எழுச்சி!
விதவிதமாக வருகிறது மெழுகுவத்தி
மழலைப் பானைகள்
மஞ்சள் அகல்
தேவதைப் பாவாடை
தாமரைத் திரட்சி
கொழுத்த தீக்குச்சி
வெள்ளை வெதுப்பகம்
நாணும் நாயனம்
கணினி எலிகள்
கிரிக்கெட் மட்டைகள்
கவிழ்ந்த கருங்குடை
திறந்த விண்மீன்
மெழுகுவத்திகள் மேனி-திரி மாறினாலும்
நம்பிக்கை இருக்கிறது
நெருப்புக்கு என்றும்
சிவக்கத் தெரியுமென்று!
கனவுகள் ஒரு மறு ஆய்வு!
'எனைப் பயன்படுத்துங்கள்
நிறை குறை சொல்லுங்கள்' வாசகத்தோடு
ஒரு குழந்தை விஞ்ஞானியின் வீட்டு வாசலில்
கேட்பாரற்றுக்கிடந்தது அது
அந்த வட்டமான நீர்த் தொட்டியின்
பயன்பாடு போற்றத்தக்கது
காலை எழுந்தவுடன்
தொட்டியின் நீர் அள்ளி
கண்கள் கழுவுகிறேன்
கண்கள் நனைத்து மீண்டும்
தொட்டியில் விழும் நீரில்
அன்றைய கனவும் கலந்துவிடுகிறது
தண்ணீர்த் தொட்டிக்குள் தீப்பிடித்ததுபோல
ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு மீனாய்
தினம் தினம் உருவாகும் மீன்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
வீணாய்ப் போகும் கனவு மீனாய்ப் போவது
பிடித்திருக்கிறது
மீன்களின் சுவாசம் வெளியேறும்போது
நீரில் காட்சிகள் உருவாகும்
ஒரு கனவு ஒரு காட்சி
புரிந்துகொள்வதற்குள்
உருவங்கள் யாவும் உடைந்துவிடும்
மீன் பிடித்து ஆராய்வோமென
வலை இறக்கிப் பார்த்ததில்
மீன்கள் எதுவும் சிக்கவில்லை
வலையின் குழியில்
வண்ணக் குழம்புகள்
வெள்ளைக் காகிதத்தில் சிந்தியபோது
காதலியின் கண்கள் ஓவியமாய் எழுந்தன
என்றைய கனவோ தெரியவில்லை
வலையில் நீர் பிடித்து
காகிதத்தில் தெளித்து
கடந்த வாரக் கனவுகளை
ஓவியமாகப் பெற்றேன்
எல்லா ஓவியங்களும் எழுந்த பின்
எல்லா மீன்களும் குமிழிகளாயின
ஓவியத் தாள்களை உலரவைத்து
வீடு முழுக்கத் தோரணம் கட்டினேன்
ஓரிரு தாள்களை ஒளித்துவைத்தேன்
ஒவ்வோர் இரவிலும்
கண்ணாடித் தொட்டியில்
புது நீர் மாற்றி பன்னீர் தெளிக்கிறேன்
அதிகாலை மீனும்
அதன் வழி ஓவியமும்
ஆனந்தமாய் உயிர்த்தெழ!
|