காரணம், அந்த உலகத்தோடு நட்பு பாராட்ட நமக்கு விருப்பம் இல்லை. உண்மையில், சாதாரணமான பழைய மனுஷர்களின் நட்பு, உலகை உண்மையாகவும் ஆழமாகவும் பார்க்க உதவி செய்கிறது. அவர்கள் கருவிகளின் துணை இல்லாமல் சவால்களை எதிர்கொண்டவர்கள், ஆயுதங்களின் துணை இல்லாமல் காரியம் சாதித்தவர்கள். நாம் கால்குலேட்டரிலும் கம்ப்யூட்டரிலும் தேடும் விஷயங்களை அனுபவமாகக் கையில் வைத்திருப்பவர்கள்.
'நாம் விரும்புகிற பாணியில் அதை வெல்வதற்கான பழக்கமும் அனுபவமும் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். நாம் எந்த விஷயத்தில் எல்லாம் சிறந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ, அந்த விஷயங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல், சகஜமாக அதை வாழ்வியலில் பயன்படுத்தியவர்கள்.
குறிப்பிட்ட வயது வரை பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும். பிறகு, நாம் சொல்வதைப் பெரியவர்கள் கேட்க வேண்டும் என்ற 'மடைமாற்று' வேலைதான் இங்கு தொடர்ந்து நடக்கிறது. பெரியவர்கள் உலகத்தோடு நமக்கு நட்பு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை உள்வாங்கிக்கொள்கிற அளவுக்கு நமக்குப் பொறுமை இல்லை... நேரமும் இல்லை.
ஒரு தனி மனிதனின் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி இவை இரண்டுமே அனுபவ அறிவை, அறிவியல்ரீதியாகச் செயல்படுத்துவதன் மூலமே நடக்கின்றன என்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சொல்கின்றன. இந்த அனுபவ அறிவு சாதாரண மனிதர்களிடம் இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.
ஆழ்ந்து யோசித்துப் பார்க்கலாம். நம்மைவிட வயது முதிர்ந்த எத்தனை சாதாரண மனிதர்களிடம் நமக்கு நட்பு இருக்கிறது. பெரியவர்களோடு நட்பு பாராட்டுவது கஷ்டமாகத் தெரியலாம். ஓர் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி சில கஷ்டங்களோடு நடந்தால் என்ன?
அப்படி நட்பு பாராட்டி ஆகப்போவது என்ன? நிறைய ஆகும். நீங்கள் யோசித்திராத பல பரிமாணங்கள் அது சொல்லித்தரும். நெருக்கடி நிலைமைகளை நிர்வாகம் செய்துகொள்கிற அறிவைத் தரும். சமூக விழுமியங்களின் உண்மைகளைச் சொல்லும். இதைக் கற்றுத்தருகிற அந்த வயதில் முதிர்ந்த மனிதர் மாபெரும் ஞானியாகவோ, உலகறிந்த ஒருவராகவோதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கணினிக்குள் தலையை நுழைத்துக்கொண்டு உலகத்தைத் தேடுகிற நாம், பெரியவர்களின் நட்பிலும் அதைத் தேடலாம். அது வேறு ஓர் அனுபவம். வாழ்க்கைப் பாடம்... பொசுக்கென்று சோர்ந்துபோகிற மூளைக்கும் மனசுக்கும் ரத்தம் பாய்ச்சுகிற பாடம்.
காலையில் வாக்கிங் போகிறபோது எதிரில் வேட்டியை மடித்துக்கொண்டு, வெள்ளை பனியனோடு நடந்து போகிற அந்தச் சாதாரண பெரிய மனிதரிடம் நட்பாகச் சிரியுங்கள்... அவரை நண்பராக்கிக்கொள்ளுங்கள். பெரியவர்கள் பெரியவர்களோடும் இளைஞர்கள் அதே வயதினரோடும் சேர்ந்து பயணித்தால் மட்டும் அறிவுப் பரிமாற்றம் எப்படி நடக்கும்?
'There must be an expiry date for blaming elders' என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். பெரியவர்களைக் குறை சொல்கிற நேரத்தை, அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்வதற்குச் செலவிட முயற்சிக்கலாம். அது இன்னும் பல வாயில்களைத் திறக்கும்.
பத்மினியம்மாவை டி.வி-யில் பார்க்கும்போது எல்லாம் தோன்றுகிறது 'பெரியவர்களின் உலகம் வேறு' என்று!
|