மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 09

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 09

மனம் கொத்திப் பறவை! - 09
மனம் கொத்திப் பறவை! - 09
மனம் கொத்திப் பறவை! - 09
மனம் கொத்திப் பறவை! - 09

பிரான்ஸில் ஓவியர் வான்கா தான் காதலித்த பெண்ணுக்காகத் தன் காதையே

அறுத்துக்கொடுத்த வரலாற்றை நாம் அறிவோம். ஆனால், வேறு ஒரு ஓவியர் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகத் தன் விரல் ஒன்றையே அறுத்துக்கொண்டார். 1989-ல் பெய்ஜிங் நகரின் தியனன்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு டாங்கிகளைக்கொண்டு அடக்கியது அல்லவா? அந்தப் போராட்டத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் இறந்தனர். இந்தப் படுகொலையை எதிர்த்து, ஷெங் கி (Sheng Qi) என்ற ஓவியர் தன்னுடைய இடது கை சுண்டு விரலை அறுத்துக்கொண்டார். அறுத்த விரலை பெய்ஜிங் நகரிலேயே புதைத்தார். பிறகு, அவருடைய சிறு வயதுப் புகைப்படம், அவரது அம்மாவின் புகைப்படம், சீனாவை இரும்புத் திரையால் மூடிய மாவோவின் புகைப்படம் மூன்றையும் தனித் தனியாக உள்ளங்கையில் வைத்துப் புகைப்படமாக எடுத்தார். அந்த மூன்று புகைப்படங்களும் சீனாவில் நடந்த கொடுமைகளின் குறியீடாக இன்றளவும் கருதப்படுகின்றன.

மனம் கொத்திப் பறவை! - 09

10 டிகிரி குளிரிலும் வேர்த்துக்கொட்டும் மனிதனைப் பார்த்து இருக்கிறீர்களா? இல்லையானால், என்னைப் பார்க்கலாம். இதனாலேயே ஐரோப்பாவுக்கு டிசம்பர் குளிரில்தான் போவேன். அங்கு உள்ளவர்கள் 'இந்தக் குளிரில் வந்திருக்கிறாயே... எங்கேயும் போக முடியாதே' என்று வருத்தப்படுவார்கள். கோடையில் சென்றால், என்னால் வெளியே தலை காட்ட முடியாது என்று அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. எல்லோரும் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக் கும்போது, 'யாரடா இவன், வேர்த்துப்போய் நின்றுகொண்டு இருக்கிறான்?' என்று ஐரோப்பியர்கள் என்னை விழி பிதுங்கப் பார்ப்பது சங்கடமாக இருக்கும்.

இப்போது எல்லாம் கேரளா செல்வது வாரம் ஒரு முறை என்று ஆகிவிட்டது. 'இன்னும் ஜவுளிக் கடை திறப்பு விழாதான் பாக்கி. அந்த அளவுக்கு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துவிடுகிறார்கள்' என்று நண்பர்களிடம் சொன்னால், என்னை ஏற இறங்கப் பார்த்து, ஒரு மாதிரி முறைக்கிறார்கள். இரண்டு வாரத்துக்கு முன்பு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜமாத்இ. இஸ்லாமி இந்த் அமைப்பின் மாணவர் பிரிவான இஸ்லாமிய மாணவர் அமைப்பு (SIO) நடத்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். மொத்தம் நான்கு நாட்கள். கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள். எல்லோரும் ஹிஜாப் (தலையை மறைக்கும் துணி) அணிந்து இருந்தார்கள். ஒவ்வொரு படம் முடிந்ததும் அதுபற்றி நான் பேச வேண்டும். அதைத் தொடர்ந்து விவாதம்.

மனம் கொத்திப் பறவை! - 09

இது எனக்கு முதல் தடவை அல்ல; ஏற்கெனவே, திருவனந்தபுரம் திரைப்படக் கல்லூரியில் ஒரு லெக்சருக்காகச் சென்று இருந்தேன். லெக்சர் என்றால், ஒரு மணி நேரம் இருக்கும் என்று நினைத் தேன். பிறகுதான் தெரிந்தது, மூன்று மணி நேரம் என்று. ஆனால், கடைசியில் அது நான்கரை மணி நேரம் நீண்டுவிட்டது. முக்கியமாக, வெகுஜன உளவியலை உருவாக்குவதில் சினிமா எத்தகைய பங்கு வகிக்கிறது என்று விளக்கினேன். தமிழ்நாட்டைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். நடிகர்களுக்கு பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் செய்து வழிபடும் கலாசாரம் இது. அதனால் நம்மைப்பற்றி நாமே சொல்லிக்கொள்ளக் கூடாது என்று ஹிட்லரை எடுத்துக்கொண்டேன். தன்னுடைய நாஜி பிரசாரத் துக்கு சினிமாவைப் பயன்படுத்திக்கொண்டவன் அவன். இன்றைக்கும் அவனுடைய Triumph of the Will என்ற திரைப்படம் உலகெங்கும் எடுக்கப்பட்ட பிரசாரப் படங்களில் முக்கியமானதாகக் கருதப் படுகிறது. 1934-ல் நியூரெம்பர்கில் நடந்த பிரமாண்டமான ஊர்வலமே அந்தப் படத்தின் மையம். லெனி ரீஃபன்ஸ்டால் (Leni Riefenstahl) என்ற பெண் இயக்கிய இந்த இரண்டு மணி நேரப் படத்தின் ஹீரோவே ஹிட்லர்தான். படம் முழுவதும் அவன் ஒரு கடவுளைப்போல் காண்பிக்கப்படுகிறான். படத்தைப் பார்க்கும்போது, நமக்கே ஒருகணம் 'அவன் ஒரு மாமனிதனோ' என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. அந்தப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை பற்றியே பல ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன.

இதேபோல், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் பலமுறை கலந்து கொண்டு இருக்கிறேன். இதற்கு ஆகும் செலவை அந்தந்தப் பல்கலைக்கழகமே ஏற்றுக்கொள்கிறது. சினிமா திரையிடுவதற்கான அரங்கத்தையும் கொடுத்து உதவுகிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்ல; இலக்கியத்தைப்போல் ஒரு கலைச் சாதனம். அப்படி இருக்கும்போது, தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இதெல் லாம் நடப்பது இல்லை?

மனம் கொத்திப் பறவை! - 09

சென்ற வாரம் நான் அப்படிச் சென்றது, ஆதி வாசிகள் தினக் கொண்டாட்டத்துக்காக. செங்கரா என்ற பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை விரட்டி விட்டு, அந்த வனப் பிரதேசத்தை ஹாரிஸன் கம்பெனிக்கு எழுதிக் கொடுத்த கேரள அரசைக் கண்டித்தும் (26 மாதங்கள் நடந்த போராட்டம் அது), பாலக்காட்டில் கொக்கோ கோலா நிறுவனத்துக்கு எதிராகவும் இதுபோல் பல போராட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டதால், கேரளத்தில் உள்ள 42 வகை பழங்குடியினருக்கும் நான் நெருக்கமானவன். அந்த வகையில்தான் அழைப்பு. 12 மணி நேரப் பயணத் தகிப்பில் சுருண்டுவிட்டேன். ஆதிவாசிகள் கூட்ட மைப்புத் தலைவர் விளையோடி வேணுகோபால் ரயில் நிலையம் வந்திருந்தார். 'பயணம் எப்படி இருந்தது?' என்று கேட்டார். அவர் காலில் செருப்பு கூட இல்லை. 'பிரமாதம்' என்று பொய் சொன்னேன். விழாவில் அவருடய செல்போன் தொலைந்துவிட்டது என்றார்.

அறையில் தனியாகத் தங்கியிருந்தபோது, இரவு 1 மணிக்கு விழிப்பு வந்தது. காரணம், இதயத் துடிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு, ஓர் இளைஞனைப்போல ஓடியாடி வந்தேன். ஆனால், ஒருமுறை கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை வரும் மின்சார ரயிலில் ஏறி, கூட்டத்தில் பிதுங்கி வெளியே வந்து விழுந்தபோது, இதேபோல் இதயத் துடிப்பு அதிகமாகி டாக்டரிடம் சரணடைய நேர்ந்தது. அதற்கு அடுத்து இப்போது. பாலக்காட்டில் எனக்குத் தெரிந்த ஒரே நபர் வேணுகோபால். அவரும் செல்போனைத் தொலைத்துவிட்டார். ஒன்றும் புரியவில்லை. அதிகமான இதயத் துடிப்பு அப்படியே பயமுறுத்திக்கொண்டு இருந்தது. திருச் சூரில் இருக்கும் மலையாள எழுத்தாளர் ட்டி.டி.ராமகிருஷ்ணனுக்கு போன் செய்து சொன்னேன். விழா அமைப்பாளர் களை அழைத்து, சொல்வதாகச் சொன்னார். ஆனால், அவர்கள் போனை எடுக்க வேண்டுமே?

பிறகு ஒரு யோசனை வந்தது. சென்னையில் இருக்கும் ஒரு நண்பரைஅழைத்து, பாலக் காட்டில் அவருக்கு வேண்டியவர்கள் யாரையாவது அனுப்பச் சொன்னேன். 'உடனே அனுப்பலாம்; ஆனால், ஒரே ஒரு பிரச்னை' என்றார். என்னவென்றால், அவர்கள் பி.ஜே.பி-க்காரர்கள்; அதனால், என்னை அழைத்திருக்கும் அமைப்பாளர்கள் என்னைப்பற்றி எதுவும் நினைத்துவிட்டால்?' 'அட, ஆபத்து நேரத்தில் ஆள் இல்லா மல் தவிக்கிறேன். பி.ஜே.பி- யாவது, கம்யூனிஸ்ட்டாவது? அனுப்புங்கள்' என்றேன். பி.ஜே.பி. வருவதற்குள் அமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 09

12 மணி நேரம் ஐ.சி.யு. பலவிதமான சோதனைகள். முடிவில், இதயத்தின் மின்சார சர்க்யூட்டில் வேகம் அதிகம் என்று தெரிந்தது. மின் அதிர்வு அதிகமானால் இதயத் துடிப்பும் அதிகமாகும். மாத்திரைகளால் பக்க விளைவு உண்டாகும் என்பதால், என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறேன்.

ஐ.சி.யு-வில் இருக்கும்போது சில சந்தேகங்கள் எழுந்தன.

1. விகடனுக்கு இந்த வாரக் கட்டுரையை அனுப்பிவிட்டேனா?

2. என்னைப் பரிசோதித்த பெண் ணுக்கு எப்படி அந்த இறைவன் இவ்வளவு பேரழகைக் கொடுத் தான்? (உப கேள்வி: இந்த நிலைமையிலும் இப்படி ஒரு கேரளத்துப் பைங்கிளியை ரசிக்கும் என்னை என்ன செய்தால் தகும்?) 3. அமைப்பாளர்கள் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த அறை, பாலக்காட்டுக்கு கேரள முதல்வர் வரும்போது வழக்கமாகத் தங்கும் அறை. அதனால், அவர் வந்துவிட்டால் என்னுடைய மடிக்கணினி, செல் போன் போன்ற தளவாடங்கள் என்ன ஆகும்?

மருத்துவமனை செலவுக்குக் கையில் காசு இல்லை. வங்கி அட்டையையும் எடுத்து வர வில்லை. அவந்திகா எப்படிப் பணம் அனுப்ப முடியும்?

ஆனால், கடைசியில் எல்லாம் சுபமாகவே முடிந்தது. விழா அமைப்பாளர்களில் ஒருவர் இரவு பகலாக விழித்திருந்து எல்லாவற்றையும் செய்திருக் கிறார். கட்டணத்தையும் அவரே கட்டினார். ஊருக்குப் போய் அனுப்புகிறேன் என்று சொன்ன தற்கு, 'அந்தப் பேச்சே கூடாது' என்று சொல்லிவிட்டார்.

சென்ற வாரம் பார்க் ஷெராட்டன் தட்சிண் உணவகத் துக்குச் சென்றிருந்தேன். அதன் பக்கத்தில் இருந்த டப்ளின் டிஸ்கோ பழைய ஞாபகங்களைக் கிளறியது.

டப்ளினுக்கு வெளியே பல 'சிட்டுக்குருவிகள்' படு ஆபத்தான உடைகளில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தன. இந்த 'சிட்டுக்குருவிகள்' பகல் நேரத்தில் எங்கே ஒளிந்துகொண்டு இருக்கும் என்பது என் நீண்ட நாள் சந்தேகம்.

மனம் கொத்திப் பறவை! - 09

தட்சிணில் நுழைந்தால் எல்லோரும் மத்திம வயதுக்காரர்கள். போதாக்குறைக்கு, காகித ஓடம் போன்ற துயர கானங்களை எழுப்பிக்கொண்டு இருந்தார், அங்கே வாசித்துக்கொண்டு இருந்த வயலின் கலைஞர். ஒரு மணி நேரமும் கருணாநிதி பாடல்களே இழைந்துகொண்டு இருந்ததைப் பார்த்து எனக்குச் சந்தேகம்வந்து விட்டது, இது பார்க் ஷெராட் டனா... அறிவாலயமா?

அப்புறம்தான் கவனித்தேன், ஓர் ஓரத்தில் அமைச்சர் துரை முருகனும், அவர் புதல்வரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். ஓ, நேயர் விருப்பம்போல!

ஆனால், வயலின் கலைஞர் குசும்புக்காரர்போல. துரைமுருகன் கிளம்பியதுமே 'ஃப்ரீயா வுடு ஃப்ரீயா வுடு மாமு, வாழ்க்கைக்கு இல்லே கேரன்ட்டி' என்று 'ஆறு' படத்தில் வரும் சூர்யா பாடலை வாசிக்க ஆரம்பித்தார்!

மனம் கொத்திப் பறவை! - 09
மனம் கொத்திப் பறவை! - 09
(பறக்கும்...)