உலக வரைபடத்தில் அந்த நாடு ஒரு புள்ளியைப்போல் தெரியும். அதுவும் கூர்ந்து பார்க்க வேண்டும். ஆப்பிரிக்கக் கண்டத்தின் பக்கத்தில் உள்ள மடகாஸ்கருக்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு அது. பெயர் ரீயூனியன். இன்னும் விளக்கமாகச் சொன்னால், மொரீஷியஸ் தீவுக்குச் சற்று கீழே இடது கைப் பக்கத்தில் மொரீஷியஸில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ளது ரீயூனியன். நான் அடிக்கடி நினைப்பது உண்டு, நாம் அடிமைப்பட்டதுதான் பட்டோம்; இங்கிலாந்துக்குப் பதி லாக பிரான்ஸிடம் அடிமைப்பட்டு இருக்கக் கூடாதா என்று. பாண்டிச்சேரியையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நான் சொல்வது புரியும். மும்பையில் இருந்து 5,000 கி.மீ., பாரிஸில் இருந்து 9,000 கி.மீ. தூரத்தில் உள்ள ரீயூனியனின் மக்கள் தொகை 8 லட்சம்.
இந்தத் தீவை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் சோழர்கள். முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படை 11-ம் நூற்றாண்டில் இந்தத் தீவில் இறங்கி இருக்கிறது. இந்தியா விலேயே முதன்முதலாகக் கடல் கடந்து சென்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய மன்னனும் அவன்தான். (ஆனால், இதே வரலாறு ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு எப்படித் தலைகீழாக மாறியது என்று பின்னால் வரும். கவனியுங்கள்.) சோழனின் கடல் பயணம்பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் இன்றும் கிடைக் கின்றன. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு' என்ற நூலில் இதுபற்றிய விவரங்கள் உண்டு.
வடக்கே கங்கை நதி வரை தன் சாம்ராஜ்யத்தை விரித்த முதலாம் ராஜேந்திரன், பர்மா, அந்தமான் நிகோபார், சுமத்ரா, ஜாவா, மலாயா, கடாரம், காம்போஜம் (இப்போதைய கம்போடியா) என்று தென்கிழக்கு நாடுகள் பலவற்றைத் தன் ஆளுகைக் குக் கீழ் கொண்டுவந்தான். அதே போல், அவனுடைய கடற்படை இந்தியப் பெருங்கடலில் புகுந்து லட்சதீபம், மாலத் தீவுகள், மொரீ ஷியஸ் என்று பல இடங்களுக்குச் சென்று, கடைசியில் எரிமலைகள் நிறைந்த ஒரு தீவில் இறங்கி இருக் கிறது. தமிழர்களின் நிலப் பகுதியில் எரிமலைகள் இல்லாததால், அந்தத் தீவை 'தீமைத் தீவு' என்று சொல்லிப் புறக்கணித்துவிட்டுத் திரும்பிவிட் டார்கள்.
இதற்குப் பல நூற்றாண்டுகளுக் குப் பிறகுதான் ஐரோப்பியர்கள் இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்கள். 1635-ல் போர்த்துக்கீசியர்கள் இந்தத் தீவில் இறங்கும் வரை இது மனிதர்கள் இல்லாத கன்னித் தீவாகவே இருந்திருக்கிறது. ஆனால், போர்த்துக்கீசியர்களிடம் இருந்து இந்தத் தீவைப் பிடுங்கிக்கொண்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, 20 பேரை இதன் பிரஜைகளாகக் குடி அமர்த்தியது. இந்த 20 பேரும் குழந்தை குட்டிகளைப் பெற்று ஜனத்தொகை யைப் பெருக்கும் வேலையில் ஈடு பட்டனர். அதோடு, தங்களுக்கு அடிமை வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா, மலாயா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஆட்க ளைப் பிடித்து வந்தார்கள். அது நடந்தது 17-ல் இருந்து 19-ம் நூற் றாண்டு வரை.
இப்படி அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்ட 100 தமிழ்க் குடும்பங் கள் ஜனப் பெருக்க நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டதால், இப் போது ரீயூனியன் என்ற அந்த பிரெஞ்சுத் தீவில் ஓரளவுக்குத் தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கரும்பு அறுப்பதற்காகவும் இன்ன பிற கூலி வேலைகளுக்காகவும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். இந்த இடத்தில் நாம் ராஜேந்திர சோழனின் கடற் படையை ஒப்பிட்டுக்கொள்ளலாம். ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கடல் படையோடு ரீயூனியன் தீவுக்குச் சென்று வந்த தமிழர்கள், 18-ம் நூற்றாண்டில் அதே தீமைத் தீவுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டது எவ்வளவு பெரிய வரலாற்று முரண் பாருங்கள்!
ஆனால், மூன்று நூற்றாண்டு களுக்கு முன்னால் சென்ற அந்தத் தமிழர்களுக்கு இப்போது தமிழ் மறந்துவிட்டது. பெயரிலும் வழி பாட்டிலும்தான் தமிழ் மிச்சம் இருக்கிறது.
இப்படி ரீயூனியனுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர் களின் ஒரு வாரிசுதான் மேலே நான் குறிப்பிட்ட பெண். பெயர் மரியா. என் இளம் நண்பனின் இளம் தோழி. வயது 27. பார்ப்ப தற்கு ஸ்ரீரங்கத்துப் பெண் மாதிரி இருந்தாள். ஆனால், 'கடைக்குப் போலாமா, வர்றீங்களா?' என்று ஒரு வாக்கியம்தான் தமிழில் பேசத் தெரியும். ஆனால், இப்போது தீவிரமாக தமிழ் கற்றுக்கொள் வதால், எழுத்துக்கூட்டி எழுதவும், படிக்கவும் தெரிகிறது. படித்தது பாரிஸில். அவள் சொன்ன கதையை முழுசாகச் சொன்னால் மூன்று நூற்றாண்டுகள் மற்றும் இரண்டு தேசங்களின் கதையைச் சொல்ல வேண்டும்.
|