'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்லயே எப்படியாவது ரஜினி சாரை பாக்கெட் பண்ணிரணும்னு எனக்கு பிளான். 'இந்த ஆன்மான்னா என்னண்ணே?', 'நாம இறந்தா எது வழியா, எங்கே போவோம்?'னு அதிரடி ஆன்மிகக் கேள்விகளா விசிறி அடிப்பேன். 'அமினுஷ்டா... அபாந்த வேதா'ன்னு புரியாத வார்த்தைகளால் பதில் சொல்வார்னு நினைச்சா, 'ஏய்... என்னை என்ன சாமியாருன்னு நெனைச்சியா? எப்பப் பார்த்தாலும் ஆன்மா, கர்மான்னுட்டு இருக்கே?'ன்னு டென்ஷன் ஆகிட்டார் தலைவர். 'ஆஹா... தலைவரும் நம்ம ட்ராக்குதான்!'னு புரிஞ்சுக்கிட்டு ஃபுல் ஜாலி மொக்கை பிட்டுகளைப் போட்டுப் பேச ஆரம்பிச்சேன்.
'ரோபோ' ரஜினியை ரெடி பண்ற ஓப்பனிங் ஸீன். ரஜினி சாருக்கு முன்னாடி பிரமாதமா நடிச்சிரணும்னு நானும் கருணாஸும் சதித் திட்டம் தீட்டினோம். எட்டாங்கிளாஸ் ஃபெயிலாகி மெக்கானிக் ஷாப்ல சேர்ந்த பசங்க கணக்கா, அவசர அவசரமா ரஜினி சாருக்கு முன்னாடி ரோபோவுக்கு நட்டு, போல்ட் மாட்ட ஆரம்பிச்சுட்டோம். கொஞ்ச நேரம் பொறுமையாப் பார்த்துட்டே இருந்த ரஜினி, 'ஷங்கர், இவங்க ரெண்டு பேருமே ரோபோவை உருவாக்கிடுவாங்க'ன்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டார். "ஐயையோ, அண்ணே... தப்புதான் தப்புதான். இனி நோ ஆர்வக்கோளாறு!"னு சத்தியம் பண்ணி அவரைக் கூல் பண்ணினோம்.
சூப்பர் ஸ்டார்பத்தி சொல்லிட்டு, லிட்டில் சூப்பர் ஸ்டாரை மறக்கலாமா? எனக்கு டார்ச் லைட் அடிச்சு டாப்புக்குக் கொண்டுவந்தது சிம்புதான். 'மன்மதன்' படம்தான் சினிமாவில் எனக்கு அறிமுகம். சிம்புவைப் பார்த்தா பயம்... கேமராவைப் பார்த்தா கூச்சம். டாஸ்மாக்ல கன்டினியூட்டி சரக்கு கிடைக்காம அல்லாடிட்டு இருக்குற குடிமகன் கணக்கா முழிச்சுட்டு இருக்கேன். சிம்பு கூப்பிட்டு என் தோள்ல கை போட்டு, 'டி.வி-யில நல்லாக் கலாய்க்கிற... இங்கே மட்டும் ஏன் இப்படி சொதப்புற?
எதைப்பத்தியும் கவலைப்படாம கலாய். அப்பதான் உனக்கு மலாய் சாய்!'னு சொல்லி, சும்மா இருந்தவன் கையில சூடத்தை ஏத்தி ஆடவெச்சார்.
'வல்லவன்' ஷூட்டிங் சமயம், 'அவசரமா ஃபாரின் ஷூட்டிங். பாஸ்போர்ட்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வந்திரு'ன்னு சிம்புகிட்டே இருந்து போன். 'சந்தானம் ஃபாரின் ஃபிகர்ஸோட கஜகஜாவா? மச்சம்டா உனக்கு!'ன்னு எகிறிக் குதிச்சு, பாஸ்போர்ட்டும் கையுமா அவர் வீட்டுக்குப் போனா, மனுஷன் ஜாலியா குர்குரே சாப்பிட்டு உக்காந்து இருந்தார். 'இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு மச்சி. காலண்டர்லாம் பார்க்குற பழக்கம் இல்லையா?'ன்னு சிரிக்கிறார். அசடு வழிஞ்சாலும், அப்புறம் அவரோடு கூட்டணி போட்டு 'ஃபாரின் ஷூட்டிங்... வாங்க வாங்க... ஃப்ளைட் கிளம்பப் போகுது... ஓடி வாங்க... ஜன்னல் ஸீட்டு வேணுமா... சீக்கிரம் ஓடியாங்க... ஆ... சென்னையில இருந்து மும்பை, டெல்லி, பெர்லின், சீனா, கஜகஸ்தான், வழியாக ஃபாரின் செல்லும் ஃப்ளைட் கிளம்பப் போகுது... ஓடி வாங்க'ன்னு எல்லாருக்கும் போனைப் போட்டோம். நானாவது பரவாயில்லை... வெறும் பாஸ்போர்ட் மட்டும்தான் எடுத்துட்டுப் போனேன். ஆனா, நம்ம சத்யன் இருக்காரே... வீட்டு ரேஷன் கார்டு, ஸ்கூல் படிச்ச சர்டிஃபிகேட்லாம் எடுத்துட்டு வந்துட்டாரு. அன்னிக்கு ஓப்பனிங் காமெடியன் நான்... ஓவர் ஆல் காமெடியன் சத்யன்!
தல - தளபதியப் பத்தி கருத்தாப் பேசாம இருக்க முடியுமா? 'கிரீடம்' படத்தில் ஒரு ஸீன்ல த்ரிஷா என்னைத் துரத்துவாங்க. அப்புறம் எங்க ரெண்டு பேரையும் நாய் துரத்தும். நாய்க்கு டிரெய்னிங் கொடுத்தவரு தெலுங்குக்காரரு. பார்ட்டிக்கு நம்ம மேல என்ன காண்டுன்னு தெரியலை. நாய்கிட்டே தெலுங்குல ஏதோ சொன்னாரு. அவ்ளோதான்... நாய் த்ரிஷாவை விட்டுட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சிடுச்சு! (அது ஏன் பாஸ், ஆம்பளைகளையே நாய்க அதிகமாத் துரத்துது?) ஒருவழியாத் தலைதெறிக்க ஓடித் தப்பிப் பொழைச்சு திரும்பிப் பார்த்தா, 'பப்பிக் கண்ணு, அம்மு புஞ்சி, லுல்லுல்லாயி'னு அந்த நாயைக் கொஞ்சிட்டு இருக்காங்க த்ரிஷா.
'பில்லா' படத்துக்காக 'வெத்தலையைப் போட்டேன்டி' பாட்டு மலேசியாவுல ஷூட்டிங். வாயில பீடா மென்னுக்கிட்டே ஆடணும். நம்ம ஊரு 120 பீடா மாதிரி ஏதோ ஒரு மலேசியா பீடா கொடுத்தாங்க. ஃபாரின் சரக்கு ஃபாரின் சரக்குதான். சுத்தவெச்சு சுண்ணாம்பு அடிச்சிருச்சு. என்ன நடந்துச்சுன்னே தெரியலை. ஷூட்டிங் முடிஞ்சு என்னைத் தெளியவெச்சு ஷூட் பண்ணதை ஓட்டிக் காட்டுனாங்க. அஜீத் சாரை நான் டான்ஸ் ஆடவேவிடாம செம அலப்பறை பண்ணி இருக்கேன். கேமராவைக் கட்டிப்பிடிக்கிறதும், அஜீத் சாருக்கு முத்தம் கொடுக்குறதுமா செம கலீஜ். அந்த உடான்ஸ் வீடியோ மட்டும் ரிலீஸானா... என் டப்பா டான்ஸ்தான்!
|