மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 10

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 10

மனம் கொத்திப் பறவை! - 10
மனம் கொத்திப் பறவை! - 10
மனம் கொத்திப் பறவை! - 10
மனம் கொத்திப் பறவை! - 10

ப்பிரிக்க நாடுகளில் இயற்கையோடு இயைந்து, சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு

இருந்தனர் ஆதிவாசிக் கறுப்பின மக்கள். அவர்களை விலங்கு களைப் பிடிப்பதுபோல் வலை போட்டுப் பிடித்து, கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு, அமெரிக்காவுக்குக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் காசுக்கு விற்றார்கள், வெள்ளைக்கார அடிமை வியாபாரிகள். அப்படி விற்கப்பட்டவர்களின் வாரிசுகளில் ஒருவரான அலெக்ஸ் ஹேலி (Alex Haley), தான் எங்கே இருந்து வந்தோம், தன் சொந்த நாடு எது, மூதாதையர் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். இதற்காகப் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும், அமெரிக்காவுக்கு அடிமைகளை ஏற்றி வந்த கப்பல்களின் பதிவேடுகளையும் படித்தார். அந்த வரலாற்றுக் குறிப்புகளை ஒரு கதையைப்போல் எழுதினார். அதுதான் வேர்கள் (Roots) என்ற அற்புதமான நாவல். 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்த நாவல் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பதற்குக் காரணம், ஞாபக சக்தி அல்ல; நெஞ்சை உருக்கும் அந்தக் கதை.

மனம் கொத்திப் பறவை! - 10

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு மூலையில், செனகலுக்குக் கீழே உள்ள நாடு காம்பியா. (ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ள ஸாம்பியா வேறு). இந்த நாட்டில் தன் தாய் - தந்தையோடும் உறவினர்களோடும் வாழ்ந்து வந்தான் குந்த்தா என்ற சிறுவன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டான். 15-வது வயதில் ஒருநாள் இசைக் கருவி ஒன்றைச் செய்வதற்குத் தேவையான மரத்தைத் தேடி காட்டுக்குச் சென்றபோது அடிமை வியாபாரிகள் இவனைப் பிடித்துவிடுகிறார்கள். அமெரிக்காவில் குந்த்தா ஒரு விலங்கைப்போல் விற்கப்படுகிறான். அந்த குந்த்தாவின் ஏழாவது தலைமுறை வாரிசுதான் அலெக்ஸ் ஹேலி. (மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் இவர்தான்). இவரைப்போன்ற பின்னணியைக்கொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணை சமீபத்தில் சந்தித்தேன்.

மனம் கொத்திப் பறவை! - 10

உலக வரைபடத்தில் அந்த நாடு ஒரு புள்ளியைப்போல் தெரியும். அதுவும் கூர்ந்து பார்க்க வேண்டும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கருக்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு அது. பெயர் ரீயூனியன். இன்னும் விளக்கமாகச் சொன்னால், மொரீஷியஸ் தீவுக்குச் சற்று கீழே இடது கைப் பக்கத்தில் மொரீஷியஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ளது ரீயூனியன். நான் அடிக்கடி நினைப்பது உண்டு, நாம் அடிமைப்பட்டதுதான் பட்டோம்; இங்கிலாந்துக்குப் பதி லாக பிரான்ஸிடம் அடிமைப்பட்டு இருக்கக் கூடாதா என்று. பாண்டிச்சேரியையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நான் சொல்வது புரியும். மும்பையில் இருந்து 5,000 கி.மீ., பாரிஸில் இருந்து 9,000 கி.மீ. தூரத்தில் உள்ள ரீயூனியனின் மக்கள் தொகை 8 லட்சம்.

இந்தத் தீவை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் சோழர்கள். முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படை 11-ம் நூற்றாண்டில் இந்தத் தீவில் இறங்கி இருக்கிறது. இந்தியா விலேயே முதன்முதலாகக் கடல் கடந்து சென்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய மன்னனும் அவன்தான். (ஆனால், இதே வரலாறு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு எப்படித் தலைகீழாக மாறியது என்று பின்னால் வரும். கவனியுங்கள்.) சோழனின் கடல் பயணம்பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் இன்றும் கிடைக் கின்றன. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு' என்ற நூலில் இதுபற்றிய விவரங்கள் உண்டு.

வடக்கே கங்கை நதி வரை தன் சாம்ராஜ்யத்தை விரித்த முதலாம் ராஜேந்திரன், பர்மா, அந்தமான் நிகோபார், சுமத்ரா, ஜாவா, மலாயா, கடாரம், காம்போஜம் (இப்போதைய கம்போடியா) என்று தென்கிழக்கு நாடுகள் பலவற்றைத் தன் ஆளுகைக் குக் கீழ் கொண்டுவந்தான். அதே போல், அவனுடைய கடற்படை இந்தியப் பெருங்கடலில் புகுந்து லட்சதீபம், மாலத் தீவுகள், மொரீ ஷியஸ் என்று பல இடங்களுக்குச் சென்று, கடைசியில் எரிமலைகள் நிறைந்த ஒரு தீவில் இறங்கி இருக் கிறது. தமிழர்களின் நிலப் பகுதியில் எரிமலைகள் இல்லாததால், அந்தத் தீவை 'தீமைத் தீவு' என்று சொல்லிப் புறக்கணித்துவிட்டுத் திரும்பிவிட் டார்கள்.

இதற்குப் பல நூற்றாண்டுகளுக் குப் பிறகுதான் ஐரோப்பியர்கள் இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்கள். 1635-ல் போர்த்துக்கீசியர்கள் இந்தத் தீவில் இறங்கும் வரை இது மனிதர்கள் இல்லாத கன்னித் தீவாகவே இருந்திருக்கிறது. ஆனால், போர்த்துக்கீசியர்களிடம் இருந்து இந்தத் தீவைப் பிடுங்கிக்கொண்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, 20 பேரை இதன் பிரஜைகளாகக் குடி அமர்த்தியது. இந்த 20 பேரும் குழந்தை குட்டிகளைப் பெற்று ஜனத்தொகை யைப் பெருக்கும் வேலையில் ஈடு பட்டனர். அதோடு, தங்களுக்கு அடிமை வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா, மலாயா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஆட்க ளைப் பிடித்து வந்தார்கள். அது நடந்தது 17-ல் இருந்து 19-ம் நூற் றாண்டு வரை.

இப்படி அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்ட 100 தமிழ்க் குடும்பங் கள் ஜனப் பெருக்க நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டதால், இப் போது ரீயூனியன் என்ற அந்த பிரெஞ்சுத் தீவில் ஓரளவுக்குத் தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கரும்பு அறுப்பதற்காகவும் இன்ன பிற கூலி வேலைகளுக்காகவும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். இந்த இடத்தில் நாம் ராஜேந்திர சோழனின் கடற் படையை ஒப்பிட்டுக்கொள்ளலாம். ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கடல் படையோடு ரீயூனியன் தீவுக்குச் சென்று வந்த தமிழர்கள், 18-ம் நூற்றாண்டில் அதே தீமைத் தீவுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டது எவ்வளவு பெரிய வரலாற்று முரண் பாருங்கள்!

ஆனால், மூன்று நூற்றாண்டு களுக்கு முன்னால் சென்ற அந்தத் தமிழர்களுக்கு இப்போது தமிழ் மறந்துவிட்டது. பெயரிலும் வழி பாட்டிலும்தான் தமிழ் மிச்சம் இருக்கிறது.

இப்படி ரீயூனியனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர் களின் ஒரு வாரிசுதான் மேலே நான் குறிப்பிட்ட பெண். பெயர் மரியா. என் இளம் நண்பனின் இளம் தோழி. வயது 27. பார்ப்ப தற்கு ஸ்ரீரங்கத்துப் பெண் மாதிரி இருந்தாள். ஆனால், 'கடைக்குப் போலாமா, வர்றீங்களா?' என்று ஒரு வாக்கியம்தான் தமிழில் பேசத் தெரியும். ஆனால், இப்போது தீவிரமாக தமிழ் கற்றுக்கொள் வதால், எழுத்துக்கூட்டி எழுதவும், படிக்கவும் தெரிகிறது. படித்தது பாரிஸில். அவள் சொன்ன கதையை முழுசாகச் சொன்னால் மூன்று நூற்றாண்டுகள் மற்றும் இரண்டு தேசங்களின் கதையைச் சொல்ல வேண்டும்.

மனம் கொத்திப் பறவை! - 10

மரியாவின் மூதாதையர் ரீயூனியன் சென்றதும் கிறிஸ்து வத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், அவர்களின் வாரிசான மரியா இந்து மதத்துக்கு மாறி விட்டாள். 'மரியாவிடம் ஏதோ ஒரு சோகம் குடிகொண்டு இருப் பது உங்களுக்குத் தெரிகிறதா?' என்று கேட்டான் நண்பன். 'ஆமாம்' என்றேன். அதுபற்றி அவளிடம் விசாரித்தபோது அவள் தன் கதையைச் சுருக்கமாகச் சொன்னாள். அவளுடைய அம் மாவுக்கு 16 வயதாக இருந்தபோது பிறந்தவள் மரியா. பிறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள். மரியா பிறந்த உட னேயே அம்மா வேறு திரு மணம் செய்துகொண்டார். ஆக, மரியா தன் அப்பாவைப் பார்த் ததே இல்லை. மரியாவுக்கு ஒரு வயது இருக்கும்போது அவளுக்கு ஒரு தங்கை பிறந்தாள். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் தன் அம்மாவை மணந்துகொண்டவரை அவளால் தன் அப்பாவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனம் கொத்திப் பறவை! - 10

மரியா உயர் படிப்பு படித்தி ருக்கிறாள். இப்போது பாரிஸில் வேலை. அந்த வேலையின் நிமித் தமாக சென்னைக்கு அடிக்கடி வருவாள். தாய்மொழி பிரெஞ்ச். இப்போது ஆங்கிலம் கற்றுக் கொண்டு இருக்கிறாள். பாரிஸில் ஓர் உணவு விடுதியில் சிப்பந்தி யாக வேலை செய்யும் இலங்கைத் தமிழர் ஒருவரைக் காதலித்து, ஒரு வருடத்துக்கு முன்னால்தான் திருமணம் செய்துகொண்டாள்.

திருமணம் பாரிஸில் உள்ள முருகன் கோயிலில் சுத்தமான வைதீகத் திருமணமாக நடந்தது. புரோகிதர்கள் சொல்லும் வேத மந்திரங்களின் அர்த்தம் திரும ணத்துக்கு வந்திருந்த தமிழர்க ளுக்கும் புரியாது, பிரெஞ்சுக் காரர்களுக்கும் புரியாது என்ப தால், அந்த வேத மந்திரங்களை பிரெஞ்சில் மொழிபெயர்த்து வந் திருந்த அனைவருக்கும் கொடுத்து விட்டாள்.

சென்னை வந்தால், பாவாடை - தாவணியில்தான் சுற்றுவாள். அந்த அளவுக்கு தமிழ்ப் பித்து. நானும் நண்பனும் அவளை மாரியம்மா என்றுதான் அழைப் போம். பாரிஸில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்மணியிடம் வய லின் கற்றுக்கொள்கிறாள். நோட்ஸ் எல்லாம் தமிழிலேயே எழுதிக் கொள்கிறாள். திருமணத்துக்கு பட்டுப் புடவை, மாங்கல்யம்எல் லாம் வாங்குவதற்காக சென்னை வந்திருந்தாள். 'இதை ஏன் சென் னையில் வாங்குகிறாய்? எல்லாம் பாரிஸிலேயே கிடைக்குமே?' என்றேன். 'பாரிஸில் வாங்கினால், 10 லட்ச ரூபாய் ஆகும். இங்கே வாங்கினால் இரண்டு லட்சத்தில் முடிந்துவிடும்' என்றாள். உண்மை தான். ஆனால், ஒரு விஷயம் தான் சிக்கலாக இருந்தது. திரு மணப் பத்திரிகை. அதையும் தமிழிலேயே அடிக்க வேண்டும் என்றாள் மரியா. அதில் எதுவும் சிக்கல் இல்லை. ஆனால், பத்திரி கையின் மேலே இங்கெல்லாம் முருகன் அல்லது சிவன் படம் தான் இருந்தது. ஆனால், இரண்டு பேருமே, இரண்டு பெண்டாட் டிக்காரர்கள் ஆயிற்றே என்று ஆட்சேபித்தாள்.

உலகம் பூராவும் பெண்கள் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார் கள்போல் இருக்கிறது. ராமன் - சீதை படம் போட்ட அழைப் பிதழ்தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றாள் மரியா. தமிழ்நாட்டில் சிவன், முருகன் அளவுக்கு ராமன் - சீதை பாப்பு லர் இல்லை என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பிறகு, கடை கடையாக ஏறி, மிகவும் சிரமப்பட்டுதான் ராமன் - சீதையைப் பிடித்தோம்.

தன் திருமண விஷயத்தை, இதுவரை தான் பார்த்தேயிராத தன் தந்தையிடம் சொல்லலாம் என்று நினைத்து, அவர் இருப் பிடத்தைக் கண்டுபிடித்துப் போயிருக்கிறாள். அவருக்கும் திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்தன. வீட்டில் அப்பா இல்லை. அப்பாவின் மனைவிக்கு ஒருவிதமான பதற்றம். தன் கணவனை மரியா சந்திப்பதை அந்தப் பெண் விரும்பவில்லை என்று தெரிந்தது. 'நான் பணம் காசு கேட்டு வரவில்லை. நானே பெரிய வேலையில் இருக்கிறேன். அப்பா என் கல்யாணத்துக்குக்கூட வர வேண்டாம். வந்தாலும் பிரச்னைதான் ஆகும். அப்பாவை எனக்கு ஒருமுறை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்' என்று விளக்கிச் சொன்ன பிறகே, அந்தப் பெண் மணி ஆசுவாசம் அடைந்திருக் கிறார்.

மரியா சொன்ன ஆச்சர்யமான விஷயங்களில் ஒன்று, அவளு டைய கடைசித் தங்கையின் வயது இரண்டு. ஆனால், முதல் தங்கையுடைய குழந்தையின் வயது எட்டு. இங்கே 40 வயது ஆனதுமே தாம்பத்ய உறவுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு இருக்கும் கோடிக் கணக்கான மத்தியதர வகுப்பினர் என் நினைவுக்கு வந்தனர்.

அவளை ஆச்சர்யப்படுத்து வதற்கு நம்மிடமும் ஏராளமான விஷயங்கள் இருந்தன. என்னுடன் ஒரு டி.வி. ஷோவைப் பார்த்து விட்டு, "காம்பியர்கள் எல்லாம் தமிழ் ஷோவில் ஏன் இப்படி இங்கிலீஷிலேயே பேசுகிறார்கள்? இது தமிழ் ஷோ மாதிரியே தெரியவில்லையே?" என்றாள்.

"தட்ஸ் ஹெள வீ ஸ்பீக் டாமில்" என்றேன்.

மனம் கொத்திப் பறவை! - 10

சென்னையைவிட எனக்கு பாரிஸில் நண்பர்கள் அதிகம். அவர்களை சந்தித்தால் பாரி ஸுக்கு வந்த மாதிரியே இல்லா மல், தமிழ்நாட்டில் இருப்பது போலவே இருந்ததால், ஒருமுறை அவர்கள் யார் கண்ணிலும் படாமல் பாரிஸ் சென்று வந்தேன். ஒரு சிறிய விடுதியில், ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். நான் எந்த இடத்துக்குச் சென்றாலும், அந்த ஊரின் உணவையே சாப்பிடுவேன். அது எதுவாக இருந்தாலும் சரி. 15 நாட்கள் மேற்கத்திய உணவில் சென்றது. ஒரே ஒருநாள் தயிர்சாதம் சாப்பிட வேண்டும்போல் தோன்றவே ஒரு ஜப்பானிய உணவு விடுதிக்குச் சென்று, ப்ளெய்ன் ரைஸும், ஒரு கடையில் தயிரும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். கடும் பசியுடன் பாக்கெட்டைப் பிரித்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சோற்றில் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்திருந்தார்கள். அசைவத்தைக் கலக்காமல் அவர்களால் எந்த உணவையும் கற்பனையே செய்ய முடியாதுபோல. அன்றிரவு கொலைப் பட்டினி!

மனம் கொத்திப் பறவை! - 10
மனம் கொத்திப் பறவை! - 10
(பறக்கும்...)