கடவுளே, தேவதைகள் தாங்கள் செய்வது இன்னதென்று ஏன் அறியாது இருக்கின்றன? காதலியை மறக்க ஆண்களால் முடியும். ஆனால், காதலையே மறக்க பெண்களால்மட்டும் தான் முடியும்.
ஆக, எல்லாம் முடிந்துவிட்டது. இந்த 14 வருடங்களில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக் கத் துவங்கினேன். நிகழ்காலம் திரும்பியதும், அமெரிக்கக் கடவுள் என் ஓலைக் கூரைக் கடைக்கு வந்து, என் தோப்பூர் பிரியாணியை உண்டு, சுவைத் துப் பாராட்டி எழுதப்போகிறார். அதன் பிறகு, நான் மெள்ள முன்னேற இரண்டு, மூன்று வருடங் கள் தேவைப்படுகின்றன. அதற்குள், நான் வெற்றி பெறுவதைப் பார்க்காமலேயே என்னை மிரட்டிச் சென்ற கையோடு, சந்தியாவின் அண்ணன்கள் அவளை வேறு யாருக்கோ கல்யாணம் செய்துவிடு கிறார்கள். அந்த 'வேறு யாரோ ஒருவன்' என்னை விடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். அவன் சந்தியாவின் மனசுக்குள் கம்பீரமாகக் காலம் தள்ளு கிறான்.
- இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.
சந்தியா இன்னும் தொலைபேசியை விடவில்லை. சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே இருந்தாள். படுத்திருந்தவள் ஒயிலாக அமர்ந்து பேசத் துவங் கினாள்.
ஏக்கமுடன் அவளையே பார்த்தேன். சந்தியா, நீ உன் கணவனை நேசி. ஆனால், என்னை இந்த அளவு வெறுத்து ஒதுக்கி, கேவலமாகத் துரத்தியடிக்கிற அளவு நான் மோசமானவனா? உன் மனதில் கொஞ்சம் நாகரிகமான இடத்தை நீ எனக்குத் தந்திருக்கலாம். சிறிது கண்ணியமாக என்னை நினைத்திருக்கலாம்.
இனி, இங்கு என்ன வேலை? கிளம்ப வேண்டியதுதான் சந்தியா, குட் பை!
காதல் முடிந்துவிட்டது. சொர்க்கத்துடன் எனக்கு இருந்த லைஃப் டைம் கனெக்ஷன் பிடுங்கப்பட்டுவிட்டது. நான் ஜெயிக்கிறபோது யாரெல்லாம் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ, யாரெல்லாம் நான் ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அவர்கள் யாருமே நான் ஜெயித்தபோது என்னுடன் இல்லை. எனக்குப் பிரியமானவர்கள் இல்லாமல், நான் யாரிடம் என் பதக்கங்களைக் காட்டுவேன்? உண்மையிலேயே நான் பெற்றது, வெற்றியா?
சலிப்பு அடைந்தேன். வாழ்க்கைக்கு ஆணையிட நாம் யார்? அது கையெழுத்திட்டு வழங்கும்; அல்லது திணித்துச் செல்லும். நாம் பொறுக்கிக்கொள்ள வேண்டும். எந்த மனநிலையில் அதைப் பெறுகிறோமோ... மடையா, இந்த இடத்தில் தத்துவம் தேவையா? சந்தியா கன்னத்தில் பளாரென அறைந்திருக்கிறாள். அவளை ஆசை தீரப் பார்த்துவிட்டு, இடத்தைக் காலி செய்து, அடுத்த வேலையைப் பார். சோகமுடன், வேதனையுடன், தவிப்புடன், காதலுடன் அவளைப் பார்த்தேன். குட் பை!
வாசல் வரை சென்றவுடன், மீண்டும் தாங்க முடியாமல் அவள் அருகே வந்து, அவளைச் சோக முடன், வேதனையுடன்...
சந்தியா அழகி என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவள் எனக்குக் கிடைக்காததால் இப்போது பேரழகி ஆகிக்கொண்டு இருந்தாள். பிரமிப்புடன் அவளைப் பருகினேன்.
ஒரு புத்தகத்துடன், இப்போது அவள் குப்புறப்படுத்திருந்தாள். அழகான பாதங்கள், தங்கக் கொலுசு, கெண்டைக்காலின் திரட்சி, பின்புற வளைவுகள்... அப்படியே முன்னால் வந்து... என்னுள் ஆண் உணர்வுகளைக் கிளர்ந்து எழச் செய்வதைத்தானே சற்றே வெளியே தெரிந்த அவளது பெரிய மார்புகள் விரும்பின?
இந்தக் கணமே அவளுக்கு ஒப்புக்கு இரண்டு துண்டுத் துணிகள் கொடுத்து, பனிப் பிரதேசத்தில் ஆடவிட்டால்... தொப்பி, ஜீன்ஸ், மஃப்ளர், ஸ்வெட்டர் கோட், கை உறைகள், ஷூக்கள், கண்ணாடி எல்லாம் அணிந்த கதாநாயகன் கைகளைக் கட்டிக்கொண்டு 'உடைகள் தர மாட்டேன்; ஆனால், உயிரையும் கொடுப்பேன்' என்று பாட முன் வருவான்போல செழுமையாகக்கிடந்தாள்.
இந்த வனப்பும், அழகும், கவர்ச்சியும் எனக்குச் சொந்தம் இல்லை. நழுவவிட்டுவிட்டேன். ஏறாத பஸ்ஸுக்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த முட்டாள் நான்!
இல்லை, நான் முட்டாள் இல்லை. ஏனென்றால், சந்தியா என்னிடம் நிகழ்காலத்தில் சொன்ன வார்த் தைகள் என் நினைவுக்கு வந்துவிட்டன.
நிகழ்காலத்தில் அவளது அண்ணன்கள் என்னை அடித்த பிறகு, என்னை மேரி வீட்டுக்கு வரச் சொன்னாள் சந்தியா. மேரி வீட்டில் நானும் அவளும் சந்தித்தோம்.
அப்போது சந்தியா, "நாளைக்கு நான் என்னையே உங்களுக்குத் தரப்போறேன். என் அண்ணன்களால் உங்களுக்கு ஏற்பட்ட காயத்துக்கு மருந்து இதுதான்" என்றாள். "மேரியின் வீட்டில் நாளை யாருமே இருக்க மாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு, "என் அன்பை உடலாலும் வெளிப்படுத்த விரும்பறேன். நாளைக்கு வாங்க... யூஸ் மீ..." என்றும் சொன்னாள்.
உடனே, அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன். காதலின் பெயரால் அவளைச் சுரண்ட முடியாது என்றும், ஒருவேளை அவளை நாளைக்குச் சந்தித்து உணர்ச்சிவசப்பட்டு அவளை உபயோகித்துவிட்டால், என் சுயமரியாதையை இழந்து என் மதிப்பீட்டில் வீழ்ந்துவிடுவேன் என்றும் முடிவு செய்தேன்.
|