விறுவிறுவென வாகனங்களில் பறக்கும் நமக்கு, சாலையைக் கடப்பதில் எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கு இடம் தரக்கூட மனம் முன்வருவதில்லை என்ற உணர்வு உள்ளுக்குள் தைப்பதில்லை. இன்னொரு பக்கம், இந்தக் குழந்தைகள் சாலையைக் கடந்து போகட்டும் என வண்டியை நிறுத்தினால், பின்னால் வருகிறவர் என் வண்டியை மோதிவிடக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணம். இதற்கு நடுவில், சாலையைக் கடக்க முயன்ற சிறுவர்களை முறைத்துக்கொண்டே போனவர்களும் உண்டு.
குழந்தைகள் கடக்க வேண்டுமே என்று எந்த வாகனமும் நிற்கவும் இல்லை. வாகனங்களை மறித்து வழி ஏற்படுத்தித் தர இந்தச் சிறுவர்களுக்கு ஆட்களும் இல்லை. அருகில் இருந்த டீக்கடையில் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. கண் கண்ணாடியைத் தலையில் அணிந்துகொண்டு வலது கையில் டாட்டூ குத்திய இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்தின் வாசலில் தன் பைக்கை நிறுத்தினார். கைகளைக் குறுக்கே காட்டியபடி வாகனங்களை இடைநிறுத்தினார். வாகனங்களை நிறுத்தியவர்களிடம் நன்றி சொன்னார்!
இப்போது மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சாலையைக் கடந்து சென்றனர். இந்தக் காலத்து இளைஞர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை என்ற பொதுக் குற்றச்சாட்டுக்குப் பதில் தருவதுபோல இருந்தது அவர் பணி. டீ கிளாஸை வைத்துவிட்டு ஓடிப் போய் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.
அதிகாரமும் பொருளாதாரமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற உண்மை, இன்றைய மனிதர்களின் யதார்த்த நடவடிக்கைகளிலும்கூட வெளிப்படவே செய்கிறது. ஆனால், இந்த உலகம் எளியவர்களுக்காகவும்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளியவர்கள் என்பது பொருளாதாரத்தில் குறைவானவர்கள் மட்டுமல்ல, பலமற்ற சாதாரண மனிதர்களும்தான்.
இந்த எளிய மனிதர்களுக்கு அரசாங்கம் எவ்வளவோ விஷயங்களைச் செய்கிறது. அவை, என்னுடைய வரிப் பணத்திலும் செய்யப்படுகின்றன. ஆகவே, எளிய மனிதர்களின் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், சக மனிதனின் இயலாமைக்காகவும், அசௌகரியமான சூழலுக்காகவும் வருந்துகிற, துடிக்கிற மனசு நமக்குள் தொலைந்து போய் இருக்கிறது.
பெரிய மனிதர்களே தடுமாறி, முண்டியடித்து ஏறி இறங்குகிற அரசுப் பேருந்தில் புத்தகப் பையை ஒரு கையில் வைத்துக்கொண்டு இரண்டு பெரியவர்களின் கையிடுக்கில் சிக்கிய தலையை வெளியே எடுக்க முடியாமல் மூச்சு முட்டியபடியே தினமும் பள்ளிக்கூடத்துக்குப் பயணிக்கிற பிள்ளைகளைப் பார்க்கிறபோது நம்மில் எவ்வளவு பேருக்கு 'ஏதாவது செய்ய வேண்டும்' என்று தோன்றுகிறது? இன்னும் ஒரு படி மேலே போய் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நம்மில் எத்தனை பேர் அதைக் கவனிக்கிற அளவுக்கான மனசையாவது வைத்திருக்கிறோம்?
மக்கள் தொகை மிகுந்த நெருக்கடியான இந்த தேசத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். உண்மையில், நம்மால் முடிந்த வரை ஏதாவது செய்ய வேண்டும் என்றுகூடத் தோன்றாத அளவுக்கு நம் மனசு மழுங்கிப்போய்க் கிடக்கிறது.
முதலாளித்துவத்தைப் போதிக்கிற தேசங்கள்கூட, எளிய மனிதர்களுக்குத் தேவையான இடம் தருகிறது. ஆனால், ஜனநாயகவாதிகளான நாம்தான் மனசுக்குள் முதலாளிகளாகவும் வாய்ப்பேச்சில் ஜனநாயகமுமாக முரண்பட்டு நிற்கிறோம்.
உலகின் வளர்ந்த பல நாடுகளிலும் பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை. பச்சை விளக்கு எரிகிற நிலையிலும் அவசரமாக சாலையைக் கடக்க முனையும் ஒருவர் கைகளைக் காட்டினால், கார்கள் நிற்கின்றன.
அந்த மாண்பும் பண்பும் நமக்கு ஒரு விஷயத்தை சொல்லித்தருகின்றன. அவசர வேலையாகப் போகிறவர், காரிலோ, பைக்கிலோதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடந்து போகிற, அந்த எளிய மனிதருக்கும் ஆயிரம் அவசரம் இருக்கும். ஏதாவது வாகனத்தை வைத்திருப்பவர் தனது வேலையை விரைந்து முடிப்பதற்கு ஒரு ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கிறார். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் இல்லாத மனிதர்கள் எதைக்கொண்டு தங்கள் வேலையை முடிப்பது?
|