அமெரிக்காவில் Jason's Deli என்ற பிரபலமான உணவகம் உள்ளது. அங்கு இருந்து நாம் ஒரு பீஃப் சாண்ட்விச் வாங்குகிறோம் என்றுவைத்துக்கொள்ளுங்கள். (வேறு என்ன ரவா தோசையா கிடைக்கும்?) அந்த அயிட்டத்தில் பிங்க் நிறத்தில் ஒரு அரை கிலோ மாட்டுக் கறியை அடைத்துத் தருகிறார்கள். தோசை, இட்லி, சாம்பார் போன்ற மென்பொருள்களுக்கு மட்டுமே பழக்கமான நம் குடல், அதைத் தாங்குமா? அதுவும் அந்தக் கறி சரியாக வெந்தும் இருக்காது. டெக்சாஸில் உப்பு வேறு அதிகம் சேர்க்கிறார்கள். இப்படி எல்லாம் புலம்பிக்கொண்டு இருந்த என் நண்பரிடம் சொன்னேன். டெக்சாஸ் போனால், நமக்கு ஓரளவு ஒத்துவரக்கூடிய உணவு நாச்சோஸ் அண்ட் சல்ஸா. கோதுமை பிரெட், வெங்காயம், தக்காளி, சீஸ் எல்லாம் சேர்த்த ஒரு மெக்ஸிகன் உணவு நாச்சோஸ். சல்ஸா என்பது ஒரு லத்தீன் அமெரிக்க நடனம். நடனத்தை எப்படி நாச்சோஸுக்குத் தொட்டுக்கொள்வது என்று கேட்காதீர்கள். சல்ஸாவுக்கு இன்னோர் அர்த்தமும் உண்டு. பூண்டு, தக்காளி, கொத்துமல்லித் தழை, உப்பு, வெங்காயம், எலுமிச்சை சாறு மற்றும் ஹாலப்பீன்யோ எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்தால், அதுதான் மெக்ஸிகன் சல்ஸா. ஹாலப்பீன்யோ? ஸ்பானிஷில் ஜே, எக்ஸ், ஆகிய எழுத்துக்களை ஹெச் என்ற உச்சரிப்பில்தான் சொல்லுவார்கள். ராஜா என்றால் ராஹா. ஜெனிலியா: ஹெனிலியா. மெக்ஸிகோ: மெஹிகோ. அதேபோல் jalapeno என்பது ஹாலப்பீன்யோ. அர்த்தம்... பச்சை மிளகாய். வேறு ஒன்றும் இல்லை, நம்மூர் தக்காளி சட்னியின் மெக்ஸிகன் வடிவம்தான் சல்ஸா. சல்ஸாவைத் தொட்டுக்கொண்டு நாச்சோஸைச் சாப்பிட்டால் அது ஒரு தனி ருசி. நான் டெக்சாஸ் சென்றது இல்லை. ஆனால், பாரிஸில் உலகின் சகலவிதமான உணவு வகைகளும் கிடைக்கின்றன.
ஆனால், டெக்சாஸ் பற்றி நண்பர் கேட்ட மற்றொரு விஷயம்தான் எனக்கும் புரியவில்லை. அங்கே பெண்களின் குறைந்தபட்ச எடையே 130 கிலோ இருக்கிறது என்றார். இப்படி சீஸும் மாட்டுக் கறியும் சாப்பிட்டு 130 கிலோ இருக்கும் அமெரிக்கர்களுக்கு இதய நோய் வருவது இல்லை. வெறும் சாம்பாரும் மோர்க் குழம்பும் சாப்பிடும் நமக்கு ஏன் வருகிறது? அது மட்டுமல்ல; கூர்க்கில் கவனித்தேன். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் பன்றி வளர்க்கிறார்கள். பன்றிக் கறிதான் கூர்க்கில் விசேஷம். ஆனால், பன்றிக் கறி சாப்பிட்டாலும் ஆண், பெண் எல்லோரும் படுஇளமையாக இருக்கிறார்கள். யாருக்கும் தொப்பை இல்லை. வியாதி இல்லை. ஆனால் ஒன்று, பன்றிக் கறி சாப்பிடுவதாலேயே தங்களை கர்நாடகாவில் கொஞ்சம் தாழ்வாகப் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கம் கூர்க் மக்களுக்கு இருக்கிறது.
உலகில் உள்ள இதய நோயாளிகளில் அதிகம் பேர் இந்தியாவில்தான் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஏன் அப்படி? நம்மவர்கள் எப்போதும் எதிலும் டென்ஷனாகவே இருக்கிறார்கள். உல்லா சம், உற்சாகம் என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள். மனைவியுடன் எங்காவது இன்பச் சுற்றுலா? ம்ஹூம்... வாய்ப்பே இல்லை. இந்தியாவில் சுற்றிக்கொண்டு இருக்கும் வெள்ளைக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் அவர்களுடைய ஊர்களில் அடிமட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்தான். ஆனாலும், சேமித்த பணத்தில் நகை வாங்காமல் ஜாலியாக ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறார்கள். இதய நோயில் உலகின் முதலிடத்தைப் பெற்றதுபோல் தங்கம் வாங்குவதிலும் இந்தியாதான் முதல். அதிலும் முதலிடம் தமிழ்நாடு. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி ஏன் ஐயா இப்படி வாங்குகிறீர் கள் என்றால், முதலீடு செய்கிறார்களாம். வெளி நாட்டுக்காரர்கள் இதை Fools gold என்கிறார்கள். முட்டாள்களின் தங்கம். எப்படி? 30 ஆண்டுகளுக்கு முன்னால் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலம், இன்றைக்கு 50 லட்சத்துக்குப் போகிறது. அதே பணத்துக்கு 10 பவுன் வாங்கி இருந்தால் அதன் இன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம். எது புத்தி சாலித்தனம்?
சரி, முதலீடு என்கிறோமே, அந்தத் தங்கத்தை என்றைக்காவது விற்று நம் ஆரோக்கியத்துக்குச் செலவு செய்து இருக்கிறோமா, நம் மனதுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்திருக்கிறோமா? (கொன்றே போட்டுவிடுவார்கள் சாமியோவ்!) ஒருவர் தன் ரத்தத்தை சிந்தி வாங்கும் தங்கம் என்றைக்குமே அவருக்குப் பயன்படுவது இல்லை என்பதுதான் நம் தமிழ்க் குடும்பங்களின் யதார்த்தம்.
இன்னொரு பிரச்னை, வறட்டு கௌரவம். ஒரு நடிகரோடு படப்பிடிப்புக்குச் சென்றுகொண்டு இருந்தேன். கேட் மூடியிருந்தது. கேட்டுக்கு உள்ளே வேறொரு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது. 'இறங்கி நடந்து செல்லுங்கள்' என்றார் பாதுகாவலர். இறங்கி நடந்தால் ஐந்து நிமிடத்தில் எங்கள் தளத்தை அடைந்துவிடலாம். 'இல்லை, நடக்க முடியாது' என்றார் நடிகர். அதனால் நாங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கு அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு சென்றோம். இடையில் ரயில்வே கிராஸிங் வேறு இருந்ததால் எங்கள் இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆயிற்று. நடை உடல்நலத்துக்கு நல்லதுதானே? அதை விட்டுவிட்டு வறட்டு கௌரவத்துக்காக முக்கால் மணி நேரம் வீண்.
|