முதலீடு என்று வருகிறபோது, நாம் பலரும் நினைப்பது பணத்தைத்தான். நிறையப் பேர் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கி நிற்பதற்குக் காரணம், முதலீடு என்பதை முழுக்க முழுக்கப் பணத்தோடு பொருத்திப் பார்ப்பதுதான். என்ன செய்வதாக இருந்தாலும், பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வரும் சௌகர்யக் காரணியை வேதமாக எடுத்துக்கொள்கிறோம்.
உண்மையில் இன்றைக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. முதலாளி ஆவதற்குப் பணம் மட்டும்தான் முதலீடு என்று இனியும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. மூளையை மட்டும் முதலீடு செய்து பணம் பண்ணியவர்கள் நிறையப் பேர். உழைப்பை முதலீடாகக்கொண்டு உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
நாம் கேட்கிற வெற்றிக் கதைகளின் பின்னால் முதலீடாக பணம் மட்டுமே இருந்தது இல்லை. பணம் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்ற நினைப்பிலேயே இருப்பதால்தான், இன்ன பிற வாய்ப்புகள் தெரிவது இல்லை. எந்த விஷயத்தையும் தெளிவுபட முன்னிறுத்துகிற ஆற்றல், துறை சார்ந்த வல்லுநர்களின் தொடர்பு, வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டுச் சிந்திக்கிற கற்பனா சக்தி, நேரம் காலம் பார்க்காமல் நினைத்ததை அடையத் துடிக்கும் உழைப்பு, உதவிக்கு வரத் தயாராக இருக்கும் நட்பு வட்டாரம், பேச்சுத் திறன், தேடல், தேடலால் கிடைக்கிற அறிவு... இப்படி இன்னும் பல விஷயங்களும் முதலீடுதான். இந்த முதலீட்டோடு பணத்தையும் இன்னொரு காரணியாகச் சேர்த்துக்கொள்ளலாம் அவ்வளவுதான்.
ஏதாவது தொழில் செய்து வாழ்க்கையில் ஜெயித்துவிட வேண்டும் என்று தொழில் தன்மையை உணர்ச்சிபூர்வமாக அணுகுவது ஆரோக்கியமானது அல்ல. கையில் இருக்கும் பணம், கடனுக்கு வாங்கிய பணம், நகைகளை விற்றதில் வந்த பணம், பெற்ற கடனுக்காக அப்பா தந்த பணம், அடகுவைத்ததில் கிடைத்த பணம்... இப்படி அத்தனையும் கொட்டி, உங்கள் இயல்போடு தொடர்பு இல்லாத ஏதோ ஒரு தொழில் ஏன் செய்ய வேண்டும்?
எதிர் வீட்டுக்காரன் செய்தான் என்பதற் காக நாமும் அப்படியே செய்துவிட முடியாது. அவரிடம் பணம் இருந்தது, அவர் பணத்தை முதலீடு செய்தார்? உங்களிடம் எது அதிகமாக இருக்கிறது பணமா? மூளையா அல்லது வேறொரு திறனா? எது அதிகமோ அதைத்தான் முதலீடு செய்ய வேண்டும்.
தொழில் தொடங்குவதிலும் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதிலும் சரி, இரண்டு விஷயங்கள் இருக்கவே கூடாது. ஒன்று, அதிபுத்திசாலியாகச் செயல்படுவது. இரண்டாவது, அர்த்தம் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தொழிலை அணுகுவது!
கம்ப்யூட்டரில் default settings என்று சொல்லுவதைப்போல, நமக்குள்ளும் சில default settings இருக்கும். அதுதான் இயல்பிலேயே நமக்கு உரிய திறன். அந்தத் திறன் எதுவென்று அறிந்து, அதை முதலீடு செய்வதே சிறந்தது. பணம் மட்டும்தான் முதலீடு என்றால், பிறவிப் பணக்காரர்கள் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும்.
|