பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லி யிருக்காங்க.
உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர் ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ் பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ் பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.
கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.
ப.நீலகண்டன்: 'மலைக்கள்ளன்'லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.
கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே... நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.
ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது 'எடிட்டிங்'. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.
வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!
|