அம்மாவின் பெருமூச்சுகளில் பீறிடும் வீடு பற்றிய நினைவைச் சொல்லி மாளாது. கடனில் மூழ்கிய எங்கள் பூர்வீக வீட்டை இழந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னொருவருக்குச் சொந்தமாகிவிட்ட வீட்டை அம்மா எப்போதும் 'நம்ம வீடு' என்றே விளித்தது. அதன் கடந்த கால சித்திரங்கள் கடைசி வரை அம்மாவின் மீள் நினைவில் கசிந்துகொண்டே இருந்தன.
வீடும் அம்மாவும் வேறு வேறல்ல. பழைய வாழ்வின் பெருமிதங்களை இழந்த வலியை அம்மா வெளிப்படுத்துவதே இல்லை. வீட்டின் சுவர்களும் அப்படியே தான். ரகசியங்களை நெடுங்காலமாக அடைகாத்தபடியே இருக்கின்றன. வீட்டின் பிரதான சுவருக்கு 'தாய்ச் சுவர்' என்ற பெயர் எத்தனை அர்த்தம் பொதிந்தது என்பதற்கு, அம்மாவும் வீடும் ஆகச் சிறந்த உதாரணங்கள். இழந்த வீடு இடிக்கப்படவில்லை என்பதே, அம்மாவுக்கு இதமான ஒத்தடமாக இருந்திருக்கிறது.
சன்னமங்கலத்தார் வீடு என்பது ஊரில் எங்கள் வீட்டுக்குப் பெயர். சன்னமங்கலம், தாத்தாவின் பூர்வீகக் கிராமம். ஊரே மாறிவிட்டாலும் இன்னும் வீட்டின் பெயர் மாறவில்லை.
இரவுதோறும் தூங்குவதற்கு முன் வீட்டைப்பற்றி அம்மா நிறைய நிஜக் கதைகள் சொல்லும். குரல் நெடுக குடும்பப் பெருமைகள் நூலிழையாக ஊடுருவும்.
ஊரில் முதன்முதலில் ரேடியோ வாங்கியது எங்கள் வீட்டில்தானாம். பால்யத்தில் பெரும் ஆச்சர்யமாகத் தோன்றிய அந்த ரேடியோ, இப்போதும்கூட என் ஞாபகத்தில் பாடிக்கொண்டே இருக்கிறது.
அது நீள்சதுர மரப் பெட்டியிலானது. சிறு சிறு வட்டங்களைக்கொண்ட வலைத் துணி முன்புறம் திரைபோல் இருக்கும். ரேடியோவின் இடது பக்கம் துணிக்கு உள்ளே ஒரு கறுப்பு வட்டம் தெரியும். அதுதான் 'ஸ்பீக்கர்' என அப்பா சொல்ல, அறிந் திருக்கிறேன் அப்போது.
அந்த 'மர்ஃபி' ரேடியோவில் மீண்டும் மீண்டும் கேட்ட சினிமா பாட்டுகள் பல புதிரான கற்பனைகளை எனக்குள் தோற்றுவித்து இருக்கின்றன. குரல் வழியாக உருவெடுக்கும் முகங்களின் பிம்பங்கள் பல வகை. பல காதல் பாடல்களை இணைந்து பாடிய டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் கணவன்- மனைவி என்றே வெகுகாலம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். அதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும்.
அந்த ரேடியோவில்தான் மகாத்மா காந்தியை கோட்ஸே சுட்டுக்கொன்ற செய்தியை ஊரே கேட்டது என்று அம்மா சொல்லும். எங்கள் வீட்டுத் திண்ணையில் வைக்கப்பட்ட ரேடியோவில் ஒலிபரப்பான, காந்தியின் இறுதி ஊர்வல வர்ணனையைக் கேட்டு, மார்பில் அடித்துக்கொண்டு புலம்பி அழுதிருக்கிறார்கள் தெருவாசிகள். வீடே துக்க வீடுபோல் ஆகிவிட்டதாம்.
முனிசிபாலிட்டியின் மங்கலான வெளிச்சத்தில் அழுது வடியும் மண்எண்ணெய் விளக்குத் தூண்கள் இருந்த ஊரில், கொடுக்கப்பட்ட முதல் மின் இணைப்பு எவ்வளவு அதிசயமாக இருந்திருக்கும். மின் இணைப்பு வந்த கையோடு ரேடியோவும் வாங்கிவிட்டார் அப்பா. ஊரே மூக்கில் விரல்வைத்தது என அம்மா சொல்லும்.
முதல் மின்சாரம், முதல் ரேடியோ, முதல் காலிங்பெல், முதல் பாம்பே டாய்லெட் என வரிசையாக அப்பா செய்த புதுமைப் புரட்சிகளால் ஊரில் எங்கள் வீட்டின் பெருமை கூடிக்கொண்டே போனதாக அம்மா சொல்லும். அதுவே கண் திருஷ்டியாகவும் ஆகிவிட்டது என்று வருத்தமும்படும்.
ஊரில் இருந்து சென்னைக்கு வந்து முதல் மின் தகனம் செய்யப்படுபவர் என்ற வகையில், இந்தப் பெருமையும் அம்மாவின் முதல் பெருமைப் பட்டியலில் சேர்க்கத்தக்கதுதான் என்று இப்போது தோன்றுகிறது!
அவ்வளவு மதிப்பீடுகளை அடைகாத்த பூர்வீக வீட்டை இழப்பது என்பது எத்தனை துயரம் நிறைந்தது. ஒரு வகையில் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போதே அம்மா, மனசுக்குள் செத்துப்போனது. எங்களின் எந்தச் சமாதானமும் அம்மாவின் சிதைந்த மனதைத் தேற்ற முடியவில்லை. மாநகர ஒண்டுக் குடித்தன வாடகைப் பொந்துகளையும், அவற்றின் உரிமையாளர்கள் போடும் அர்த்தமற்ற நிபந்தனைகளையும் அம்மாவால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இடுப்பு முறிந்து படுக்கையில் விழுந்த பின்பு வீடுபற்றிய நினைவுகள், அம்மாவுக்குள் ஒரு நீரூற்றுபோல் பொங்கியபடியே இருந்தது. தூக்கம் வராத இரவுகளில் தனக்குத்தானே பேசத் தொடங்கி இருந்தது. துயரங்களின் நிழலாக வீட்டின் திண்ணையிலும், ஆளோடியிலும், முற்றத்திலும், தாழ்வாரத்திலும், கூடத்திலும், கொல்லையிலும் ஏகாந்தமாக அலைந்துகொண்டே இருந்தது, அதன் மெல்லிய தொனி!
"ஒரு தடவை ஊருக்குப் போகணும்பா. நம்ம வீட்டைப் பார்க்கணும்போல இருக்கு!" எனத் தன் கடைசி ஆசைபோல அம்மாவைத்த கோரிக்கையை ஏனோ கடைசிவரை என்னால் நிறைவேற்றவே முடியவில்லை. ஒரு முறை எப்படியாவது அம்மாவை ஊருக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் எனக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது!
"யாரு இந்த பாடிக்கு கொள்ளிவைக்கப் போற வங்க? முன்னால வாங்க!" - தகன ஊழியனின் அழைப்பு என் நினைவுகளைக் கலைத்தன. வெளியே நின்று இருந்த உறவினர்களும் நண்பர்களும் உள்ளே வந்தனர்.
"இந்த கற்பூரத்தை அம்மாவோட காலாண்ட ஏத்திவெச்சி கும்புடுப்பா. யாருனா மூஞ்சி பாக்கலேன்னா கடைசியா பாத்துக்குங்கப்பா..." என்றான் சுற்றுமுற்றும் முகம் திருப்பியபடி, தகன ஊழியன்.
சுருங்கிச் சிறுத்து இருந்த அம்மாவின் பாதங்களின் அருகில் கற்பூரத்தை ஏற்றிவைத்து வணங்கினேன். அந்த இரும்பு ஸ்ட்ரெச்சர் சட்டென மின் அடுப் பின் வாய்க்குள் சென்றது.
"ம். வெளியே போய் வெயிட் பண்ணுங்க. முக்கால் அவர்ல சாம்பல் கிடைக்கும்!" - தகன ஊழியனின் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு இருந்து வெளியேறினோம்.
ஒரு மரணம் தரும் துயரம், நினைவுகளின் பாதா ளக் கரண்டியால் கடந்த காலத்துக்குள் புகுந்து துழாவியபடியே இருக்கிறது. மரணித்தவர் தொடர் பான சின்னச் சின்ன சம்பவங்களும் கரண்டியின் வளைவில் சிக்கியபடியே இருக்கின்றன. அவர் ஊடாக காலம் திரும்பி நடக்கிறது...
வீட்டுத் திண்ணையில் வெடி வெடித்த தீபாவளி களின் மருந்து நெடி குப்பென நாசிக்குள் பரவியது. "பாத்துப்பா... ஊதுபத்திய தூரமா புடி. கையில வெடிச்சிடப் போவுது!" என்று அம்மா பதறும். "பயப்படாதம்மா. ஒண்ணும் ஆகாது!" என்று அம்மாவைப் பார்த்துச் சிரிப்பேன் நான்.
வீட்டுக் கொல்லையின் கொய்யா மரக் கிளை தழுவும் முற்றத்தில்தான் பொங்கல் பண்டிகை நடக் கும். கண்ணாடி மாமாவின் மேற்பார்வையில் அக்காவும் நானும் செங்கல் அடுப்பில் பனை ஓலைகளை எரிப் போம். முதலில் பொங்க வேண்டும் என்பதற்காக நிறைய தீ வைக்க வேண்டும் - அதனால் சர்க்கரைப் பொங்கல் அடுப்பு எப்போதும் எனக்கு விருப்பமானது. அக்காவுக்கு வெண்பொங்கல் அடுப்பு. அம்மா சமையல் கட்டில் மும்முரமாக இருக்கும். மூன்று நாள் பொங்கலும் கோலமும் கும்மாளமுமாக வீடு களை கட்டும். தூங்காமல், சாப்பிடாமல் வீட்டுக்குள் சுழன்றபடியே இருக்கும் அம்மா. பண்டிகை கொண்டாடுவதில் அப்படி ஓர் ஈடுபாடு, அல்லது அர்ப்பணிப்பு.
நெருப்புப் பை சுற்றும் பெரிய கார்த்திகை நாட்கள், மஞ்சள் நூல் கட்டிக்கொள்ளும் ஆடிப் பெருக்குகள், முழு இரவு கண் விழிக்கும் சிவன் ராத்திரிகள், வைகுண்ட ஏகாதசிகள் என வீடு வருடம் முழுதும் பண்டிகைகளால் நிறையும். அதனால், அம்மாவின் மனம் நிறையும்!
ஓய்வு ஒழிச்சல் இன்றி ஒரு தேனியைப்போல் அலைந்துகொண்டே இருக்கும். பிறப்பு எடுத்ததே பிள்ளைகளை வளர்க்கவும் பண்டிகை கொண்டாடவும்தான் என்பதே அம்மாவின் உலகமாக இருந்தது!
சாம்பலை வாங்குவதற்காக தகன ஊழியனின் குரல் மீண்டும் அழைத்தது. உள்ளே சென்றோம்.
|