Published:Updated:

உயிர் மொழி! - 06

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

உயிர் மொழி! - 06

உயிர் மொழி!  - 06
உயிர் மொழி!  - 06
உயிர் மொழி!  - 06
உயிர் மொழி!  - 06
டாக்டர் ஷாலினி
உயிர் மொழி!  - 06

யற்கையின் அமைப்பில் மிருகங் களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதில்

யார் பிழைப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. Struggle for survival எனும் இந்தப் போட்டியில் அதிகம் சாப்பிடுவது, அதிகம் சம்பாதிப்பது, அழகு மிளிர்வது எல்லாம் வெற்றிக்கான காரணங்கள் இல்லை. அதிக எண்ணிக் கையில் மரபணுக்களைப் பரப்பிக்கொள்பவருக்கே வெற்றி. இந்த வெற்றியைப் பெறவேண்டுமானால், ஒவ்வொரு தாயும் தன் குட்டிகளுக்கு நல்ல ஜீன்களை (மரபணுக்களை) மட்டும் கொடுத்தால் போதாது. இந்த மரபணுக்களைவைத்து சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு தொடர்ந்து ஆட்டத்தில் ஜெயிப்பது எப்படி என்ற வாழ்வியல் உத்திகளையும் கற்றுத்தர வேண்டும். இதை அறிவியலில் 'மீம்' (meme) என்ற சொல்லால் குறிப்பிடுவோம்.

உயிர் மொழி!  - 06

ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் மரபணு மட்டும் பரப்பப்படுவது இல்லை. மதம், மொழி, உடை, கலாசாரம், உணவு என்பதைப்பற்றிய பல கருத்துக்களும் பரப்பப்படுகின்றன. இந்தக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு மீம். இப்படி ஆண்களுக்கு வேறு மீம்ஸ்களையும், பெண்களுக்கு வேறு மீம்ஸ்களையும் கற்பித்தாக வேண்டும்!

பொதுவாக, பெண் எப்போதும் துணையைத் தேடிப் போகாது. தானாக வரும் துணையோடு சேர்வது மட்டும்தான் அதன் வேலை. ஆனால், ஆண் ஒரு பெண்ணைத் தேடிப் போயாக வேண்டும். அதுவும் ஏதோ ஒரு பெண்ணோடு சேர்ந்துவிட முடியாது. தன் இனத்தைச் சேர்ந்த பெண்ணோடு கூடினால் மட்டும் தானே குட்டி பிறக்கும்? ஆக, தன்னினம் என்பது எது? அதில் பெண் என்றால் எப்படி இருப்பாள்? அவள் உடலை எப்படிக் கையாள வேண்டும் என்பது எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குட்டி வெற்றிகரமாகத் தன் மரபணுக்களைப் பரப்பிக்கொள்ள முடியும்.

அதேபோல, பெண் குட்டிக்குப் பிள்ளை வளர்ப்பு, பராமரிப்பு, வேட்டுவ வித்தைகள், அதை அடுத்த தலை முறைக்குச் சொல்லிதரும் உத்திகள் ஆகிய மீம்ஸ்களை தாய் சொல்லித்தர வேண்டும். இதை எல்லாம் அவள் சொல்லித்தரத் தவறினால், அவளது குட்டிகள் மரபு அணுக்களைப் பரப்பாது. அப்புறம் வம்சம் பெருகாது. இந்த துரதிர்ஷ்டம் நிகழக் கூடாது என்றுதான் எல்லா ஜீவராசிகளிலும் தாய் மிக உஷாராக இயங்குகிறது. ஆண் குட்டி பருவம் அடையும் பிராயம் வந்ததுமே, அதைத் தன் கூட்டத்தைவிட்டு வெளியேற்றி, வெளிப் பிரதேசப் பெண்களைத் தேடிப் போகத் தூண்டுகிறது. இதனால் புதுப் புது பிரதேசங்களில் இந்தத் தாயின் மரபணுக்களைக் கொண்டுசென்று பரப்பி, அதிக மகசூல் பெற்றுத் தருகிறது இந்த ஆண் குட்டி. ஆக, பிள்ளைப்பிராயம் முழுக்கக் குட்டியைத் தன்னுடனேவைத்து வித்தைகளைச் சொல்லித்தரும் தாய், அது பருவம் அடைந்துவிட்டால், தான் விலகிக்கொண்டு அதைச் சுயேச்சையாக இயங்க அனுமதிப்பதன் மூலம் தன் மரபணுக்களைப் பரப்பிக்கொள்கிறாள். இதுதான் ஒரு தாயின் இயல்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் காட்டுவாசியாக வாழ்ந்தபோது, மனிதத் தாயும் மற்ற விலங்கினத் தாயைப்போலத்தான் செயல்பட்டாள். அதனால், தன் குட்டி... காடு, மலை, பள்ளத்தாக்கு என்று பிழைப்பு/துணை தேடிப் போவதை அவள் தடுக்கவில்லை. மாறாக ஊக்குவித்தாள். இன்றும் காட்டுவாசிகளாக வாழும் பழங்குடி மனிதர்களில் இப்படி மகனை அம்மாவிடம் இருந்து பிரித்துக் காட்டு வாழ்வுக்குத் தயார்ப்படுத்தும் சடங்குகள் நடப்பது உண்டு. இதை coming of age ceremony (வயதுக்கு வருதல் சடங்கு) என்போம்.

ஆப்பிரிக்கப் பழங்குடி மனிதர்கள் பருவ வயதை அடைந்த ஆண்களை அம்மாவிடம் இருந்து பிரித்துக்கொண்டு போய், ஒரு தனிக் கூடாரத்தில் அடைத்து, அந்தப் பையன்களின் தோலைச் சிறு கத்தியால் கீறி காயங்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த வலி, வேதனை, இதனால் ஏற்படும் இன்ஃபெக் ஷன், அது ஏற்படுத்தும் காய்ச்சல், தனிக் கூடாரத்தின் இருட்டு... எல்லாவற்றையும் தாண்டி அந்தப் பையன் பிழைத்தால் அவன் காட்டு வாழ்வுக்கு உகந்தவன். அதுவே குழந்தை மாதிரி அம்மாவைக் கட்டிக் கொண்டு அவளைவிட்டுப் பிரிய மறுத்தாலோ, உடல் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாதியில் ஓடிப்போனாலோ, உயிர் பிழைக்கத் தவறினாலோ, அவனை முழு ஆண் என்று ஏற்க மாட்டார்கள்.

கிட்டத்தட்ட இதேபோன்ற மரபு, தமிழ்நாட்டிலும் அந்தக் காலத்தில் இருந்து வந்ததை நம் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. தாயைவிட்டுப் பிரிந்து போர், வேட்டை, வியாபாரம், கல்வி, துறவு என்று வெளிப் பிரதேசங்களுக்குப் போன ஆண்கள்தான் நிஜ ஆண் கள் எனக் கருதப்பட்டார்கள். அதிலும் தன் உடம்பில் காயமே இல்லாத ஆண்களை முழு ஆண்கள் என்று ஆதித் தமிழர்கள் ஏற்றுக்கொண்டது இல்லை. அதனால் பிறந்த சின்ன குழந்தை ஏதோ காரணத் துக்காக இறந்துவிட்டால்கூட, அதை அப்படியே புதைக்காமல் அந்த குட்டி உடம்பை வாளால் கீறி அவனை 'முழுமைபெற்ற ஆணாக' மாற்றிப் புதைத் தார்கள். அந்தக் காலத் தமிழ்ப் பெண்களும் ஆண் குழந்தைகளைத் தங்களின் தனிச் சொத்தாகவோ, முதுமைக் காலத்துக் காப்பீடுகளாகவோ கருதவில்லை. புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் கடமைகளும் எதிர் பார்ப்புகளும் என்ன என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரியப்படுத்துகிறாள்.

'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!'

ஆக, அந்தக் காலத்துத் தமிழ்த் தாய் தன் மகனிடம் எதிர்பார்த்தது எல்லாம், காளை மாதிரி போய் போரில் யானைகளைத் தோற்கடித்து, வென்று வரும் வீரத்தை மட்டுமே! அப்போ மரபணுக்கள் என்கிறீர்களா? இவ்வளவு வீரம் இருக்கும் வெற்றியாளன் மரபணுக்களைப் பரப்பாமலா இருப்பான்?!

உயிர் மொழி!  - 06

இந்தக் காலத்துத் தமிழ்த் தாய் எப்படி இயங்கு கிறாள் என்பதற்கு இந்தப் புதுக் கவிதை ஓர் உதாரணம். மழையில் பையன் நனைந்துவிட்டானாம். 'ஏன் குடை எடுத்துட்டுப் போகலை, சளி பிடிக்கப் போகுது, ஜுரம் வரப்போகுது, கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லை' என்று அப்பா, அண்ணா, தங்கை எல்லோருமே பையனைத் திட்டினார்களாம். அம்மா மட்டும், 'என் பையன் வெளியே போற நேரத்துலயா வந்து தொலைக்கணும் இந்த சனியன் பிடிச்ச மழை' என்று மழையைத் திட்டினாளாம். என்னே தாய்ப் பாசம்? என்பதாக அமையும் இந்தத் தற்கால புதுக் கவிதை.

இந்தக் கவிதையில் வரும் அம்மா, பையனுக்குப் புத்தி சொல்ல மாட்டாள். அவனுடைய தப்பு என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும், பிறர் மீது பழி போட்டு தன் பிள்ளைக்குப் பரிந்து பேசுவாள். அவனுக்கு வீரத்தைப் புகட்டாமல், அவனை வெறும் குழந்தையாகவே கடைசி வரை பாவிப்பாள். இவை எல்லாம்தான் ஓர் ஆதர்ச தாய்க்கு உண்டான அடையாளங்கள் என்று இந்த புதுக் கவிதை சொல்கிறது.

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள கால இடைவெளி 2,000 ஆண்டுகள் மட்டுமே. அதற்குள் தமிழ்த் தாயின் சிந்தனையும் செயல்பாடும் இப்படித் தலைகீழாக மாறிவிட்டனவே, ஏன்?

உயிர் மொழி!  - 06
உயிர் மொழி!  - 06
(காத்திருங்கள்)