காந்தி பற்றிய சினிமா என்றால், நம் நினைவுக்கு வருவது ரிச்சர்ட் ஆட்டன்பரோ எடுத்த 'காந்தி' திரைப்படம்தான். ஆனால், 1940-லேயே காந்தி பற்றிய இரண்டரை மணி நேர ஆவணப்படம் ஒன்றை எடுத்துவிட்டார் ஏ.கே.செட்டியார். 1937-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டப்ளினுக்கு கப்பலில் சென்றுகொண்டு இருந்தபோது, காந்தி பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது. உடனடியாக, அதற்கான வேலைகளில் இறங்கிவிடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் அதற்காக அவர் உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல்கள் பயணம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்து, அவர்கள் காந்தியைப்பற்றி எடுத்த படச் சுருள்களைச் சேகரிக்கிறார். 50 ஆயிரம் அடிகள் நீண்ட அந்தப் படத்தை 12 ஆயிரம் அடிகளாக எடிட் செய்து 1940-ம் ஆண்டு வெளியிட்டார் ஏ.கே.செட்டியார். அப்போது அவர் வயது 29 என்பதைக் கவனியுங்கள். இந்தப் படத்தைத் திரையிட ஆங்கிலேய அரசு அனுமதி தராததால், வாஷிங்டனில் 1953-ல் ஆங்கில வர்ணனையுடன் வெளியிட்டார். இந்தியத் தூதரகத்தால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், அப் போதைய அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவரும் பல வெளிநாட்டுத் தூதர்களும் கலந்துகொண்டார்கள். அதிபர் கலந்துகொள்வதால், பார்வையாளர்கள் அனைவரும் கோட், சூட்டுடன் வர வேண்டும் என்றது அழைப்பிதழ். 'அரை நிர்வாணமாக ஒரு சந்நியாசியைப்போல் வாழ்ந்த தலைவரின் படத்தைப் பார்க்க கோட்டு, சூட்டுடன் செல்ல வேண்டியிருந்தது!' என்று ஒரு விமர் சகர் அப்போது எழுதினார்.
இந்த ஆவணப்படத்தை அமெரிக்காவின் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் 20 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியபோது, 'காந்தியை நான் விற்க மாட்டேன்' என்று சொன்னவர் செட்டியார். இன்று வரை காந்தி பற்றி எடுக்கப்பட்ட ஒரே ஆவ ணப்படம் இதுதான். இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, காந்தி உயிருடன் இருக்கும் போதே எடுக்கப்பட்டது இது. ஆனால், தமிழர்களாகிய நாம் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதில் தலைசிறந்தவர்கள் ஆயிற்றே? அதனால், அந்த அரிய பொக்கிஷத்தைத் தொலைத்துவிட்டோம். சுமார் 40 ஆண்டுகள் அந்தப் படம் எங்கே இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. பின்னர், ஆய் வாளர் வெங்கடாசலபதி இதை அமெரிக்காவில் கண்டுபிடித்துத் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார். ஆனாலும், தனக்குக் கிடைத்து இருப்பது செட்டியார் ஹாலி வுட்டுக்காக எடிட் செய்த 50 நிமிடப் படம்தானே தவிர, தமிழ் ஒரிஜினல் அல்ல என்கிறார் வெங்கடாசலபதி.
|