சாதாரணமாகப் பெரிய பேச்சாளர்கள்கூட கல்லூரிக் கூட்டங்களுக்குப் போனால், மிக ஜாக்கிரதையாகப் பேசி விட்டு வந்துவிடுவார்கள். மாணவர்கள் கலாட்டா செய்து விடுவார்களோ என்று பயம். ஆனால், பல கல்லூரிகளில் சோ எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசியிருக்கிறார். மாண வர்கள் செய்யும் தவறுகளைத் துணிச்சலாக எடுத்துச் சொல்வார்.
ஒருமுறை, உடல்நலக் குறைவால் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார் சோ. அதன்பின், எதனாலோ அவர் தலைமுடி உதிர ஆரம்பித்து, தலை மொட்டையாகிவிட்டது. முடி இல்லாத குறையை மறைக்க, பம்பாயிலிருந்து ஒருவர் 800 ரூபாய்க்கு 'விக்' செய்து வந்து கொடுத்தார்.
அதைத் தலையில் மாட்டி, கண்ணாடி முன் நின்று பார்த்தார் சோ. சுற்றி இருந்தவர்கள், "ரொம்ப இயற்கையாக இருக்கிறது!" என்று பாராட்டினார்கள். ஆனாலும், சோ 'விக்'கைக் கழற்றியெறிந்துவிட்டார்.
"என் தலை மொட்டையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே! எதற்காக நான் அதை மூடி மறைத்து, ஏமாற்ற வேண்டும்? உருவத்திற்கும் எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம்? இனி, நான் இப்படியே மொட்டைத் தலையோடுதான் இருப் பேன்" என்று சொல்லி, அப்படியே இருக்க முடிவெடுத்து விட்டார். அவர் எண்ணத்திலும் உண்மை இருந்தது. எதற்கு, யாரை, ஏன், ஏமாற்ற வேண்டும்?
சில வருடங்களுக்கு முன், அண்ணா சாலையில் தி.மு.க- வின் மாபெரும் ஊர்வலம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.கூட்டத்தின் நடுவே சோ வந்து மாட்டிக்கொள்ளப் போகிறாரே என்று பலரும் பயந்துகொண்டிருந்தார்கள். காரணம், அப்போது அவர் தி.மு.க-வின் கொள்கைகளைக் காரசாரமாக விமரிசித்துக்கொண்டிருந்தார்.
சோ, டி.வி.எஸ்-ஸுக்குப் பக்கத்திலிருக்கும் ஸ்மித் ரோடில் காரை நிறுத்திப் பூட்டிவிட்டு, நடந்தே ஊர்வலத்திற்குள் புகுந்து, அண்ணாசாலையைக் குறுக்கே கடந்து, துக்ளக் ஆபீஸுக்கு வந்துவிட்டார். சரியான துணிச்சல்காரர்!
எதற்கும் அஞ்சமாட்டார். ஒளிவு மறைவு கிடையாது. தவறு செய்தவர்களைக் கடிந்துகொள்வார். பின்னர், "ஏதோ வேகத்திலே கோபிச்சுக்கிட்டேன். இருந்தாலும், நீ செய்தது தப்பு!" என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிப்பார்.
\ பாலா
இளவரசர் திருமணத்தில் ராஜன் பாட்டு!
| |