மனிதர்களுக்கும் இந்தப் பொது விதி பொருந்தும் என்பதால், ஆதிகால மானுடப் பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாக இரை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுடக் கூட்டங்களைப் பெண் தலைவிகளே வழி நடத்திச் சென்றார்கள். ஆக, பெண்கள் எதற்குமே ஆண்களை நம்பி வாழாத காலம் அது. அப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்?
ஆதாரம்-1 காங்கோ நதிக்கரை ஓரமாக இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோப்போ என்ற வானர இனம். இந்த பொனோப்போக்கள் அச்சு அசல் மனிதர்களைப்போலவே நடந்துகொள்ளும். இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால், சைகை மொழியில் மனிதர்களுடனும் உரையாடுகின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவற்றைவிட விசேஷம், இவை கலவிகொள்ளும் விதம் அப்படியே மனிதர்களைப் போலவே இருக்கிறது.
மனிதர்களைப்போலவே என்றால் என்ன அர்த்தம்? மிருக கலவிக்கும், மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல்தான் கூடிப் புணரும். அதுவும் இனப்பெருக்க காலத்தில் மட்டும். எந்தவித சுகமும் உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத சம்பிரதாயமாக இருக்கும். ஆனால், முகம் பார்த்து, இன்னாருடன் உறவுகொள்கிறோம் என்று அறிந்து, பருவ காலம் மட்டும் அல்லாமல், தனக்குப் பிடிக்கும்போது எல்லாம் ஆசைக்காக உறவுகொள்ளும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்குத்தான் உண்டு. ஒன்று, மனிதன். இன்னொன்று, பொனோப்போ. நடத்தையிலும் மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறது என்றால், மரபு அணுக்களில்? பரிசோதனை செய்துபார்த்தால் ஆச்சர்யம். ஆனால், உண்மை. பொனோப்போக்களின் மரபு அணுப் புரதங்கள் 98 சதவிகிதம் மனிதர்களைப்போலவே இருப்பதைக் கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். ஆக, மரபு அணுரீதியில் பார்த்தால் மனிதர்களும், பொனோப்போக் களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனக் கலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்கக்கூட வாய்ப்பு இருக் கிறது.
ஆனால், இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல; நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பன்சிகளும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன. அப்படியானால், மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூக முறையைத்தான் கடைபிடித்து இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்!
|