Published:Updated:

உயிர் மொழி! - 13

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 13

உயிர் மொழி!  - 13
உயிர் மொழி!  - 13
உயிர் மொழி!  - 13
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 13

தொல்காப்பியர் ஏன் அப்படி எழுதினார்? அடிமையாக இருப்பவன் பாட்டுக்குத்

தலைவனாக அதாவது, ஹீரோவாக இருக்க முடியாது என்று ஒரு விதியை அவர் முன்வைக்கக் காரணம் என்ன? சிம்பிள்... சுய சிந்தனா சக்தியும் சுதந்திரமும் இல்லாதவன், ஏவல் செய்ய மட்டுமே லாயக்கானவன். இப்படிப்பட்டவனை ஆண்களும் மதிக்க மாட்டார்கள், பெண்களும் காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலகில் உள்ள எல்லாப் பெண்பாலின உயிரினங்களுக்கும் ஒரு பொது சுபாவம் உண்டு. அவை எல்லாமே தலைமைக் குணங்களைக்கொண்ட உயர் அந்தஸ்து ஆல்ஃபா ஆண்களைத்தான் இனப்பெருக்கத்துக்காகத் தேர்வு செய்கின்றன. தன் வாழ்வைச் சுயமாக நிர்ணயிக்க முடியாத அடிமை நிலையில் இருக்கும் ஒமேகா ஆண்களைப் பெண்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. இதில் ஒரு பெரிய மரபணுவியல் சூட்சுமமே இருக்கிறது. சமூகக் கூட்டங்களாக வாழும் யானை, குரங்கு, ஓநாய் மாதிரியான விலங்குகளில் என்னதான் நாம் எல்லோரும் ஒரே இனம், எல்லோரும் ஒரே தரம் என்று சமத்துவம் பேசினாலும், இவற்றுக்குள் ஒரு சமூக அடுக்கு நிலை social hierarchy இருக்கத்தான் செய்கிறது. அதிக பவர் இருக்கும், பேரந்தஸ்து பெருந்தகை, ஆல்ஃபா என்கிற தலைமைப் பதவியை வகிக்கும். அதற்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் பீட்டா, காமா, டெல்டா வகையறாக்கள்... மந்திரி, செயலாளர் மாதிரியான நிலைகளை நிரப்பும். இந்த எல்லா நிலைகளுக்கும் கீழே மிகக் குறைவான சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒமேகா, ஏவலுக்குக் கட்டுப்பட்டு இருக்கும்.

உயிர் மொழி!  - 13

எப்படி புரட்டிப் போட்டாலும் கம்யூனிசம், சோஷலிசம் பேசினாலும், எல்லா மனிதர்களும் சமநிலை வகித்தாலும், இந்த பவர் அணி வரிசை பின்புலத்தில் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். இப்படி இயங்கும் இந்தத் தர வரிசையில் ஒரு பெண், ஆல்ஃபா ஆணைத் தேர்ந்தெடுத்தால்தானே அவனுடைய உச்சகட்ட அந்தஸ்து, வளங்கள் ஆகியவற்றைக்கொண்டு அவள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முடியும்? அப்படியே ஒரு வேலை இந்த ஆல்ஃபா ஆண் தோற்றுப்போனாலும், முன்பு அவன் ஒரு ஆல்ஃபாவாக இருந்ததைவைத்துக் காலத்தை ஓட்டலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், அவனுடைய மரபணுக்கள் ஆல்ஃபா தனம் ததும்புபவை என்பதால், அவனுக்குப் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் தாமும் ஆல்ஃபா ஆகிவிடலாமே.

ஆனால், ஒமேகா? அவனுடைய மரபணுக்களை உள்வாங்கிக்கொள்வதால், அவள் குழந்தைகளுக்குப் பெரிய ஆதாயமே இல்லையே. இதனால்தான் சமூக அடுக்கு அமைப்பில் வாழும் எல்லா உயிரினப் பெண்களுமே ஆல்ஃபா என்றால், உடனே இசைந்துவிடுகின்றன. ஒமேகாவை ஒரங்கட்டிவிடுகின்றன. தன் எதிரில் இருக்கும் ஆண், ஒரு ஆல்ஃபாவா... இல்லையா என்று கண்டுபிடிக்கும் திறமை பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கிறது. பிரச்னை வரும்போது பயப்படாமல், அசகாயசூரனாக எதிர்த்துப் போராடி ஜெயிக்கிறானா? தன்னைவிட வறியவர் என்றால், உடனே தன் பலத்தைக்கொண்டு ரட்சிக்க முன்வருகிறானா? ஏவல் செய்பவனாக இல்லாமல், தானே சுயமாக யோசித்து கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுகிறானா? அவனுக்கு மேல் தலைவர்கள் யாருமே இல்லை, அவன்தான் எல்லோருக்கும் மேல் என்பதை நிரூபிக்கிறானா? அவ்வளவுதான், பெண்கள் உடனே அவன் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.

இதுவே, சாஸ்திர சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொண்ட அவளுடைய சொந்தக் கணவன், ஆல்ஃபாவாக இல்லை. அட, ஏதோ ஒரு பீட்டா, காமா, டெல்டாவாக இருந்தால்கூட, அவள் பொறுத்துக்கொள்வாள். ஆனால், அவனே ஒரு ஒமேகா என்றால், அவ்வளவுதான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் இந்த ஆண்களைப் புறக்கணித்துவிட்டு, வேறு ஆண்களை நோக்கித் திரும்புகின்றனர். என்னதான் தாலி சென்டிமென்ட், கற்பு சென்டிமென்ட் என்று தடுப்புக்கள் போட்டாலும், இயற்கையின் உந்துதல்களை இவற்றால் தடுக்கவே முடிவது இல்லை. அந்தக் காலத்திலாவது பெண்களின் இந்த வேட்டுவ இயல்பை மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சமூக மரபு, குல வழக்கம், கிராமத்துக் கட்டுப்பாடு என்று பல விதங்களில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இன்று, உலகமே ஒரு சின்ன உருண்டையாகிக்கொண்டு இருக்கும் நிலையில், சுயகட்டுப்பாடு ஒன்றைத் தவிர, பெண்களைக் கட்டுப்படுத்த வேறு எந்த சக்தியும் இல்லை. ஓர் ஆண், தன்மானத்தையும் மரபணுக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், அவன் ஆல்ஃபா தனங்களைக் காட்டிக்கொள்கிறானோ இல்லையோ, கட்டாயமாக ஒமேகா அறிகுறிகளைத் தவிர்த்தே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறான்.

உயிர் மொழி!  - 13

பிறக்கும்போது எல்லோருக்குமே எல்லைகள் அற்ற விசால மனசுதான். வளர... வளர... அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், சகோதர சென்டிமென்ட் எனப் பலவித கட்டுப்பாடுகள் எல்லைகளைச் சுருக்குகின்றன. எஜமானர் விசுவாசம், அலுவலகப் பற்று என நம் வேலை நம்மை அடிமைப்படுத்துவதுபோலவே, மதப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று எனப் பல மாயைகளால் சமுதாயம் நம் மனதை முடக்கிவிடுகிறது. இவற்றை முக்கியம் என்று நம்பிக்கொண்டு, இவற்றுக்காக நாமும் மெனக்கெட ஆரம்பித்துவிடுகிறோம். நம் நம்பிக்கையே நம் மனதை அடிமைப்படுத்திவிடுவதால், நம்மையும் அறியாமல் ஒமேகா மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

ஆனால், இயற்கைக்கு இதெல்லாம் கிடையாதே... கடைசியில், only the fittest shall survive என்பதுதான் வெல்கிறது. இயற்கையின் நியதி, சிலரது மரபணுக்களை வடிகட்டி ஒதுக்கித்தள்ளுகிறது. வேட்டையின்போது வறிய உயிர்களை வடிகட்டும் வேலையை ஆணும் செய்யலாம். ஆனால், கலவி வழியாக வடிகட்டும் வேலையைப் பெண்ணால் மட்டும்தான் செய்ய முடியும். அதனால்தான் இந்த sexual selection கலவியல் தேர்வில், பெண்கள் பாகுபாடோடு நடந்துகொள்கிறார்கள். அம்மாவுக்காக, அக்காவுக்காக, அலுவலகத்துக்காக, தாய்நாட்டுக்காக, தாய் மொழிக்காக, யாரோ ஒரு தலைவனுக்காக, ஏதோ ஒரு போதைக்காக... என்று அடிமையாகிப்போகும் ஆண்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தனக்காகவும் தன் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணிக்கும் ஆல்ஃபா ஆண்களை மட்டுமே தேர்வு செய்து அவன் மரபணுக்களைப் பரப்பித் தருகிறார்கள் பெண்கள். இதுதான் இயற்கையின் அமைப்பு என்றால், ஒரு புத்திசாலி ஆண் என்ன செய்ய வேண்டும்?

உயிர் மொழி!  - 13
உயிர் மொழி!  - 13
(காத்திருங்கள்)