Gene economics மரபு அணுப் பொருளாதாரத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆணின் விந்து அணு வைத் தயாரிக்க அதிக செலவு ஆவது இல்லை. அதனால், ஒரே நாளில் பல மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்து தள்ள முடியும். ஆனால், பெண்ணின் கரு முட்டையோ, ரொம்பவே காஸ்ட்லியான ஒரு படைப்பு. அதனால்தான், அது மாதத்துக்கு ஒன்று என்று தயாராகிறது. அதனால், எரி பொருள் இருப்பைவைத்து மதிப்பிட்டால், விந்து அணு மலிவானதாகவும் கரு முட்டை விலை உயர்வானதாகவும் ஆகிவிடுகிறது.
ஆணின் விந்து அணுக்களுக்குச் செய்கூலி மிகக் குறைவு. அதனால், அது விரையம் ஆனாலும் பெரிய நஷ்டம் ஏற்படாது. அதனால்தான் ஆண் மிருகங்கள், பெண்ணின் சாயலில் இருக்கும் பிற வஸ்துக்களைக் கண்டாலும், உடனே விந்து அணுக்களை வெளியேற்றிவிடுகின்றன. அதனால், அந்த மிருகத்துக்கு எந்தப் பெரிய இழப்பும் இல்லை. ஆனால், பெண் தயாரிப்பதே மாதத்துக்கு ஒரே ஒரு கரு முட்டை என்பதால், அதை விரையம் செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை. அதனால், பெண் தன் காஸ்ட்லியான முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடனே அணுக வேண்டி இருக்கிறது.
தன் மரபு அணுக்களைப் பரப்பிக்கொள்ள ஆண் அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பது இல்லை. ஒரு தகுந்த பெண்ணைத் தேடிப் பிடித்து, அவளை இசையவைத்து, உடல் பாகங்களைப் பொருத்தி, விந்து அணுக்களை முதலீடு செய்துவிட்டால்போதும். சில நிமிட அசைவுகள், சில துளி விந்து அணுக்கள்... இந்த சொற்ப முதலீட்டி லேயே அவன் மரபு அணுக்கள் எளிதாகப் பரவிவிடும். அதன் பிறகு, அந்தப் பெண் இருக்கும் திசை பக்கமே அவன் வரவில்லை என்றாலும், அவன் மரபு அணுக்கள் மிக ஷேமமாகப் பரவித்தான் இருக்கும்.
ஆனால், பெண் தன் மரபு அணுக்களைப் பரப்பிக்கொள்வது இத்தனை எளிது இல்லை. இவள் மாதம் முழுக்க முயன்று, எத்தனையோ கிலோ எரிபொருளைக் கொட்டிக் குவித்து, ஒரே ஒரு கரு முட்டையை உருவாக்குகிறாள். அந்தக் கரு முட்டையை விந்து அணுக்களோடு கலந்து, கருவைத் தன் உடம்பிலேயே உருவாக்குகிறாள். இந்தக் கருவை மாதக்கணக்கில் தன் உடலில் தக்கவைத்து, போஷாக்கு அளித்து, பிரசவத்தின் பெரும் துயர்களை எல்லாம் அனுபவித்து, குட்டியை ஈன்றும் புறம் தந்து, அதற்குப் பாலூட்டி, பத்திரப் படுத்தி, வாழ்வியல் வித்தைகள் சொல்லித் தந்து... ஆக, பெண் தன் ஒட்டுமொத்த உடலையும், வாழ்வையும் பணயம்வைத்தால் ஒழிய, அவளுடைய மரபு அணுக்கள் செம்மையாகப் பரவாது.
|