எல்லையை இன்னும் இன்னும் விரிவடையச் செய்யலாம். அதற்குள்ளாக இப்போது இருக்கும் சூழ்நிலைகள், கண்ணுக்கு எட்டிய தூரத்துக்குள் தெரிகிற வாய்ப்புகள், இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இலக்குகளை நிர்ணயிப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை.
இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் போலத்தான் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் படித்துவிட்டு வெளியே வரும்போது, அந்தப் படிப்பு அவுட்டேட்டட் ஆகிவிடுகிறது. அதுபோலத்தான் இன்றைய சூழல் சார்ந்த திட்டங்களும் இருக்கின்றன.
திட்டங்கள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் வாழ்கிற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று தோன்றும். குறிக்கோள்களே வேண்டாம் என்று சொல்லவில்லை. குறியீடுகள் அடிப்படையில் குறிக்கோள்களை வைத்துக்கொண்டு குறுக்கிக்கொள்ள வேண்டாம், அவ்வளவுதான்.
வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இலக்குகள்பற்றிய பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்ற இடத்துக்கு காலம் நம்மை அழைத்து வந்திருக்கிறது.
என் வேலையின் பொருட்டு நிறைய பெரிய மனிதர்களைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைப்பது உண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் 'என்ன ஆக வேண்டும்' என்று கனவு கண்டவர்கள் அல்ல. 'என் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்' என்று கனவு கண்டவர்கள்.
இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கும் இன்றைய காலகட்டத்தின் தேவை. 15 வருடங்களுக்கு முன்பு வரைகூட இலக்கு என்பதை யாரோதான் தீர்மானித்து வந்தார்கள். 'நம்ம குடும்பத்துல யாருமே கலெக்டருக்குப் படிக்கலே, அதனால இவனை கலெக்டர் ஆக்கிடணும்'. 'சுப்ரமணியன் டாக்டருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குது பாரு. உன் புள்ளைய எப்பாடுபட்டாவது டாக்டர் ஆக்கிடு' என்ற பெரும்பாலான குறிக்கோள்கள், திணிக்கப்பட்ட இலக்குகளாவே இருந்து வந்திருக்கின்றன.
சமீப காலத்தில் அவனுக்கு/அவளுக்கு எது புடிக்குமோ அந்தத் துறையில் ஆளாக்கணும் என்ற பேச்சு வந்திருக்கிறது.
காலம் மாறி இருக்கிறது. மனிதர்களும் மாறியிருக்கிறார்கள். அப்படியானால், இலக்குகள்பற்றிய புரிதலும் மாற வேண்டும். இலக்குகளைக் குறியீடுகளில் இருந்து எடுத்து, 'என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்' என்பதன் மீது செலுத்த வேண்டி இருக்கிறது.
|