திரும்பி வரும்போது ஆட்டோக்காரரிடம் கேட்டேன். 'அரசியல்தான் காரணம்' என்றார். 'என்னது, அரசியலா?' ஆமாம்; பா.ஜ.க. ஆட்சியில் இது போன்ற 'கலாசாரச் சீரழிவுகளை' ஊக்குவிப்பது இல்லையாம். அதோடு, பப்களில் நடக்கும் அடிதடியும் ஒரு காரணம். போதாக்குறைக்கு சமீபத்தில் ஒரு கொலை வேறு நடந்திருக்கிறது. ஆட்டோக்காரர் வேறொன்றும் சொன்னார். "முன்பெல்லாம் பெண்கள் ஃபுல் மப்பில் வந்து ` 50-ல் செல்லும் தூரத்துக்கு ` 800, ` 1,000 கொடுப்பார்கள். அந்த வருமானம் போய்விட்டது!" என்றார். ஆனால், வருமானம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறதாம். ஏன்? சுயநினைவே இல்லாமல் வரும் அவர்களுக்கு, வேறு யார் மூலமாவது ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் ஆட்டோக்காரர்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? அந்தப் பிரச்னை இப்போது இல்லை!
சமீபத்தில் மதுரை சென்றிருந்தேன். காலையில் நான்கு மாசி வீதிகளையும் சுற்றினால்போதும்; நான்கு கி.மீ. ஆயிற்று. அப்படிச் சுற்றி வந்தபோது, வடக்கு மாசி வீதியில் நான் பார்த்த ஒரு காட்சி எனக்கு கலாசார அதிர்ச்சி. அங்கு இருந்த பெண்கள் பள்ளியின் வாசலில் ஒரு திறந்த வெளி டாய்லெட் இருந்தது. ஆளாளுக்கு நின்று அடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, மதுரை மட்டுமல்ல; திருநெல்வேலி, திருச்சி என்று எல்லா நகரங்களிலுமே பொதுமக்களுக்குச் சரியான கழிப்பறை வசதி இல்லை. மகா கேவலம். சரி, பெண்கள் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார்கள்? சென்னையிலும் சரியான கழிப்பறை வசதி இல்லை என்றாலும், யாரும் தெருவில் நின்று அடிக்க முடியாதபடி எங்கு திரும்பினாலும், இங்கே ஒரு கடை இருக்கும். சென்னைவாசிகளுக்கு ஒரே ஆறுதல், இங்கு உள்ள ஹோட்டல்களில் கழிப்பறை வசதி உண்டு.
மதுரையில் என்னைக் கவர்ந்த விஷயம், அங்கே உள்ள உணவகங்கள். காலை டிபனுக்கு மேலமாசி வீதி சபரி. மாலையில் பஜ்ஜி வடைக்கு, வடக்கு மாசி வீதி மூலையில் உள்ள கோபி ஐயங்கார் கடை. உச்சந்தலை முடியைப் பிடித்து இழுக்கும் கார சட்னிக்காகவே இங்கே போகலாம். குமார் மெஸ், அருளானந்தம் மெஸ், கோனார் மெஸ், பேச்சுலர் பாய்ஸுக்கு காக்கா தோப்புத் தெரு ஸ்ரீராம் மெஸ், நள்ளிரவிலும் சுடச் சுட தோசை கிடைக்கும் அக்கா கடை எல்லாவற்றிலும் உண்டு மகிழ்ந்தேன். ஆனால், அய்யனார் தோசைக் கடையைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே வெள்ளைக்கரு முட்டை தோசை அட்டகாசமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார் சங்கர். தேர்முட்டியில் நின்றுகொண்டு பலரையும் விசாரித்தேன். கிடைக்கவில்லை.
ஒருநாள் என்னைப் பார்க்க ஒரு மதுரை நண்பர் வந்தார். எதில் வந்தீர்கள் என்று கேட்டபோது, பஸ்ஸில் என்றார். மதுரையில் மோட்டார் சைக்கிளே ஓட்ட முடியவில்லையாம். அந்த அளவுக்கு ஷேர் ஆட்டோக்கள் பெருத்துவிட்டன. "எல்லாம் கவுன்சிலர்களுடையது. யாரும் தட்டிக்கேட்க முடியாது. கேட்டால், அண்ணனைக் காண்பிக்கிறார்கள்!" என்றார். அவர் ஒரு தீவிர தி.மு.க தொண்டர். ஆனாலும், ஆட்சி மாற வேண்டும் என்றே விரும்புவதாகச் சொன்னார். ஏன் என்று கேட்டேன். "போலீஸே இல்லாத நாடு மாதிரி இருக்கிறது. ஆளாளுக்குத் தண்டல்காரராகிவிட்டார்கள். தாங்க முடியவில்லை!" என்றார்.
இசைக்கு மொழி கிடையாது. சமுத்திர சத்தத்தில் இருந்து குழந்தையின் சிணுங்கல் வரை இசைதான். சொற்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் இசை நம் மனதைத் தொடவே செய்கிறது. இன்றைய இசை உலகில் கொடி கட்டிப் பறப்பது அரபி மொழியில் பாடப்படும் ரய் (rai) இசைதான். இது அல்ஜீரியாவில் உருவானது. காலீத் (Khaled) பாடிய 'தீதீ...தீதீ' என்ற ரய் பாடல் இந்தியாவில் பிரபலம். ஆனால், ரய் இசையின் தர |