திருப்பி அழைக்க நினைத்தான். பேலன்ஸ் 20 காசுதான் இருந்தது. செல்போன் நிறுவனம் கடனாகத் தரும் 10 ரூபாய் டாப்-அப்பையும் ஏற்கெனவே முடித்து இருந்தான். திடீர் சந்தேகம். யாருடைய அம்மா? அவருடைய அம்மாவா (அவனுக்குப் பாட்டி), அல்லது அவனுடைய அம்மாவா?
ஒரு ரூபாய் போன் பூத் வைத்திருக்கும் சேட்டனுக்கும் தீபாவளியா என்ன? 7 மணிக்கே கடையைப் பூட்டியிருந்தான். அவனுக்கு எல்லாம் என்ன மயித்துக்கு தீபாவளி? எரிச்சல் கூட ஆ...ஆ...ஆ... கெட்ட வார்த்தையில் மொட்டை மாடி அதிரக் கத்தினான். தன்னுடைய அம்மாவாகத்தான் இருக்கும் என முடிவு செய்து கொண்டான்.
மெயின் ரோட்டுக்குப் போனால் போன் பண்ணலாம். அண்ணாச்சி கடை திறந்துவைத்திருப்பார். நடுவில் வயிறு பசித்தது. அம்மா எப்படி இறந்தாங்க... என்னாயிருக்கும்? வாழ்க்கை பூரா அந்தாளோட வாழ்ந்து அழுகிப்போய் நொந்தவங்களுக்கு, இப்பவாவது விடுதலை என நினைத்துக்கொண்டான். அப்பாவை மனதுக்குள்ளேயே அவனுக்கே அவனுக்கான சில கெட்ட வார்த்தை களால் திட்டினான். சோறு போடாமக் கொன்னுருப்பானோ? அடிச்சிருப்பானோ? போன முறை போனப்ப, ஷுகர் அதிகம்னாங்களே. நெஞ்சு வலியா இருக்குமோ? மூட்டு வலின்னாங்களே... நீலகிரித் தைலம் கேட்டாங்களே... தற்கொலையா இருக்குமோ? இரண்டு நாள் முன்னகூட நல்லாதானே பேசினாங்க.
அம்மாவின் மரணம், அப்பாவின் கொடுமை, விடிஞ்சா தீபாவளி. அழுது புலம்ப ஆயிரத்து சொச்சக் காரணங்கள் இருந்தன. இதை எல்லாம் தாண்டி, இப்போதைய தலையாய பிரச்னை பேங்க்கில் இருக்கும் 232 ரூபாயும் 50 காசுகளும்தான்.
சம்பளத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. அறைத்தோழர் கள் அனைவரும் ஊருக்குச் சென்றுவிட்டனர். இவன் மட் டும்தான் போகவில்லை. அவர் களுக்கும் தீபாவளி. ஹவுஸ் ஓன டமும் காசு கேட்க முடியாது. வாடகை கேட்பார். சாவு என்று சொன்னாலும், 'பொய் சொல்லா தடா, காசுக்காக அம்மாவப் போய் செத்துட்டாங்கன்னு சொல்றியே' என்று திட்ட நேரிடலாம். தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
கோவைக்கு டிரெயின் என்றால் 127 ரூபாய். கூட்டம் நிரம்பி வழியும். பஸ் என்றால் 198. ஆனால், தீபாவளி என்பதால் பஸ் கிடைப்பது அரிது. உடனே கிளம்ப வேண்டும். கையில் இருந்த செல்போனில் நேரம் பார்த்தான். 8.30. சேரன் 10.30-க்கு, 9-க்கு புளு மவுன்டன். இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் ரயில் நிலையம் அடைய வேண்டும்.
வயிறு அதிகமாகப் பசித்தது. மதியம் தின்ற எலுமிச்சை சோறு 6 மணிக்கே ஜீரணம் ஆகியிருக்க வேண்டும். இவன் பசியைப்பற்றி நினைக்க, வயிறு கர்ர்ர்ர் விர்ர்ர்ர் என இழுத்துப் பிடித்துக் குறட்டைவிட்டது. குடலில் உருவாகும் வெற்றிடத்தால் காற்றடைப்பு உருவாகி இருக்கலாம். லேசாக ர்ர்ர் என ஏப்பம் வந்தது. ச்சே! அம்மா செத்துட்டாங்க, பசியப்பத்தி நினைக்கவே கூடாது என நினைத்துக்கொண்டான்.
ஆனாலும், வயிற்றில் இருந்து தொடர்ச்சியாக வெளியானஅந்த அபஸ்வர நாதம் ர்ர்ர் சுர்ர்ர் என்று பசியை நினைவூட்டிக்கொண்டே இருந்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அழுகை வரவில்லை. அழ முயன் றும் அழுகை வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அழாமல் இருப்பது தவறாக இருக்கலாம்.
துணி எல்லாம் ஒன்றும் வேண்டாம், பைகூட எடுக்க வேண்டாம். ஜட்டி, டூத் பிரஷ் வேண்டும். அதை மட்டும் எடுத்து பேன்ட் பாக்கெட்டில்வைத்துக்கொண்டான். தன்னுடைய ஸ்ப்ளெண்டரில் ஏறி உட்கார்ந்து, பெட்ரோல் டேங்கைத் திறந்து ஆட்டி ஆட்டிப் பார்த்தான். ங்ங்ங் என மணியோசை மாதிரி பெட்ரோல் குலுங்கும் ஓசை கேட்டது. ரொம்பக் குறைவாகத்தான் இருந்தது. சென்ட்ரல் வரைக்கும் தாக்குப்பிடிக்கணும் ஆண்டவா!
வழியெல்லாம் வண்ண வண்ண வாண வேடிக்கைகளாலும் டாம்டூம் பட்டாசுகளாலும் நிரம்பி இருந்தது. அக்கவுன்ட்டில் சாப்பிடும் ஆன்ட்டி கடை பூட்டியிருந்தது. இரண்டு இட்லி பார்சல் செய்துகொள்ள நினைத்திருந்தான்.
சாலைகளில் பெண்கள் அழகாக பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தனர். சிலர் பயந்தபடி, சிலர் தைரியமாக, இன்னும் சிலர் போலியான தைரியத்தோடு... இதையெல்லாம் ரசிக்கக் கூடாது, அம்மா இறந்து விட்டார்.
வண்டியின் வேகம் கூட்டினான். மணிக்கட்டு கடிகாரம் 9.00 காட்டியது.
கனரா வங்கியின் ஏ.டி.எம்மில் வண்டியை நிறுத்தி இருக்கும் 200 ரூபாயைத் தட்டினான். டிரான்சாக்ஸன் டிக்லைன்டு என்றது. கோபத்தில் கையில் இருந்த வண்டி சாவியால் ஏ.டி.எம் ஸ்க்ரீனில் நான்கு கீறல் போட்டுவிட்டு வெளியேறினான். அது எக்ஸ் மார்க் போல் இல்லாமல் ஒய்போல் இருந்தது. கொஞ்சம் தள்ளி இன்னொரு எஸ்.பி.ஐ இருந்தது. அங்கேயும் டிக்லைன்டு.அவனுடையது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் எதுவும் இல்லை. நுங்கம்பாக்கம் போக வேண்டும். வேறு வழி இல்லை... போனான். பணம் எடுத்தான், வெளியில் வந்து வண்டியை ஸ்டார்ட்டி கொஞ்ச தூரம் போனதும் வண்டி முக்கி முக்கி முனகி க்...க்...க்...இர்ர்ர்... பின் அணைந்து பெட்ரோல் இல்லை என்றது.
நடுரோட்டில் நின்றபடி... வேறு ஒரு கெட்ட வார்த்தையோடு அந்தக் கெட்ட வார்த்தையை உரக்கக் கத்தினான். அம்மாவு டைய மரணத்தைவிடவும் அது அவனை மிகவும் வருத்தியது. வண்டியைத் தள்ளிக்கொண்டே மீண்டும் மீண்டும் ச்சே... ச்சே! என்று அதே கெட்ட வார்த்தையை விடாமல் மந்திரம்போல உச்சரித்தபடி சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்குக்குச் சென்றான். கையில் இருந்த 200 ரூபாயில் 30 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதே திட்டம். பாழாய்ப் போன பங்கில் 30 ரூபாய்க்குக் கிடையாதாம். 50 ரூபாய்க்கு மட்டும்தானாம். பெட்ரோல் நிரப்பிக்கொண்டான். மணிக்கட்டில் மணி 9.30. வயிறு இன்னும் அதிகமாகப் பசித்தது. மீண்டும் அதே வார்த்தையை மந்திரம்போல சொல்லிக்கொண்டான். முணுமுணுத்தபடியே ஆக்ஸிலரேட்டரைத் திருகினான். பசித்தது.
சென்ட்ரலில் வண்டியைக் கட்டண பார்க்கிங்கில் போட்டுவிட்டு, டோக்கனை வாங்கி கசங்காமல் பர்ஸில் பத்திரப்படுத்திக்கொண்டான். டிக்கெட் கவுன்ட்டரில் கூட்ட நெரிசல். அம்மாவின் நினைவு வேறு இடைஇடையில் வந்து எரிச்சலூட்டியது. நான்கு நாட்கள் கழித்து செத்துப்போயிருக்கக் கூடாதா? க்யூவில் நின்றான். அரை மணி நேரம் நின்றான். மணி 10. கவுன்ட்டரில் கோவைக்கு டிக்கெட் எடுத்தான். தம் அடிக்க வேண்டும்போல் இருந்தது. பாக்கெட்டைத் தடவினான், 23 ரூபாய் இருந்தது. கோவையில் இறங்கி ஊருக்குப் போக பஸ்ஸுக்கு 10 ரூபாய் போதும். டிக்கெட்டோடு வெளியே ஓடிப் போய் ஒரு ஃபில்டரை வாங்கிப் பற்றவைத்தான். அம்மா நினைவு வந்தது. புகையோடு அந்த கெட்டவார்த்தையையும் உரக்கச் சொன்னான். அவனுக்கு முன்னால் புகைத்தவர் திரும்பிப் பார்த்தார். இவன் அசடாகச் சிரித்துவைத்தான். 'ச்சே... அம்மா செத்துட்டாங்க. எப்புடிடா சிரிக்கற? அதுவும் போலியா?' அவனையே அவன் அதே கெட்டவார்த்தையால் திட்டிக்கொண்டான்.
மாமாவுக்கு ஒரு ரூபாய் போனில் பேசினான்... "மாமா?"
"நெஞ்சு வலி அதிகமாச்சுன்னு ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோனோம். போற வழிலயே உயிரு போயிருச்சுன்னாங்க."
"சரி மாமா கிளம்பிட்டேன். வந்துர்றேன். ஸ்டேஷன்லதான் இருக்கேன், செத்தது எந்த அம்மா?"
"அறிவு கெட்டவனே! உங்கம்மாதான்டா!"
மிக நீண்ட மௌனத்துக்குப் பிறகு, "ம்" என்றான்.
"சரி குமாரு... வரும்போது ரெண்டாயிரம் ரூவா ரெடி பண்ணிட்டு வா. இங்க நிறையப் பேருக்கு ரூவா குடுக்கணும்.. "
"ம்ம்..." என்றபடி போனை பேய்த்தனமாக ரிஸீவரால் அடித்தான். மாமாவை அதே கெட்ட வார்த்தையில் திட்டினான். பசித்தது.
|