The Fall of a Sparrow என்ற சுயசரிதை நூல், பறவை ஆய்வாளர்களின் பைபிள் என்று கருதப்படுகிறது. அந்த நூலின் தலைப்பே பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதுதான். மத்தேயு 10-ம் அதிகாரம், 29-ம் வசனம்: 'ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும், உங்கள் பிதா வின் சித்தம் இல்லாமல் அவற்றில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.' (சிட்டுக்குருவியின் மற்றொரு பெயர் அடைக்கலான் குருவி).
நமக்குத் தெரிந்தது எல்லாம் சிட்டுக்குருவி லேகியம்தான். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் பச்சை பச்சையாகப் பேசி எதையோ விற்பதையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதையும் என் பால்ய வயதில் பார்த்திருக்கிறேன். இம்மாதிரி லேகிய விவகாரங் களை ஆங்கிலத்தில் aphrodisiac என்பார்கள்.
சமீபத்தில் நான் பார்த்த ஒரு சீனப் படத்தில் வரும் உரையாடலைக் கவனியுங்கள். நாயகன் ஓர் ஓவியன். அவனிடம் காதலி கேட்கிறாள். 'நான் அமெரிக்கா போகிறேன். உனக்கு அங்கே இருந்து ஓவியம் சம்பந்தமாக ஏதாவது தேவையா?'
'அதற்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கிறது. வேண்டுமானால் வயாகரா மாதிரி ஏதாவது வாங்கி வா. காண்டாமிருகத்தின் கொம்பு நல்ல aphrodisiac என்று தெரிகிறது. அதை வாங்கி வாயேன்' என்கிறான் ஓவியன். அதற்கு அந்தப் பெண் சொல்லும் பதில், சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைவிட செக்ஸி என்பதால் இங்கே வேண்டாம்!
நாயகன் சொல்வது உண்மைதான். உலகில் 10 சிறப்பான வீரிய ஊக்கிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது காண்டாமிருகத்தின் கொம்பு. முதன்மையானது? மரியாதை! ஆம், காதல் ஜோடியில் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மரியாதைதான் காமத்துக்கான முதல் ஈர்ப்பாகச் சொல்லப்படுகிறது.
|