ரோலக்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆண்ட்ரே எனக்குப் பல வருடங்களாகப் பழக்கம். 'விம்பிள்டன் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் எலெக்ட்ரானிக் ஸ்கோர் போர்டுகளை நிர்மாணித்து, அதிலேயே நேரம் காட்டும் வாட்ச்சுகளையும் ஒளிரவிடலாம். 'ரோலக்ஸ்' என்று மேலே பெயர் பொறித்துக்கொள்ளலாம்!' என்று பல தடவை அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். 'அட, நேரம் காட்டும் போர்டுகளில் எல்லாம் ரோலக்ஸ் பெயரா? நம்ம லெவலே வேற!' என்று உதாசீனப்படுத்திக்கொண்டே இருந்தார் அவர். ஒருநாள் அவரை வம்படியாக இழுத்துச்சென்று, விம்பிள்டன் மைதானத்தில் அமரவைத்து, ஒரு முழு டென்னிஸ் போட்டியைப் பார்க்கவைத்தேன். ஒவ்வொரு சர்வீஸுக்கும் இடையில், அங்கிருந்த அனைவரின் கண்களும் போட்டியை ஒளிபரப்பு செய்த கேமரா லென்ஸ்களும் மையம்கொண்ட இடம்... ஸ்கோர் போர்டு. போட்டி முடிந்த மறுநிமிடம் ஆண்ட்ரே என் தோள் தட்டிச் சொன்னார், 'அங்கு ரோலக்ஸ் இருப்பதுதான் சரி!'
ஐந்து மணி நேரங்கள் செலவழித்து, ஐந்து நிமிடங்கள் சேமிப்பது லாபமா?
ஒரு முறை டென்னிஸ் மைதானத்தின் டிரெஸ்ஸிங் டேபிளில் டபுள்ஸ் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் இரு ப்ளேயர்கள் இடையிலான உரையாடலைக் கேட்டேன். அதில் ஒருவர் பக்கா புரொஃபஷனல் டென்னிஸ் ப்ளேயர். இரட்டையர் ஆட்டத்திலும் ஒற்றை ஆளாக விளையாடி ஜெயித்துவிடுவார். இன்னொரு ப்ளேயர் அறிமுக நிலையில் இருப்பவர். அனுபவம் குறைவு. அந்த புரொஃபஷனல் கத்துக்குட்டியிடம் கேட்டார்... 'தம்பி, நீ மேட்ச்சில் ஜெயிக்க நினைக்கிறாயா? அல்லது சும்மா கொஞ்சம் டென்னிஸ் ஆடினால் போதும் என்று நினைக்கிறாயா?' 'ஜெயிக்கத்தான் விரும்புகிறேன்!' என்றான் அந்த கத்துக்குட்டி. 'அப்போ சர்வீஸ் செய்துவிட்டு நீ கோர்ட்டை விட்டு விலகி நின்றுகொள். நான் கேமை முடித்துவிடுகிறேன்!' என்றார் புரொஃபஷனல். அந்தப் போட்டியை ஜெயிக்க வேண்டுமானால் மட்டும், அந்தத் திட்டம் கை கொடுத்திருக்கும். ஆனால், தொலைநோக்கில் பார்த்தால்...!?
என் அலுவலகத்தில் பயிற்சிக்குச் சேர்ந்திருந்த 'டிரெய்னி' ஒருவருக்குப் பயிற்சி அளித்துக்கொண்டு இருந்தார் சீனியர் ஒருவர். 'பயிற்சி எல்லாம் எப்படிச் செல்கிறது?' என்று சீனியரிடம் கேட்டேன். 'ஓ.கே. ஆர்வமாகத்தான் இருக்கிறான். ஆனால், எனக்குத்தான் எரிச்சலாக இருக்கிறது. நான் ஐந்து நிமிடங்களில் முடிப்பதை அவன் ஐந்து மணி நேரங்களுக்கு இழுத்து இழுத்துச் செய்துகொண்டு இருக்கிறான்!' என்றார் கொஞ்சம் சலிப்பாக. அந்த ஒற்றை வரியில் இருந்து பின்வரும் செய்திகளை உணர முடியும்.
1.அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள அந்த சீனியருக்குச் சங்கடமாக இருக்கிறது.
2. பயிற்சியின் முக்கியத்துவம், அதன் எதிர்கால நலன்பற்றி அவருக்கு அக்கறை இல்லை.
3. நிறுவனம் வளர்ச்சி அடையாமல் தேங்கித் தங்குவதற்கான காரணங்களுள் அதுவும் ஒன்று.
மேலாண்மைத் துறையில் இருக்கும் பலரும் செய்யும் தவறுதான் இது. பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்வது இல்லை. அல்லது, அதன் மூலம் அவர் களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தின் அருமை அவர்களுக்குப் புரியவில்லை. 'ஐந்து நிமிடங்களில் நான் தட்டித் தூக்கிவிடுவேன். எதற்காக நான் ஐந்து மணி நேரங்களை வீணடிக்க வேண்டும்!' என்ற லாஜிக் கேள்வி கேட்பவர்களே... உங்கள் ஆயுள் முழுவதும் ஐந்தைந்து நிமிடங்களாக மேலும் பல மணி நேரங்களைத் தொலைக்கப் போகிறீர்களா... அல்லது, அந்த ஐந்து மணி நேரப் பயிற்சியின் மூலம் அத்தனை மணி நேரங்களையும் சேமிக்கப் போகிறீர்களா?
|