நியாயமான மாற்றங்களை உருவாக்குவதற்குக்கூட முதலில் நமது முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டி இருக்கிறது. அடிக்கடி பணி மாறும் என் நண்பர்கள் அனைவருமே நன்கு பணி செய்யக்கூடியவர்கள். தங்கள் துறையில் தேர்ந்த ஞானம் பெற்றவர்கள். ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அங்குள்ள சூழ்நிலை களை உள்வாங்கிக்கொண்டு, தன் திறனால் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிப்பதற்கு முன்னதாகவே அங்கே இருந்து விலகிவிடுவார்கள்.
ஒருவேளை கொஞ்சம் பொறுமையாக இருந்து செயல்பட்டால், அவர்கள் நினைக்கிற மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அவர்களிடம் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, என்னால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளாத மனது. இரண்டாவது, என் கருத்தை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் அனைவரும் விவரம் அறியாதவர்கள் என்கிற தவறான அபிப்ராயம்.
அப்படி என்றால், ஒரு தவறு நடக்கும்போது அதைச் சரிசெய்ய முயற்சிப்பதோ, தவறான விஷயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிப்பதோ... தேவையற்ற செயலா? இல்லவே இல்லை. மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, சரியான புரிதலோடும் நமக்கு இருக்கிற சக்தியின் அளவை அனுசரித்தும் நடக்க வேண்டும். அது ரொம்பவும் முக்கியம்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற நமது பலரின் நினைப்பிலும் துருத்திக்கொண்டு இருப்பது, 'நான் செய்வதுதான் சரி' என்ற எண்ணம். கருத்துக்கள் கேட்பதற்குக் காதுகளைத் திறந்துவைக்கிற நாம், அதை ஏற்றுக்கொள்ள மனதைத் திறந்துவைப்பது இல்லை. ஆனால், மற்ற எல்லாரும் அப்படிச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
'என் அம்மா என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என் குடும்பம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என் அலுவலகத்தில் என் கருத்தை யாரும் செவிமடுப்பது இல்லை. இந்தச் சமூகம் எனக்கு எதிராக நிற்கிறது' என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், மாற வேண்டியது நீங்கள்தானே தவிர, சமூகம் அல்ல.
ஏன் உங்களுக்கு மட்டும் அப்படி நேர வேண்டும்? ஏன் எவருமே உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும்? நல்ல விஷயத்தைச் செய்ய முயலுகிற உங்களுக்கு எதிராக சமூகம் எதற்காக நிற்க வேண்டும்?
காரணம், என் பொருட்டு இந்த உலகம் மாற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதால்தான். மாற்றத்தைக் கொண்டுவந்த பலரும், தவறான ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள். என் திட்டம்தான் சரி, அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. அப்படி நிர்பந்தம் செய்கிறவர்களின் கருத்துக்கள் நிலைத்ததும் இல்லை.
ஒரு ஞானி கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்... 'இறைவா! என்னால் எந்தெந்த விஷயங்களை மாற்ற முடியுமோ அதனைச் செய்வதற்கு உரிய துணிச்சலைக் கொடு. என்னால் எதை எல்லாம் மாற்றவே முடியாதோ அவற்றை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைக் கொடு.' உண்மையில் இதுதான் நிதர்சனம்.
|