ஆனந்த விகடனில் கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக அவருக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அப்போது வெளியான பேட்டியிலிருந்து ஒரு துளி...
"பயணம்னாலே எனக்கு ஒரு பயம்..!"
ரசிகமணி டி.கே.சி-யின் கடைசி காலத்து சீடரான கி.ரா.வின் முழுப் பெயர் ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகம் நாட்டுப் புறக்கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க, அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். 70 வயதிலும், தனது 60 வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!
"முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி. தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே, பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் டெல்லிக்குப் போய் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு! ஏன்னா, பயணம்னாலே எனக்கு ஒரு பயம், தயக்கம், அலுப்பு, சலிப்பு!
இந்தப் பரிசு, விகடனில் நான் எழுதின 'கோபல்லபுரத்து மக்க'ளுக்காகக் கிடைச்சதுலே எனக்குத் திருப்திதான் என்றாலும், 1976-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட என்னோட நாவலான 'கோபல்ல கிராம'த் துக்கே இது கெடைச்சிருக்கணும்.
ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னன்னா, அப்போ சாகித்ய அகாடமி பரிசுத் தொகை 5,000 ரூபாய்; இப்போ 25,000 ரூபாய்ங்கறதுதான்!
ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல, அந்த மக்களின் பிரச்னைகள், வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.
அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். 'இதோ, இதுதான் கரிசல் இலக்கியம்' என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான். மேலும், அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல், எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன்; சொல்கிறேன்; சொல்வேன்!
|