"உன் வயித்துலே வளரும் சிசுவை ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் கலைச்சுடும்மா..." என்று பெற்றவர்கள் கொடுக்கும் அறிவுரையைப் புறக்கணித்து, பிறக்கும் குழந்தையை அப்பன் பெயர் தெரியாத அநாதையாக்க விரும்பாமல், அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்தவனை அடையாளம் காட்டியே தீருவேன் என்ற பிடிவாதத்தோடு, தன் மானம் வீதிக்கு வந்துவிடக்கூடிய விபரீதத்தையும் பொருட்படுத்தாமல், வக்கீல் சகுந்தலாதேவியின் (சுஜாதா) துணை கொண்டு நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்கும் ராதா, நிச்சயமாக வித்தியாசமானவள்தான்.
திருமணத்துக்கு முன்பு இளசுகள் வரம்பு மீறும் போதெல்லாம் இயற்கை பெண்களை மட்டும் தண்டிக்கிறது. இதற்காக விதியை நொந்து அழாமல், பெண்கள் சீறி எழுந்து சட்டத்தின் துணையோடு ஆண்களைத் தண்டிக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தில் சுளீரென்று நன்றாகவே சாட்டையடியாகக் கொடுத்திருக்கிறார்கள். அதனாலேயே படத்தில் ஓரிரு இடங்களில் நெருடும் சிறு குறைகளை மறந்து, மன்னித்துவிடுவோம்.
பெண்கள் சங்கத் தலைவி மாதிரி பெயரளவில் வந்து போகாமல், மாதர்க்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மனத் தளவில் நினைத்து வாதாடும் வக்கீல் சகுந்தலாதேவியின் பாத்திரத்துக்கு சுஜாதாவைத் தவிர வேறு யாராவது பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே!
"பொண்ணுங்க பொய் சொல்ல ஆரம்பிக்கிறதே பெத்தவங்ககிட்டேதான்!"
"நம்பளை மாதிரி ஏழைங்களுக்குப் பரம்பரை ஃபிக்ஸட் டெபாசிட் - மானம்!"
- இப்படிப் பல இடங்களில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் வெளுத்துக்கட்டியிருக்கிறார்.
'காட்டேஜில் எப்படியெல்லாம் கட்டிப் பிடித்தீர்கள்?' போன்ற, எந்தப் பெண்ணுமே பதில் சொல்லக் கூசும் கேள்விகளைப் பூர்ணிமாவிடம் எதிர்க்கட்சி வக்கீல் என்ற முறையில் ஜெய்சங்கர் கேட்டு முடித்ததும், (அந்தக் காட் சியில் ஒலியை 'கட்' செய்திருப் பது புத்திசாலித்தனம்!) அதே ஜெய்யைக் கூண்டிலேற்றி, சுஜாதா அதே கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போது - தியேட்டரில் நல்ல ரீயாக்ஷன்!
|