாபப் பிரியன். மனைவியோ சதா பூஜை, விரதம் என்று இருந்த பரமபக்தை. இருவருக்கும் ரசனை அலைவரிசை பொருந்தாததால், கணவன் தன் சக ஊழியைகளிடம் நைஸாகப் பேசியே தன் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பிக்க, விஷயம் விபரீதமானது. வேறு ஒரு பெண்ணோடு மனிதருக்குக் காதல் ஏற்பட்டு, அவள் கர்ப்பமாகிவிட்டாள். விஷயம் தெரிந்தபோது, ஜெயத்துக்கு உலகமே திடீரென்று தலைகீழாகப் புரண்டது. அதுவரை பணம் மட்டுமே பிரதானம் என்று இருந்தவள் இப்படித் தடம் தவறும் கணவனை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டுமே என்கிற இக்கட்டுக்கு ஆளானாள். பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் அரும்பாடு பட்டுச் சேர்த்துவைத்தார்கள். ஆனால், ஏற்கெனவே காமத்தில் பெரிய ஈடுபாடே இல்லாமல் இருந்த ஜெயத்துக்கு அதற்கு மேல் கணவனின் மேல் நம்பிக்கையும் இல்லாமல்போக, அவர்களுடைய இல்வாழ்க்கை பிள்ளைகளை வளர்க்க மட்டுமே அதற்கு மேல் பயன்பட்டது.

உயிர் மொழி!  - 11

கணவனை நம்பிப் பயன் இல்லை என்று புரிந்துகொண்ட ஜெயம், தன் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் இரண்டு மகன்களின் மேல் குவித்தாள். டாக்டருக்கு மனைவியாகத்தான் முடியவில்லை... டாக்டருக்குத் தாயாகிவிட வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். மகன்களிடம் தன் பரிதாபக் கதையைச் சொல்லி அழுது, 'அம்மா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மனுஷனோடு வாழுறதே உங்களுக்காகத்தான்!' என்று சொல்லிச் சொல்லியே வளர்த்ததால், பையன்கள் இருவருக்கும் அம்மாவின் மேல் அதிக பாதுகாப்பு உணர்வும், அப்பாவின் மேல் அருவருப்பும் ஏற்பட ஆரம்பித்தது. வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட, அம்மா வேலைக்குப் போய் மகன்கள் இருவரையும் படிக்கவைக்க உதவினாள். ஒருவழியாக இரண்டு மகன்களுமே டாக்டர் ஆனார்கள். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயம் வேலையை விட்டாள். மகன்களின் சாம்பாத்தியம் பெருக ஆரம்பித்தது. மகன்களின் முயற்சியால் அது வரை வாழ்ந்த சின்ன வீட்டைவிட்டு, ஓர் ஆடம்பர பங்களாவுக்கு மாறினாள். அதற்குள் கணவரும் ரிட்டயராகிவிட, ஜெயம் முழுக்க முழுக்கத் தன் மகன்களின் வருமானத்தை நம்பியே வாழ வேண்டிய நிலை.

முதல் மகனுக்கு 35 வயது தாண்டிய பிறகும், 'சரியான பொண்ணே அமையலைடா!' என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் ஜெயம். அம்மா நமக்கு நல்லதுதான் செய்வார் என்று ஆணித்தரமாக நம்பிய முதல் மகனுக்கு வருடங்கள் உருள உருள... லேசாக சந்தேகம் தலை தூக்கியது. அது எப்படி இத்தனை கோடிப் பெண்கள் இருக்கும் இந்தியாவில் இவனுக்கு மட்டும் ஒருத்தி கிடைக்காமல் இருப்பாள்? கடைசியில் பையன் ஒரு பெண்ணைப் பார்த்து ரொம்பவும் பிடித்துப்போனதாகச் சொல்ல, 'அந்தப் பொண்ணோட அப்பாவுக்குத் தப்பான வழியில் பிறந்த பெண்ணாம் அது, போயும் போயும் கூத்தியாளுக்குப் பிறந்தவளையா உனக்குக் கட்டிவைப்பேன்?' என்று அதற்கும் ஒரு வெடி வைத்தாள் அம்மா. 'இனி மேல் முடியாது... எனக்கு வயதாகிறது. இவளைக் கட்டி வைக்காவிட்டால், என் ஹாஸ்பிடலில் ஒரு விதவை நர்ஸுக்கு வாழ்க்கை தந்துவிடுவேன்!' என்று மகன் மிரட்டல் விடுக்க, வேறு வழி இல்லாமல் முதல் மகனுக்குத் திருமணம் செய்துவைத்தாள் ஜெயம்.

ஆனால், மருமகளைக் கண்டால் அவளுக்கு என்னமோ பிடிக்கவில்லை. மருமகளையும், அவள் அம்மா- அப்பாவையும் எல்லா சமயத்திலும் ஜெயம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்க, மிரண்டுபோன அந்தப் பெண் தன் கணவனிடம் முறையிட்டாள். மகன் சொன்னான், 'எங்கம்மா எனக்குத் தெய்வம். குடும்பத்துக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களைப் படிக்கவெச்சவங்க. அவங்களைப்பத்தி ஏதாவது பேசினேன்னா, இதோ இதுதான் கதவு... வெளியே போயிடு!'

எது நியாயம் என்று யோசிக்கக்கூட முடியாத கண்மூடித்தனமான அம்மா சென்டிமென்ட்டில் சிக்கிக்கொண்டவனை என்னவென்று சொல்வது? என்னவோ இந்த உலகில் இவன் மட்டும்தான் அதிசயமான ஒரு டாக்டர் என்பது மாதிரி, இவன் அர்த்த ராத்திரியில் குடை பிடித்து, அராஜகம் செய்ய, பிறந்த வீட்டுக்கு அவமானம் வரக் கூடாதே என்று அவன் மனைவி பொறுத்துக்கொண்டே போனாள். குழந்தைகள் பிறந்தார்கள். அதன் பிறகு, இவளுக்கும் கொஞ்சம் அந்தஸ்து உயர்ந்தது. இனிமேல் அவளை, 'வெளியே போ' என்று சொல்ல முடியாதே! தனக்கென்று ஒரு குடும்பம் என்றான பிறகு, முதல் மகனால் அதற்கு மேல் தன் அம்மாவுக்குச் செலவழிக்க முடியவில்லை.

முதல் மகன், தான், தன் குடும்பம் என்று திசை திரும்பிவிட, ஜெயம் தன் இரண்டாம் மகனையே சார்ந்து வாழ ஆரம்பித்தாள். வருமானமே இல்லாத அவளுடைய எல்லா செலவுகளையும் இரண்டாவது மகனே கவனித்துக்கொள்ள, கணவனை வெறும் ஒரு காரோட்டி என்கிற லெவலுக்குப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள் ஜெயம்.

இது இப்படி இருக்க, ஜெயம் தன் இரண்டாவது மகனுக்கும் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள். அவன் எதிரில் தட்சிணா மூர்த்திக்குக் கொண்டைக் கடலை மாலை சாற்றி வேண்டிக்கொள்வாள். ஆனால், 'அந்தப் பொண்ணுக்கு இது நொட்டை... இது நொள்ளை!' என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனாள். எப்படியும் பெற்ற தாய் தனக்கு தீங்கா செய்துவிட போகிறாள் என்கிற நம்பிக்கையில் இருந்த£ன் மகன். வசதியான வீடு, சொகுசான கார், தேவைக்கு அதிகமாகப் பணம் என்று அவன் அம்மாவின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றினான். பையனுக்கு 40 வயது தாண்டிவிட்டது. இன்னும் ஒரு நல்ல பெண்ணை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை!

மகன் காத்துக்கொண்டே இருக்க, அவன் காசில் பெண் பார்க்கப் போகிறேன் என்று எல்லா ஊர்களுக்கும் போய்விட்டு, வெறும் கையோடு திரும்பி வந்தாள். இப்போது சொல்லுங்கள், இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்... தோற்றது யார்?

உயிர் மொழி!  - 11
உயிர் மொழி!  - 11
(காத்திருங்கள்)