சில ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு மனசுகளும் அப்படித்தான் இயங்குகின்றன. தான் கேள்விப்பட்ட, பார்த்த பெரிய மனிதர்கள், சிந்தனாவாதிகள் பலரும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற குணம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு சமூக அங்கீகாரமும் அந்தஸ்தும் கிடைக்கிறது. எனவே, நானும் அப்படி இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவது ஆரோக்கியமானது அல்ல.
அந்தப் பெரிய மனிதர்கள் இயல்பிலேயே எதையும் நேரடியாகப் பேசும் குணம்கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் குணம் இயல்பிலேயே அவர்களிடம் இருப்பதால்தான் வெளிப்படையாகச் சொல்ல விரும்பும் விஷயத்தைக்கூட எதிரில் இருப்பவரின் மனம் நோகாமல் சொல்லும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கும்.
இன்னொரு புறம், தங்கள் சிந்தனையாலும் கருத்துக்களாலும், மக்கள் மனதில் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று இருப்பதால், அவர்கள் பட்டவர்த்தனமாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள மற்றவர்களும் தயாராக இருப்பார்கள். அந்தப் பெரியவர்களின் நோக்கம், தங்கள் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். மாறாக, நான் எதையும் வெளிப்படையாகப் பேசுபவன் என்று விளம்பரப்படுத்திக்கொள்வது அல்ல.
ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக இருத்தல் என்பது எதையும் வெளிப்படையாகப் பேசுதல் என்ற அளவில் பார்க்கப்பட வேண்டியது அல்ல; தடைகள் இன்றி நேரடியாக ஒரு விஷயத்தைச் சிந்திப்பதும் செயல்படுத்துவதும் அந்த அளவுகோலில் வருகிறது.
வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பது சிரமம். பேசுவது எளிது. எது எளிதோ, அதைச் செய்துவிட்டு அதைத் தன் சிறப்புக் குணம் என்று பெருமை பேசிக்கொள்வது அர்த்தம் அற்றது.
'அவர் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆன ஆளு. அவர் சரியாகத்தான் சொல்வார்' என்றெல்லாம் அங்கீகாரம் கிடைக்காது. நீங்கள் சொல்கிற கருத்துதான் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும், நீங்கள் யார் என்று விளம்பரம் செய்வதில் அந்த இடம் கிடைக்காது.
பெரும்பாலானவர்கள் நான் வெளிப்படையான ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆசாமி என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதன் பின்னணியில் வீரம் என்றொரு விஷயம் ஒளிந்துகிடக்கிறது. வீரர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக இருப்பவர்கள் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக இருப்பார்கள் என்ற எண்ணம் இதற்குக் காரணம்.
ஆனால், உண்மையில் வீரன் கண்ணை மூடிக்கொண்டு கத்தியைச் சுழற்ற மாட்டான். இடம் அறிந்து இயங்கும் குணம்தான் அந்த வீரத்தை அர்த்தப்படுத்துகிறது. அதேதான் பேசுவதற்கும் தேவைப்படுகிறது. உண்மையான வெளிப்படைச் சிந்தனைகொண்ட மனிதர்கள் இடம் அறிந்தே பேசுவார்கள்.
'மெனக்கெட்டு ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக நடந்துகொள்வதால், நம்மை அறியாமல் எத்தனை பேரை காயப்படுத்தி இருக்கிறோம்? எத்தனை நட்புகளை இழந்து இருக்கிறோம்? எத்தனை உறவுகளைத் தொலைத்து இருக்கிறோம்? எவ்வளவு இதயங்களைத் தூரத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கிறோம்? கொஞ்சம் யோசித்தால், இந்த வேஷம் எதையும் தரவில்லை என்பது விளங்கும்.
இந்தக் கட்டுரை உண்மையாகவே வெளிப்படையாக சிந்திக்கிற, பட்டவர்த்தனமாகப் பேசுகிற மனிதர்களுக்கு எதிரானது அல்ல; அப்படிப் பேசுவதை ஓர் அங்கீகாரக் குறியீடாக நம்பி, மெனக்கெட்டு தன் குணாம்சத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
'கடைசியில கோபி பயந்துட்டான்' என்று உள்ளுக்குள் சிரிக்கிறவர்களுக்கு ஒரு விளக்கம். இது பயம் அல்ல... பக்குவம்!
|