மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 05

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 05

மனம் கொத்திப் பறவை! - 05
மனம் கொத்திப் பறவை! - 05
மனம் கொத்திப் பறவை! - 05
மனம் கொத்திப் பறவை! - 05

மிழில் அவ்வளவாகப் பயண நூல்கள் இல்லை. முன்பு மணியன் எழுதினார். ஆனால்,

அவர் எங்கோ ஒரு ஆப்பிரிக்க தேசத்துக்குப் போய், அங்கே தென்னிந்திய உணவு கிடைக்காமல் அலைந்து, கடைசியில் அது கிடைத்த அதிசயத்தைப்பற்றியே அதிகம் எழுதினார் என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், நாணயத்தின் இன்னொரு பக்கத்தைப்போல், உலகில் அதுவரை எந்தத் தமிழரும் கால் வைத்திருக்காத தேசங்களுக்கு எல்லாம் சென்றார் மணியன். இப்போது தமிழில் பயணக் கட்டுரைகளே படிக்கக் கிடைப்பது இல்லை. பயணத்தைப்போல் பயணம்பற்றிய நூல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு பயண நூலைச் சமீபத்தில் படித்தேன்.

மனம் கொத்திப் பறவை! - 05

அந்த இளைஞனின் வயது 17. தாய், தந்தை இருவரையும் பார்த்தது இல்லை. அவனைப் பிரசவிக்கும்போதே தாய் இறந்துவிட்டார். அவன் தன் தாயின் கருவில் இருக்கும்போதே தூரதேசங்களில் வர்த்தக விஷயமாகப் பயணம் செய்யக் கிளம்பிவிட்டார் தந்தை. உறவினர் களால் வளர்க்கப்படுகிறான் சிறுவன். யாரும் கேள்விப்பட்டு இராத ஒரு நாட்டின் மன்ன னுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் தந்தை. இதெல்லாம் நடந்தது 800 ஆண்டுகளுக்கு முன்னால். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவும் கத்தாயும் ஏதோ மாயாஜாலக் கதைகளில் வரும் தேசங்களைப்போல் தோன்றுகின்றன. (அந்தக் காலத்தில்சீனாவின் பெயர் கத்தாய்). அந்தக் காலகட்டத்தில்தான் மங்கோலியர்கள் ஆசியா மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகள் முழுவதையும் தங்கள் ஆட்சியில் வைத்திருந்தார்கள்.

இன்றைய தேதி வரை அதுவே மனித வரலாறு கண்ட மிகப் பெரிய சாம்ராஜ்யமாகக் கருதப்படுகிறது. அந்த சாம்ராஜ்யத்துக்கு அடிகோலியவர் செங்கிஸ்கான். அதை முழுமையாக முடித்தவர் அவருடைய பேரன் குப்ளே கான்.

அப்போது இத்தாலியில் இருந்து தரை மார்க்கமாகவே (ஒட்டகம்) சீனா வரை சென்ற அந்த 17 வயது இளைஞனின் பெயர்தான் மார்க்கோ போலோ. வீட்டில் இருந்து (வெனிஸ்) கிளம்பி அவன் திரும்பவும் நாடு வந்து சேர்வதற்கு 25 ஆண்டுகள் பிடித்தன. குப்ளே கானுக்கு மார்க்கோ போலோவை மிகவும் பிடித்துவிட்டதால், அவரைத் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விடவில்லை. கானின் கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடித்தான் மார்க்கோ போலோ சீனாவைவிட்டுக் கிளம்பியிருக்கிறார். திரும்பும்போது நிலவழிப் பாதுகாப்பு இல்லை என்று கடல் மார்க்கமாக இந்தியாவைச் சுற்றிக்கொண்டு வெனிஸ் திரும்புகிறார்.

மனம் கொத்திப் பறவை! - 05

வழியில் தஞ்சாவூரில் சில தினங்கள் தங்கி இருக்கிறார். அப்போது அவர் பார்த்த விஷயங்கள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளன. அவர் இந்தியாவுக்கு வந்த ஆண்டு 1288. அப்போது சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருந்தது. சோழ மன்னனைப் பாண்டிய மன்னன் சிறை பிடித்திருந்தான். அப்படி ஒரு நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தபோதிலும், இந்த உலகத்திலேயே தனக்குப் பிடித்த இடமாக தஞ்சாவூரைக் குறிப்பிடுகிறார் போலோ. என்ன காரணம் என்று பின்னால் பார்ப்போம். ஏன் இந்த மக்கள் திராட்சையில் இருந்து ஒயின் தயாரிக்காமல் உயரமான இரண்டு மரங்களில் இருந்து ஒயின் போன்ற ஒரு திரவத்தை இறக்குகிறார்கள் என்று ஓர் இடத்தில் ஆச்சர்யப்படுகிறார். தென்னை, பனை என்ற பெயர்கள் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

மனம் கொத்திப் பறவை! - 05

இங்கெல்லாம் மக்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டு ஆச்சர்யம்கொண்டு மன்னனைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் அவரைத் திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது. 'நாம் மண்ணில் இருந்து வந்தோம்; மண்ணுக்கே திரும்பப் போகிறோம். அதனால் தான் மண்ணில் அமர்ந்து சாப்பிடுகிறோம்' என்பதே மன்னர் சொன்ன பதில். அப்போது அவர் குப்ளே கான் சாப்பிடுவதை நினைத்துப் பார்க்கிறார். மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்தே சாப்பிடுவார் குப்ளே கான். மேலும், அவர் எதையாவது எடுத்துக் குடித்தால், அவருக்குக் கீழே அமர்ந்து சாப்பிடுபவர்கள் அப்படியே சாப்பாட்டை வைத்துவிட்டு, முழங்காலிட்டு அமர வேண்டும். அவர் குடித்து முடித்ததும்தான் அவர்கள் தங்கள் இருக்கை யில் அமரலாம்.

தஞ்சாவூரை போலோவுக்குப் பிடித்துப் போனதற்குக் காரணம் கொஞ்சம் சமகாலத் தமிழ் இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. கு.ப.ரா., தி.ஜானகிராமன், கரிச் சான் குஞ்சு, தஞ்சை பிரகாஷ் என்று தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த அத்தனை எழுத்தாளர்களும் அவரவர் பாணியில் தங்கள் எழுத்தில் செக்ஸை எந்தத் தயக்கமும் இல்லாமல் கையாண்டு இருக்கிறார்கள். ஃப்ராய்டியத் தாக்கத்தை அடி யோட்டமாகக்கொண்டு இருக்கும் எழுத்தை உருவாக்கிய இந்திரா பார்த்தசாரதியும் கும்பகோணத்துக்காரர்தான். மார்க்கோ போலோ இதை 700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி இருக்கிறார். இந்தப் பிரதேசத்து மக்களிடம் செக்ஸ் மீதான பயமோ, தயக்கமோ, சிறிதும் இல்லை என்கிறார் போலோ. மேலும், சில விஷயங்களையும் விவரித்து எழுதுகிறார். அது இங்கே நமக்கு வேண்டாம்.

மனம் கொத்திப் பறவை! - 05

சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதிக்கு நடந்த சதாபிஷேக விழாவில் கலந்துகொண்டேன். மேடையில் பேசிய எஸ்.ராம கிருஷ்ணன், இ.பா-வை ஏன் தனக்குப் பிடிக்கும் என்று 10 காரணங்கள் சொன்னார். அதில் ஒன்று, இ.பா. தமிழ்ப் பேராசிரிய ராக இருந்தும் தமிழ்தான் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி என்று சொல்லவில்லை. யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்பதை நாம் உண்மையிலேயே நம்பினால், எல்லா மொழிகளையும் எல்லா தேசங்களையும் நாம் சமமாகவே பாவிக்க வேண்டும். தேசாபிமானம், குலாபிமானம், பாஷாபிமானம் மூன்றும் கூடாது என்றார் பெரியார்.

அது சரி, எனக்கு ஒரு சந்தேகம். சதம் என்றால் 100. அப்படி இருக்கும்போது ஏன் 80-வது பிறந்த நாளை சதாபிஷேகம் என்கிறார்கள்?

எனக்குப் பிடித்த ஒரு சமகாலப் பயண எழுத்தாளர் பால் தெரூக்ஸ். ரயிலிலேயே உலகம் சுற்றிய தெரூக்ஸ், தன் இந்திய அனுபவங்களை த க்ரேட் ரயில்வே பஸார் என்ற நூலில் எழுதியிருக்கிறார். (உலகின் மிக நீளமான டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் செல்ல வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை உண்டு. சுமார் 10,000 கி.மீ. தூரத்தை 9 நாட்களில் கடக்கும் இந்த ரயில் மாஸ் கோவில் ஆரம்பித்து சைபீரியா, மங்கோலியா, சீனா போன்ற பல நாடுகளைக் கடந்து செல்கிறது).

பால் தெரூக்ஸ் ஜி.டி. எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து சென்னை வந்த கதையை எழுதும்போது, தமிழர்களைப்பற்றியும் சொல்கிறார். அப்படி அவர் குறிப்பிடுவது தமிழர்கள் சத்தம் போட்டுப் பேசுகிறார்கள்; அதிகமாகப் பேசுகிறார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 05

தெரூக்ஸ் ரொம்பவும் கிண்டல்காரப் பேர்வழி. அவர் டெல்லி யில் ஜி.டி. எக்ஸ்பிரஸில் ஏறச் சென்ற போது, பிளாட்ஃபாரத்தில் பெரிய பெரிய டிரங்குப் பெட்டிகளாக இருந்ததாம். 'அதனால்தான் க்ராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்போல' என்று எழுதுகிறார்.

ரயில்பற்றி நினைக்கும்போது பழைய காலத்து நிலக்கரி இன்ஜின் ரயில்களின் ஞாபகம் வருவதைத் தவிர்க்கவே முடியாது. அதேபோல் ரயில் சிநேகிதங்கள். இந்தக் காலத்தில் அதற்கெல்லாம் வழியே இல்லை. பிஸ்கட்டில் மயக்க மருந்து கொடுத்து ஆளைக் கவிழ்த்துவிட்டு, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட் களைக் கொள்ளை அடிக்கும் கும்பல் பெருகிவிட்டது. ரயிலில் ஒரு சக பயணியின் மூன்று வயதுக் குழந்தை நமக்கு பிஸ்கட் கொடுத்தால்கூட சந்தேகமாக இருக்கிறது. ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகும்போது, அந்த இடத்தில் திருட்டும் கொள்ளையும் அதிகமாகும் என் பது ஒரு சமூக யதார்த்தம்.இதோடு தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். வேறு வழி இல்லை.

இந்த மயக்க பிஸ்கட்டையும் தாண்டி பலருக்கு ரயில் பயணம் பிடித்திருக்கிறது. ஆனால், இந்திய ரயில்கள் அவ்வளவு சௌகர்யமானவை அல்ல என்பது என் அபிப்பிராயம். மேற்கத்திய நாடுகளில் விமானத்தைவிட ரயில் கட்டணம் அதிகம். வசதிகளும் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கும். ரயில் பயணத்தில் இன்னொரு பிரச்னை, காலை நேரத் தில் ஜன்னல் வழியே கிடைக்கும் காட்சி.கிராமப்புற இந்தியர் களுக்கு இன்னமும் ரயில் பாதை தான் டாய்லெட்டாக இருந்து வருகிறது.

இந்திய ரயில்களின் மற்றொரு தவிர்க்க முடியாத அம்சம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறும் விதவிதமான பிச்சைக்காரர்கள். எல்லா தேசங்களிலும் பிச்சைக்கா ரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில்தான் அது ஒருமிகப் பெரிய சமூக அவலத்தின் குறியீ டாக இருக்கிறது. டிராஃபிக் சிக் னலில் கைக்குழந்தையோடு பிச்சை எடுக்கும் பெண்களும் சிறுவர்களும் ஓர் உதாரணம். 'நான் கடவுள்', 'ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற படங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகளைத் திருடி பிச்சையெடுக்க அனுப்பும் அவலம் குறைந்ததாகத் தெரியவில்லை!

இயேசு கிறிஸ்து என்ன மொழியில் பேசியிருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அந்த மொழியின் பெயர் அராமிக். தமிழ், ஹீப்ரூ, அரபி, சீனம், சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகளில் ஒன்று அராமிக். ஆனால், அந்த மொழி இன்று உலகில் சில ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது. அராமிக் மொழியின் இந்த நிலைமைக்குக் காரணம், அந்த மொழி பேசுபவர்களுக்கு என்று ஒரு தேசம் கிடையாது. ஒரு மொழி ஜீவித்திருப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, அரசு ஆதரவு. மற்றொன்று, மக்களால் பேசப்படுவது. இதில் எந்த ஒன்று இல்லாமல் போனாலும் மொழிக்கு ஆபத்து.

சம்ஸ்கிருத இலக்கியத்தைப் படிக்கும்போது எல்லாம் எனக்கு அராமிக் மொழியின் ஞாபகம் வரும். ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் மக்களின் மொழியாகவும் இருந்தி ருக்க வேண்டும். பிறகு, அரசு ஆதரவு இல்லாததால், அது பண்டிதர்களின் மொழியாகத் தேங்கியிருக்கலாம். சம்ஸ்கிருதம் வழக்கொழிந்துபோனதற்கு வேறு சில அரசியல்,சமூகவியல் காரணங்களும் உள்ளன.

ஆனால், என் கவலை எல்லாம், உலகின் மகத்தான இலக்கியப் பொக்கிஷங்களைக்கொண்டு இருக்கும் சம்ஸ்கிருதம் இப்படி வழக்கொழிந்துபோன தைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்கலாமா என்பதுதான். கடவுளின் அற்புதமான சிருஷ்டி பெண் என்றால், மனிதனின் அற்புதமான சிருஷ்டி மொழி. அப்படிப்பட்ட ஓர் அற்புதத்தை நாம் அழியவிடலாமா? மனித வாழ்வின் வரலாறு மொழியின் மூலமாகவே நம்மை வந்து அடைந்திருக்கிறது. சம்ஸ்கிருதத் துக்கு இணையான தொன்மைகொண்ட தமிழில்கூட, நாவல் என்பது ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஆங்கில இலக்கியத்தின் பாதிப்பினால்தான் நிகழ்ந்தது. ஆனால், சம்ஸ்கிருதத்தில் வாசவதத்தா என்ற நாவலை சுமந்து என்பவர் எழுதி யது ஐந்தாம் நூற்றாண்டில். ஆறாவது நூற்றாண்டில் தசகுமார சரிதம் என்ற நாவலை எழுதுகிறார் தண்டி. ஏழாவது நூற்றாண்டில் சம்ஸ்கிருதத்தின் புகழ்பெற்ற நாவலான காதம்பரியை எழுதுகிறார் பாண தத்தர்.

இவர்களில் தண்டி யார் தெரியுமா? நம் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். இவர்களெல்லாம் நம் பொக்கிஷங்கள். இவர்களை நாம் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், மொழிபற்றிய குறுகிய மனோபாவத்தினால் நாம் இவர்களைப் புறக்கணித்துவிட்டோம். ஆனால், வெளிநாட்டுக்காரர்கள் விடவில்லை. இந்த இலக்கியச் செல்வங்களை தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டுவிட்டார்கள். நாமோ நம்முடைய இலக்கியப் பாரம் பரியத்தைப்பற்றிய எந்த விழிப்பு உணர்வும் இல்லாமல் வெளி நாட்டுக்காரர்களின் நுகர்பொருள் கலாசாரத்தை (consumerism) மட்டும் சுவீகரித்துக்கொண்டு இருக்கிறோம்.

சம்ஸ்கிருதம் படிப்பதால் உண்டாகும் நன்மைகளில் ஒன்று இது: கஜூரஹோபற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறோம். அந்தப் பெயர் காஜர் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. உங்கள் காதலி யோடு அல்லது இளம் மனைவி யோடு கஜூரஹோ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவளிடம் கஜூர ஹோவின் பெயர்க் காரணத்தைச் சொல்லி, அவளிடம் இருந்து செல்லமான அடியை வாங்க லாம் அல்லவா? காஜர் என்றால் பேரிச்சை. பேரிச்சை மைதுனத்துக்கு நல்லது. மைதுனத்துக்காகவே கட்டப்பட்ட கோவில் தான் கஜூரஹோ.

காதலுக்கு தாஜ்மஹால். காமத்துக்கு கஜூரஹோ. காதலையும் காமத்தையும் நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியதைப்போல் வேறு எந்த தேசத்திலும் கொண்டாடியது இல்லை. ஆனால், இப்போது?

மனம் கொத்திப் பறவை! - 05
மனம் கொத்திப் பறவை! - 05
மனம் கொத்திப் பறவை! - 05
(பறக்கும்...)