ஒவ்வொரு மனிதருக்கும் பிரச்னைகள் இருக்கும். 'வீட்டுப் பிரச்னையை வீட்டோடு விட்டுவிட்டு வா!' என்று சொல்கிற கதை எல்லாம் அரதப் பழசு. மனிதனை மனிதனாக நடத்துவதுதான் மேலாண்மையின் முதல் அரிச்சுவடி. அவன் ரோபோ கிடையாது. ஆபீஸ் வாசலை மிதித்தவுடன், தன் வீட்டுப் பிரச்னைகளை தனியே கழட்டிவைத்துவிடுவதற்கு. அவன் சந்திக்கிற பிரச்னை அவன் செய்கிற வேலையிலும் பிரதிபலிக்கும். அந்தப் பிரதிபலிப்புதான் வேலையில் தவறாக எதிரொலிக்கும். மற்றபடி, ஒரு பணியாளன் வேண்டுமென்றே தவறுகள் செய்ய மாட்டான். அந்தத் தவறு, மற்றவர்களின் வேலைகளையும் பாதிக்கிறபோது, அது நிறுவனத்தின் பிரச்னையாக உருவெடுக்கும். ஆக, அந்தப் பிரதிபலிப்பு ஏற்படுகிறபோதே அந்தப் பணியாளரைத் தனியாக அழைத்துப் பேச வேண்டும். அவரின் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். 'என்னப்பா... என்ன பிரச்னை?' என்று எடுத்தவுடனே கேட்டால், பதில் வராது. ஒரு பிரச்னையின் வேர் எங்கு இருக்கிறது என்பதை அறிய, அவரைச் சுதந்திரமாக இருக்கும்படியான உணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்குத்தான் இந்த கவுன்சிலிங் திறன்கள் தேவைப்படுகின்றன. இதில் முக்கியமான அம்சம், நீங்கள் அவருக்குத் தர வேண்டியது ஆலோசனைதானே தவிர, அறிவுரை அல்ல!
பாராட்டும் குணம்:
அந்த நிறுவனத்தில் அனைவருக்குமே சந்தோஷை ரொம்பப் பிடிக்கும். சந்தோஷ் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், அவன் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் அந்த மேலாளர். முன்பு இருந்த நிறுவனத்தில் மிகவும் முசுடு என்று பெயர் எடுத்தவர் அந்த மேலாளர். அவர் அறைக்குச் சென்றதும் அவரை வாழ்த்தி வரவேற்க ஊழியர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்றார்கள். போன வேகத்திலேயே எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு வந்தார்கள். காரணம், அவர்கள் எப்படிப் பாராட்டினாலும், அவர் ஒரு புன்னகைகூடச் செய்யவில்லையாம். ஏன் என்று கேட்டால், அவர் எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காதவராம். கடைசியாக, சந்தோஷ் சென்றான். அரை மணி நேரம் கழித்து முகத்தில் சிரிப்புடன் வந்தான். எல்லோரும் என்னவென்று விசாரிக்க, அவன் மேனேஜர் தன்னைப் பாராட்டியதாகச் சொன்னான். அனைவருக்கும் ஆச்சர்யம். '30 ஆண்டு காலமாக வேலை செய்பவர்களையே ஒரு வார்த்தை விசாரிக்காமல், வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன உன்னை மட்டும் எப்படிப் பாராட்டினார்?' என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில், 'எந்த ஒரு புகழ்ச்சிக்கும் மயங்காத ஒரு மாமனிதரை இன்றுதான் பார்க்கிறேன் என்று பாராட்டினேன்!' என்றான்.
'பணத்தால் வாங்க முடியாத மனிதர்களைக்கூட பாராட்டுகளால் வாங்கி விட முடியும்!' என்றான் சீஸர். மனம் திறந்த பாராட்டு என்பது ஒரு கிரியா ஊக்கி. இன்று பல நிறுவன மனித வளத் தலைவர்களுக்குத் தங்களின் பணியாளர்களைப் பாராட்டத் தெரியவில்லை. ஒரு கைகுலுக்கல், ஒரு முதுகு தட்டல், தோளில் கைபோட்டுக்கொண்டு ஒரு சிறு நடை, பதவி மறந்து ஒன்றாக கேன்டீனில் டீ சாப்பிடுவது... இவைபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றை முயன்று பாருங்களேன். அப்புறம் உங்களை எந்தப் பணியாளருக்குத்தான் பிடிக்காது. யார் பாராட்டுகிறாரோ அவரை உலகமும் பாராட்டும்!
பகிர்ந்து பணி செய்...
|