ஸ்பெஷல் -1
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்
சொல்வனம்
சொல்வனம்

இல்லாத கனவு

சொல்வனம்

கிளிகள் பற்றிய
பெருங்கனவுகள் அம்மாவுக்கும்
பூனைகள் பற்றிய
பெருங்கனவுகள் அப்பாவுக்கும்
இருந்ததால்
பிராணிகள் பற்றிய
பெருங்கனவுகள்
தொலைந்துபோயிருந்தன
எங்களுக்கு!

\ வே.விநாயகமூர்த்தி

வாழ்வுக்கு பக்கம்

சொல்வனம்

வாழ்த்துகிறோம்
விளம்பரத்துக்கு
பின்பே இருக்கிறது
வருந்துகிறோம்
விளம்பரமும்.
வாழ்த்துவதா
வருந்துவதா
எனத் தெரியாமல்
அவசரமாகவோ
நிதானமாகவோ
வாசித்து முடிக்கப்படுகின்றன
வாழ்வின் பக்கங்கள்
செய்தித்தாள்களில்!

\ வே.விநாயகமூர்த்தி

வாரிசு

சொல்வனம்

வாத்தியார் பையன்
மக்கு
போலீஸ்காரர் பையன்
திருடன்
மந்திரி பையன்
மந்திரி!

- எம்.கோசலை ராமன்

கடல்தான் நீ

சொல்வனம்

சின்ன மீனைக் காட்டி
'இது நான்' எனவும்
பெரிய மீனைக் காட்டி
'அக்கா' எனவும் சொல்லிய
அனைகா குட்டி
அடுத்த மீன் காணக்
கிடைக்காததால்
கடலைக் காட்டி
'இதுதான் நீ' என்றாள்
அம்மாவிடம்!

\ நாவிஷ் செந்தில்குமார்

சாப்பாடு

சொல்வனம்

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

\ கோ.மோகன்ராம்

மீதமிருக்கும் உயிர்

சொல்வனம்

தங்கச் சாலைகள் போட
அடுக்கு மாடிகள் கட்ட
மாநாடு போட
மைதானம் விரிவாக்க
மலம் துடைத்துப் போட என
வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
எண்ணற்ற மரங்கள்.

பள்ளி விட்டுச்செல்லும் சிறுமி
மதிலோர வேம்புத் தளிர் மேல்
ஊற்றிச் செல்லும்
புட்டித் தண்ணீரின் மீதத்தில்
உயிர் வாழ்கிறது உலகம்!

\ ஜனா கே

சொல்வனம்
சொல்வனம்