ஒவ்வோர் ஆண்டும் யோசாவுக்கு நோபல் கிடைக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால், எல்ஃப்ரீட் ஜெலினெக் (ஆஸ்திரியா), ஓரான் பாமுக் (துருக்கி) போன்றவர்களுக்குக் கிடைத்தபோது, இனிமேல் யோசாவுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஏனென்றால், அவர்களைவிட யோசா எவ்வளவோ உயரத்தில் இருப்பவர். ஆனால், இப்போதுதான் கிடைத்திருக்கிறது. யோசாவுக்கே இது ஆச்சர்யம்தான். ஏனென்றால், அவர் இப்போது அவ்வளவாகப் புதினங்கள் எழுதுவது இல்லை. காரணம், அவர் அரசியல்வாதிஆகிவிட்டார். 1990-ல் ஜனாதிபதி தேர்தலில் நின்று ஃபுஜிமோரியிடம் தோற்ற பிறகு உள்ள யோசாவுக்கும், அதற்கு முந்தைய யோசாவுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. தேர்தலுக்கு முன்னே அவர் ஒரு படைப்பாளி; பிந்தியவர் அரசியல்வாதி. 90-க்குப் பிறகு யோசா பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளே எழுதி வருகிறார். அதுவும் வலதுசாரித் தன்மைகொண்ட கட்டுரைகள். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிய நாவல்களில் சொல்லும்படியாக இரண்டு மட்டுமே உள்ளன. Death in the Andes மற்றும் Feast of the Goat. இந்த நாவல்களை அவர் 90-க்கு முன்பு எழுதிய அற்புதமான நாவல்களோடு ஒப்பிட முடியாது. இப்போது யோசாவுக்குக் கிடைத்துஇருக்கும் நோபல் பரிசு, அவருக்கு 80-களிலேயே கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இடதுசாரியான கார்ஸியா மார்க்கேஸுக்கு 1982-ல் நோபல் கிடைத்தது. காரணம், அது உலக அரங்கில் இடதுசாரிகள் கோலோச்சிய காலம். நான் யோசாவிடம் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், எழுத்தாளர்களும் கலைஞர்களும் இடதுசாரிகளாக இருப்பதே பொதுவான வழக்கம். மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர்வைக்கும் நம் ஊர் 'கலைஞர்'களைச் சொல்லவில்லை. நான் சொல்வது சர்வதேச அரங்கில். ஆனால், யோசா ஒரு வலதுசாரியாக இருந்தாலும், அவருடைய புனைகதைகளில் அது தெரியாது. உதாரணமாக, அவருடைய 'ரியல் லைஃப் ஆஃப் அலஹாந்த்ரோ மாய்த்தா' என்ற நாவலைப் படித்தால், நீங்களே ஒரு கம்யூனிஸ்ட் ஆகிவிடுவீர்கள். அந்த அளவுக்கு, தான் எழுதுகின்ற விஷயத்தோடு ஒன்றிவிடுவார். இதை நான் கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில் யோசா, காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸைவிடத் திறமையானவர். ஏனென்றால், மார்க்கேஸ் தன்னுடைய கோட்பாடுகளுக்கு இணக்கமான கதைகளையே எழுதினார். ஆனால், யோசா ஒரு வலதுசாரியாக இருந்தும், லத்தீன் அமெரிக் கப் புரட்சியாளனைப்பற்றி எழுதுவார்.
யோசா, கலையையும் காமத்தையும் இணைத்தவர் என்று சொல்லலாம். அவருடைய Aunt Julia and the Script writer என்ற நாவல், அவருக்கும் அவருடைய ஆன்ட்டிக்கும் இடையிலான இன்செஸ்ட் உறவைப்பற்றி பேசுகிறது. இந்த நாவல் அப்போது லத்தீன் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆன்ட்டி, யோசா மீது வழக்கு தொடுத்தார். பிறகு, யோசாவைத் திட்டி அவரும் ஒரு நாவல் எழுதினார். நிற்கவில்லை. எழுத்தாளனோடு சராசரி மனிதர் போட்டி போட முடியுமா? யோசாவின் மற்றொரு சிறப்பு, சமகால அரசிய லையும் நாவலாக எழுதிவிடுவார். சொல்லுங்கள், நம்மால் இங்குள்ள அரசியல்வாதிகளைவைத்து நாவல் எழுத முடியுமா? ஆனால், யோசா பின்னி எடுத்துவிடுவார்.
அவருடைய The Feast of the Goat என்ற நாவல் தென் அமெரிக்க நாடான டொமினிகன் ரிபப்ளிக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த ஓர் அதிபரைப்பற்றியது. அவர் ஒரு சர்வாதிகாரி. பெண் பித்தர். அவருடைய பட்டப் பெயர்தான் வெள்ளாடு (கோட்). இதெல்லாம் வரலாறு. 1930-ல் இருந்து 1961-ல் தன் ராணுவத் தளபதியால் கொல்லப்படும் வரை, அதிகாரத்தில் இருந்தவர் அவர். இத்தனை ஆண்டு காலம்ஆட்சியில் இருக்க முடியாது என்று ஏதாவது சட்டச் சிக்கல் வந்தால், தன்னுடைய தொண்டர் யாரையாவது அதிபராக்கிவிடுவார். அவர் செய்த அட்டூழியம் எழுதிமாளாது. எந்தப் பெண்ணின் மீது அவர் பார்வை விழுகிறதோ, அந்தப் பெண் உடனே அவருடைய படுக்கை அறைக்கு வர வேண்டும்.
மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செல்லும் அந்த நாவலில், 44 வயதுப் பெண் அமெரிக்காவில் இருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தந்தையையும் உறவினரையும் பார்க்க வருகிறாள். அந்த 30 ஆண்டுகளில் அவளுக்கும் தந்தைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஏன்? 30 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய நிதி மந்திரியின் வீட்டுக்குப் போகிறார் வெள்ளாடு. நிதி மந்திரிக்கு 14 வயதே நிரம்பிய மகள். மகளை அதிபர் முன்னால் வரவே கூடாது என்று சொல்லி இருக்கிறார் மந்திரி. இருந்தாலும் ஆபத்தைப் புரிந்துகொள்ளாமல் மகள் அதிபரின் முன்னே வந்துவிடுகிறாள். அவ்வளவுதான். மந்திரியை மிரட்டி அவர் மகளை அழைத்துக்கொண்டு ஒரு மலை வாசஸ்தலத்துக்குச் செல்கிறார் அதிபர். ஆனால், எத்தனையோ பெண்களைப் படுக்கையில் வீழ்த்திய வெள்ளாடு, அந்தச் சிறுமியிடம் அன்று இரவு தோற்றுப்போகிறது. காரணம், பயத்தினால் சிறுமி சவத்தைப் போல் கிடக்கிறாள். வெள்ளாடு necrophelic இல்லையே?
அந்தச் சம்பவம்தான் வெள்ளாட்டின் வீழ்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. மனதளவில் அடிபட்டுப்போன வெள்ளாட்டை, அந்த நாட்டின் ராணுவத் தளபதி கொன்றுவிடுகிறார். அதுதான் நாவலின் தலைப்பான 'வெள்ளாட்டு விருந்து'. அப்படி, பிணத்தைப் போல் வெள்ளாட்டிடம் கிடந்தவள்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தந்தையைப் பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்தவள். வெள்ளாட்டிடம் இருந்து அவளை அமெரிக்காவுக்குத் தப்புவித்தது, அந்த நாட்டின் கன்னிகாஸ்திரீகள். ஆனால், வெள்ளாட்டைக் கொன்ற ராணுவத் தளபதிக்கு ஒரு நாட்டின் அதிபராக இருப்பதற்கு வேண்டிய மனோபலம் இல்லை. வெள்ளாட்டுக்கு வேண்டிய அதிகாரிகளால் ராணுவத் தளபதி சிறை படுத்தப்படுகிறார். அதிகாரம் என்பது அதைத் தக்கவைத்துக்கொண்டு இருப்பவர்களையும், அதற்குக் கீழே இருக்கும் மக்கள் கூட்டத்தையும் எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இந்த நாவலைவிடச் சிறந்த உதாரணம் எதுவும் இல்லை.
|