ஏறக்குறைய இந்த மனோநிலைதான் இப்போது அநேக வர்த்தகப் பரிவர்த்தனைகளில் நடக்கிறது. கிரெடிட் கார்டு விற்பதில், இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஆள் பிடிப்பதில், சிம்கார்டு விற்பதில், புதிது புதிதாக வரும் நிதி தொடர்பான முதலீடுகளில் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இன்னும் பல துறைகளில் அப்போதைய வெற்றி மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் நிர்ணயிக்கப்படுகிற டார்கெட், டெட்லைன் நெருக்கடியும், இதில் பணி செய்யும் இளைஞர்களை இப்போதைக்கு ஜெயிக்க வேண்டும் என்று தூண்டுகிறதேஅன்றி, எப்போதும் ஜெயிப்பது எப்படி என்று சொல்லித் தருவது இல்லை. நிறுவனங்களுக்கு தனி நபர் குறித்து அப்படியான கவலை இருக்க வேண்டும் என்று இன்றைய கார்ப்பரேட் காலத்தில் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், அதில் ஈடுபடுகிற இளைஞர்கள் தங்கள் தொடர் வெற்றி குறித்துக் கட்டாயம் கவலைப்பட்டாக வேண்டும். பேச்சுத் திறனைவைத்து இப்போது ஜெயிக்கிற நாம்... தொடர்ந்து ஜெயிக்க முடியாமல் போகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனமே நம்மை அனுப்பிவிட்டு, அடுத்த ஆளை அந்த இடத்துக்குக் கொண்டுவரும்.
இன்றைக்கு இருக்கிற நெருக்கடியில், எதையாவது சொல்லித்தான் விற்க வேண்டும். தொடர் வெற்றி குறித்து யோசித்துக்கொண்டு இருந்தால், வியாபாரம் கைவிட்டுப் போய்விடும் என்று மனதுக்குள் இருக்கும் அழுத்தமான எண்ணத்தில் இருந்து முதலில் வெளியே வருவோம்.
இந்த எண்ணம்தான், விற்கிற பொருளைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதைவிட, வாடிக்கையாள ரைக் கவரும்படியாகப் பேசுவதில் மட்டும் குறியாக இருக்கச் சொல்கிறது. இந்த எண்ணம்தான், தான் இருக்கிற துறை சார்ந்த அறிவையும் உண்மைகளையும் தேடித் தெரிந்துகொள்வதைவிட, யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும் என்ற குருட்டு யோசனைக்குள் தள்ளி விடுகிறது. இந்த எண்ணம்தான், இப்போதைக்குக் கிடைக்கிற வெற்றி நிரந்தரமானது என்று நம்பவைக்கிறது. இந்த எண்ணம்தான், எதிரில் இருப்பவரின் அறிவு என்ன, தான் பேசுகிற விஷயம் குறித்து அவருக்கு இருக்கிற ஞானம் என்ன என்பதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், வேலையை முடித்தால் போதும் என்ற நோக்கில் வார்த்தைகளைக் குறைத்துவிடுகிறது. இப்படியான இன்ஸ்டன்ட் வெற்றிகள் நீண்ட நாளைக்கு நிலைக்காது என்ற நினைப்பைக்கூட இந்த எண்ணம் தடுத்துவிடுகிறது.
போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், அப்புறம் எப்படித்தான் வேலையை முடிப்பது?
விற்பனை, சந்தைப்படுத்துதல் இந்த இரண்டு மட்டுமே அல்ல... எந்த ஒரு பணியும் நம்பிக்கை என்கிற ஆதாரத்தின் மீது கட்டப்படும்போதுதான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். உண்மையை அழகுறச் சொல்லுதல் என்று ஒரு கலை உண்டு. அதுதான் நம்பிக்கையை வளர்த்து எடுக்கிறது. இந்த மனிதர் அல்லது இந்த நிறுவனம் நம்பிக்கைக்கு உரியது, என்ற எண்ணம்தான் அதன் தொடர் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
எப்படிப் பேசினால் வேலை நடக்கும் என்று யோசிக்க நேரம் செலவிடுவதைவிட, நீங்கள் செய்கிற பணி சார்ந்த அர்த்தமுள்ள தகவல்களைச் சேகரிக்க நேரம் செலவிடலாம். அந்தத் தகவல்களும், பணி செய்யும் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப உங்களை நீங்கள் தரமேற்றிக்கொள்ளும் பாங்கும், உங்களை, உங்கள் பேச்சை இயல்பாகவே வசீகரமானதாக மாற்றும்.
|