அவசர வாழ்க்கை என்று சொல்லி, நம்முடைய பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டோம். எண்ணெய்க் குளியலும் அதில் ஒன்று. வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் போட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பலாம். சின்ன வயதில், என் அம்மாச்சி எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவைப்பார். கண்ணிலும் காதிலும் எண்ணெய்விட்டு ஊறவைத்து, சுடச்சுட வெந்நீரில் அம்மாச்சியோ, அம்மாவோ, அல்லது மனைவியோ குளிப்பாட்டிய அனுபவம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பாக்கியசாலிகள். எண்ணெய்க் குளியலை ஆயுர்வேதத்தில் அப்யங்கம் என்பார்கள். இதே ஆயில் மசாஜ் தாய்லாந்திலும் உண்டு. ஆனால், அங்கே அதை வேறுவிதமான பெண்கள் செய்வதால் காரியமே திசை கெட்டு 'வேறு' ரூட்டில் போய்விடுகிறது.
அப்யங்கத்தைத் தொடர்ந்து செய்வது பஞ்சகர்மா. அந்தக் காலத்தில் ராஜாக்கள் செய்துகொண்ட வைத்தியம். நோயாளி என்றில்லை; யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இளமை துள்ளும். எப்படி? நம் உடம்பில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. இந்த நாடிகளைச் சுத்தம் செய்வதே பஞ்ச கர்மா. கசாய வஸ்தி, ஸ்நேக வஸ்தி, வமனம் (வாந்தி எடுக்கவைக்கும் சிகிச்சை), நசியம் (மூக்கு வழியாக மருந்தைச் செலுத்துவது), விரேஜனம் (பேதி) என்பதே பஞ்சகர்மா. வஸ்தி என்றால் எனிமா. வஸ்தி, விரேஜனம் இரண்டும் பேதிதானே... என்ன வித்தியாசம்? வஸ்தி (எனிமா) என்பது 'கீழ்' வழியாக மருந்தைச் செலுத்தி பேதி போகவைப்பது. விரேஜனம், வாய் வழியாக பேதி மருந்தைக் கொடுப்பது.
ஆயுர்வேதத்துக்கு தமிழக அரசு தரும் ஆதரவு பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அதன் பயன் மக்களைப் போய்ச் சேரவில்லை. காரணம், மக்களிடம் அது குறித்த விழிப்பு உணர்வு இல்லை. மற்றும், அதிகாரவர்க்கம். எனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் சொன்னார், அவருடைய நேரம்எல்லாம் மக்களுக்கு மருத்துவம் செய்வதைவிட பொய்க் கணக்கு எழுதுவதிலேயே போய்விடுகிறது என்று. தினமும் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், 10 பேர்கூட வருவது இல்லை. டாக்டராகப் போய்ப் பார்த்தால், எல்லோரும் பிள்ளை பிடிப்பவனைக் கண்டதுபோல் பயந்து ஓடுகிறார்கள். அதனால், மருத்துவமனைக்கே வராத 40 நோயாளிகளுக்குக் கற்பனையான பெயர், கற்பனையான நோய் எல்லாம் கண்டுபிடித்துப் பதிவேட்டில் எழுத வேண்டும். பிரச்னை அதோடு முடியவில்லை. 40 பேருக்கும் 'கொடுத்த' மருந்தை என்ன செய்வது? மருத்துவமனைக்கு வந்த நிஜமான நோயாளிகளிடமே ஒன்றுக்கு இரண்டாகக் கொடுத்துவிடுவது. இப்படி இருந்தால் உருப்படுமா ஆயுர்வேதம்? இவ்வளவுக்கும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆயுர் வேத மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை; கடை களில்கூட இவ்வளவு தரமாகக் கிடைக்காது!
|