Published:Updated:

உயிர் மொழி! - 10

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 10

உயிர் மொழி!  - 10
உயிர் மொழி!  - 10
உயிர் மொழி!  - 10
உயிர் மொழி!  - 10
டாக்டர். ஷாலினி
உயிர் மொழி!  - 10

பெண்கள், ஆண் குழந்தைகளை அடக்கி ஆளும் அஸ்திரங்கள் ரகசியமானவைதான்.

ஆனால், அவற்றை அவர்கள் மிக பகிரங்கமாகவே பயன்படுத்துகின்றனர். அப்படி என்ன அஸ்திரங்கள் அவை?

அஸ்திரம் 1: பிரசவிக்கும் பெண்ணின் தன்மை. 'பத்து மாசம் சுமந்து பெற்ற தாய்!' என்று ஒரு தாய் ஆரம்பித்தாளே போதும், சப்த நாடியும் அடங்கி மகன் உடனடி சரண்டர். பெண் குழந்தையிடம் இந்த பாச்சா பலிக்காது. காரணம், அவளும் பின் ஒருநாள் இதேமாதிரி பிரசவிக்கத்தானே போகிறாள். அதனால், அம்மாவால் இந்த விஷயத்தில் மகளை அதட்ட முடியாது. ஆனால், மகன் மட்டும் 'எனக்கு இந்தப் பிறவியைத் தந்த தாய்க்கு என்ன செய்தாலும் தகும்!' என்கிற தியாகி மனப்பான்மைக்கு மாறிவிடுவான். கொஞ்சம் துடுக்கான பையன் என்றால், 'யானை 22 மாதம் சுமக்குது... 10 மாதத்தைப் பெரிதாய் பேசுகிறீர்களே?' என்றோ, 'நானா பெத்துக்கச் சொன்னேன்?' என்றோ கேட்டு அம்மாவின் வாயை அடைத்துவிடுவான். ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு அம்மா சென்டிமென்ட் அதிகம் என்பதால் அதை மீறி இப்படி எல்லாம் அறிவியல்பூர்வமாக அவர்களால் யோசிக்க முடிவது இல்லை!

உயிர் மொழி!  - 10

அஸ்திரம் 2: அப்பாவின் விந்து அணுக்களில் சரிபாதி X வகை குரோமோசோம்கள், மீதி Y வகை குரோமோசோம்கள். அம்மாவின் கரு முட்டையில் இருப்பது எல்லாமே X வகை குரோமோசோம்கள்தான். அப்பாவின் X அம்மாவின் X உடன் சேர்ந்தால் XX என்றாகி, பெண் குழந்தை பிறக்கும். அப்பாவின் Y அம்மாவின் X உடன் சேர்ந்தால் XY என்றாகி, ஆண் குழந்தை பிறக்கும். ஆக, பிள்ளை ஆணா... பெண்ணா என்று முடிவு செய்வதே அப்பாதான். ஆனால், ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பது, என்னவோ அவளே சுயமாகச் செய்த மிகப் பெரிய சாதனை என்கிற மாதிரிதான் சில பெண்கள் நடந்துக்கொள்கிறார்கள். இதனால், தங்கள் ஆண் குழந்தையை ஓர் அந்தஸ்து அறிகுறி status symbol என்கிற மாதிரியே நடத்துகிறார்கள். அதிக விலையுள்ள பொருளைப் பொத்திப் பாதுகாத்து, தான் மட்டும்வைத்து விளையாடி மகிழ்வதுபோல, தங்கள் மகனை யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பாமல், தான் மட்டும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இப்படி பிரசவத்துக்குப் பிறகும் தொப்புள் கொடியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தால், பையன் எப்படி வளர்வான்? கொடி சுற்றிய பிள்ளை மாதிரி, இந்த சிக்கலிலேயே மாட்டி அவன் முதிர்ச்சி அடையாமல் போய்விடத்தானே வாய்ப்பு அதிகம்?! இப்படி ஒரு இன்செக்யூர் அம்மா, தன் மகனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவனை வளரவிடாமல் தடுப்பதைத்தான் persistent umbilical cord syndrome என்கிறோம்.

அஸ்திரம் 3: பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி வளர்ப்பதும் அம்மாவின் பணிகளில் ஒன்று. இதை மிக சாதுர்யமாகப் பயன்படுத்தி, தனக்கு சாதகமான கதைகளை சொல்லி, பையனின் மனதில் தனக்கு ஒரு மையப் பகுதியை அபகரித்துக்கொள்கிறார்கள் சில பெண்கள். உதாரணம்... புத்லிபாய். தன் மகன் மோகன்தாஸுக்கு அவர் சொன்ன கதை என்ன தெரியுமா? கண் இல்லாத பெற்றோரை கூடையில்வைத்து ஊர் ஊராகச் சுற்றிய ஷ்ரவணின் கதை. ஷ்ரவண் தன் பெற்றோர் மேல்வைத்த பாசத்துக்கு ஒரு பளிச்சிடும் உதாரணமாக இருக்கலாம். ஆனால், இதனால் அவன் மரபணுக்கள் பரவவில்லையே. ஆக, ஷ்ரவண் ஒரு genetic loser. இவன் கதையைப்போய் தன் மகனுக்கு சொல்லித்தருவாளா ஒரு தாய்? சொல்லித் தந்துகொண்டேதான் இருக்கிறார்கள், நம் கண் எதிரிலேயே! ஆனால், அது குழந்தைக்கு உபயோகமான கதை இல்லை என்றும், அது தாய் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள செய்யும் ஒரு long term உத்தி என்றும் நமக்குத்தான் புரிவது இல்லை!

அஸ்திரம் 4: எத்தனை வீடுகளில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரி வளர்க்கிறார்கள்? ஆண் என்பதாலேயே, அவனுக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள், சொகுசுகள் என ஓரவஞ்சனையாக வளர்க்கும் அம்மாக்கள்தான் நம் ஊரில் ஏராளம். ஏன், ஆண் குழந்தைகளை மட்டும் அம்மாக்கள் இப்படி விழுந்து, விழுந்து கவனிக்கிறார்கள்? காட்டில் வாழும் குரங்குக் கூட்டங்களில் பெண்களும் குட்டிகளும் டாமினென்ட். அவை ஆண் குரங்கைத் தொட்டுத் தடவி, பேன் பார்த்து தாஜா செய்துகொண்டே இருக்கும். இப்படி தன்னை தாஜா செய்யும் குரங்குகளை அந்த ஆண் பாதுகாக்கும். ஆக, அதிக தாஜா = அதிகப் பாதுகாப்பு. இதே விதியைத்தான் பெண்கள் தங்கள் இஷ்ட ஆண்களிடம் பயன்படுத்துகிறார்கள். இவள் தன் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள என்னை இப்படி எல்லாம் தாஜா செய்கிறாள் என்று புரிந்துகொள்ளும் விவஸ்தை பல ஆண்களுக்கு இருப்பது இல்லை என்பதால், 'என்னை என்னமா கவனித்துக்கொள்கிறாள். இவளுக்கு என் மேல் எவ்வளவு ஆசை... இவளுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறோனோ?' என்று மிகச் சரியாக வலையில் விழுகிறார்கள்.

அஸ்திரம் 5: பெரும்பாலான தாய்மார்கள், ஆண்களுக்கு சமையல், சலவை, வீட்டு துப்புரவு பணிகள் மாதிரியான வேலைகளை சொல்லித்தருவதே இல்லை. கேட்டால், இது எல்லாம் பெண்களின் வேலை என்று சொல்லிவிடுவார்கள். பிரசவிப்பது ஒன்றைத் தவிர, பெண்கள் மட்டும் செய்யும் வேலை என்று ஒன்று கிடையவே கிடையாதே! ஆனால், அம்மாக்கள் இப்படி ஓர் அப்பட்டமான பொய்யை ஏன் சொல்கிறார்கள்? இந்த வேலைகளை எல்லாம் அவனே சுயமாக செய்து பழகிவிட்டால் பிறகு அம்மாவின் தயவு அவனுக்குத் தேவைப்படாதே! அதனால், ஆண் குழந்தைகளுக்கு சுய பராமரிப்பு சம்பந்தமான சூட்சுமங்களைச் சொல்லியே தராமல், அவர்களை நிரந்தரமாக தன்னையே நம்பி வாழ வேண்டியவர் ஆக்கிவிடுகிறார்கள் சில தாய்மார்கள்.

மிகக் கவனமாக யோசித்தால், உங்களுக்கே புரியும். பெற்று, பாலூட்டி, பாதுகாத்து, கதைகள் சொல்லி, திறமைகளை வளர்த்து, அவனுக்கு என்று ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டுவதுதான் ஒரு தாயின் கடமை. ஆனால், இந்த ஒவ்வொரு பணியையுமே தனக்குச் சாதகமாக இருக்கும்படியே மாற்றி செய்து, அன்பெனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி மகனை தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கும் அடிமையாக்கிவிடுகிறார்கள் பல தாய்மார்கள். இப்படி தாங்கள் அடிமையாக்கப்பட்டது தெரியாமல், 'எங்க அம்மா மாதிரி வருமா?' என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் ஆண்கள்!

உயிர் மொழி!  - 10
உயிர் மொழி!  - 10
(காத்திருங்கள்)